ஊதுபத்தி தொழிலில் சொந்த வீடு



யாழ்ப்பாணம் தாவடி தெற்கு சோமர் வீதியில்  ஒருபரப்பு காணி வாங்கி சொந்தமாக வீடும் கட்டி மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியிருக்கிறார் அரியரட்ணம்  யூளின் கிளெடன். அவர் காணி வாங்கி வீடுகட்டியது ஊதுபத்தி (சாம்பிராணிக்  குச்சி) தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் கிடைத்த வருமானத்தில் தான் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும்.

பொதுவாக இப்படியான தொழில்கள் குறைந்த வருமானம் தரும் தொழில்கள் என்றாலும் இவர் மூன்று பெண்களுக்கு தொழில்வாய்ப்பளித்து இருக்கிறார். அதில் இருவர் இவரின் மனைவியோடு கூடப் பிறந்த அக்கா தங்கைமார். அவர்களின் குடும்பத்தின் வருமானத்துக்கும் ஒத்துழைப்பாக இருக்கிறார்.

எம் தேசத்தில் சுயதொழில் முயற்சியாளர்கள் குறைந்து கொண்டே செல்கின்றார்கள். இந்நிலையில் ஏற்ற இறக்கம் கொண்ட ஊதுவத்தி தயாரிப்பு தொழிலில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார். சிறியரக மோட்டார் சைக்கிள் ஒன்றில் எல்லா இடமும் சுழன்றடித்து விற்பனையை கவனித்து வருகின்றார்.  பல்வேறு உடலியல்சார்ந்த பிரச்சினைகளோடு  சளைக்காமல் இயங்கி வருகிறார்.

அவரிடம் பேசியதில் இருந்து தெரிந்து கொண்டவை:

நான்கு வயதில் கண்பார்வை குறைவடைந்து அதற்கு சிகிச்சை செய்து தலையில் ரியூப் வைத்தார்கள். இதனால் கண்பார்வை தெரிகிறது. 15 வயதிலேயே போலியோ வந்து கால்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
உடல்நிலை தளர்ந்தாலும் மனதைத் தளரவிடாமல் முதலில் திருமணப் பந்தல் போடும் வேலையை செய்தேன்.

பின்னர்  2003 ஆம் ஆண்டளவில் மோகன் என்பவர் தான் எனக்கு ஊதுவத்தித் தொழிலை அறிமுகப்படுத்தினார். அவரிடம் நாங்கள் ஆறு பேர் ஊதுவத்திகளை வாங்கி விற்பனை செய்து வந்தோம். அவரது ஊதுவத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் 10 க்கும் மேற்பட்ட பெண்கள் செய்து வந்தனர். நான் இன்றைக்கு வளர்ந்ததே மோகன் ஐயாவினால் தான்.

2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தேன். எனக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவருக்கு 8 வயது, மற்றையவருக்கு 6 வயது. ஊதுபத்தித் தொழிலுக்கு மனைவியும் மிகுந்த ஒத்துழைப்பாக இருக்கிறார். இப்போது நானே சொந்தமாக சுதுமலை தெற்கு மானிப்பாயில் உள்ள எனது மனைவியின் சகோதரியின் வீட்டில் வைத்து தான் ஊதுவாத்திகளை தயாரித்து வருகிறேன். ஊதுபத்திகளுக்கு வாசனை சேர்க்கும் பணியை அநேகமாக நான் தான் செய்வேன். அது எங்கள் தொழில் ரகசியமாகவும் இருக்கிறது. ஜஸ்மி தயாரிப்புக்களாக தான் சந்தைப்படுத்தி வருகின்றேன்.


ஆரம்பத்தில் வியாபாரம் ஓரளவாகத்தான் இருந்தது. படிப்படியாக வியாபாரம் நல்ல நிலைக்கு வர ஒரு பரப்பில் சொந்தமாக காணியும் வாங்கி 2016 ஆம் ஆண்டளவில் வீடு கட்டத் தொடங்கினேன். ஒரு நாளைக்கு 13000 ரூபாவுக்கு மேலும் விற்பனை செய்திருக்கிறேன். நானும் சேர்ந்து உழைத்து தான் மூன்று மாதத்தில் வீடு கட்டி முடித்தேன்.

கிழமையில் நான்கு நாட்கள் யாழ்ப்பாணம் முழுவதையும் பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியாக கொண்டு சென்று விநியோகம் செய்வேன். இங்கே பொதுவாக இந்திய ஊதுவத்திகளுக்குத்தான் மோகம் அதிகம். வாடிக்கையாளர்கள் சில இந்தியன் ஊதுபத்திகளின் பெயர்களை சொல்லி தான் கடைகளில் கேட்பார்கள். இதனால் எங்கள் உற்பத்திகள் தரமாக இருந்தாலும் விளம்பரப்படுத்தல் மற்றும் விநியோக குறைபாடுகளினால் ஓரளவுக்கு மேல் தொழிலில் மேலெழ முடியவில்லை.

நான் விற்கும் ஊதுபத்தி பக்கெட் இப்படித்தான் இருக்கும். ஒரு ஊதுவத்தி செட் இல் ஆறு குச்சிகள் இருக்கும். 12 செட்  கொண்ட ஊதுபத்தி பக்கெட் ஒன்றினை  120 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். ஓரளவு தொழில் நன்றாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் 70 முதல் 100 பெட்டிகள் வரை விற்றிருக்கிறேன்.

ஆரம்பத்தில் அரலியா என்கிற பெயரில் பெட்டியில் அடைத்து சாம்பிராணிக் குச்சிகளை விற்பனை செய்தேன். ஒரு பெட்டிக்கு இப்போது 4 ரூபாய் முடிகின்றபடியால் இப்போது பெட்டி அடிக்காமல் நேரடியாக விற்பனை செய்கின்றேன். எமது ஊதுபத்திகளுக்கு பல்வேறு வாசனைகளையும் சேர்த்து விற்பனை செய்வோம். இப்போது ஊதுபத்திக்கு வாசம் சேர்க்கும் பொருள்களின் விலையும் அதிகரித்து விட்டது. இதனால் தொடர்ந்தும் தொழிலை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. என்கிறார் கவலையுடன்.

இவரின் மனைவியும் மருந்தகங்களில் மருந்துகள் கொடுக்கும் சிறியரக காகிதப்பைகளைத் தயாரித்து வருகிறார். அதன் விற்பனை வாய்ப்பும் ஓரளவு இருப்பதாக கூறுகின்றார். இப்போது சரக்குத் தூள் அரைத்து விற்கும் தொழிலை ஆரம்பிப்பதற்கான ஆயத்த நிலையிலும் உள்ளார்.

நாங்கள் கஷ்ட்டப்பட்டு வேலை செய்தாலும் எங்களது பிள்ளைகளை நன்றாக படிப்பித்து சமூகத்தில் நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே எங்களின் ஒரே ஆசை என்கின்றனர் யூளின் தம்பதியினர்.

துருவன் 
நிமிர்வு ஜூலை 2019 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.