தமிழ் பொது வேட்பாளர்


 ஆசிரியர் பார்வை

சிங்கள மக்கள் தங்கள் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் திருவிழா களை கட்டத் தொடங்கி விட்டது. ஏன் சிங்கள மக்கள் தங்கள் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டதற்கான காரணம் முக்கியமாக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மூன்று பிரதான வேட்பாளர்களுமே தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்கு சரியானதொரு தீர்வை முன்வைக்க தயாரில்லை.
தமிழ்மக்கள் காலம் காலமாக மாறி மாறி சிங்கள கட்சிகளுக்கு வாக்களித்து சாதித்தது என்னஎதுவும் நடக்கவில்லை. இறுதியாக நல்லாட்சி அரசு என்று சொல்லப்படும் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது மட்டுமல்லாமல் பல தடவைகள் அரசு கவிழ்ந்து விடாமல் காப்பாற்றிய கூட்டமைப்பினால் அரசியல் கைதிகளை கூட விடுதலை செய்ய முடியவில்லை.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சொற்பமான இராணுவத்தினர் இன்று சிறைகளில் வாடுகின்றனர். அவர்களையெல்லாம் தான் பதவியேற்றவுடன் விடுவிப்பேன் என ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தேர்தல் மேடையில் பகிரங்கமாகவே அறிவிக்கிறார். ஆனால் எங்கள் தமிழ் அரசியல் தலைமைகளோ அரசியல் கைதிகளின் விடுதலைக்கு என்ன முயற்சிகளை எடுத்தார்கள் என்றால் ஒன்றும் இல்லை.
ஒன்றைத் திரும்பத் திரும்ப செய்துகொண்டு வித்தியாசமான விளைவை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்என்று விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொல்லியிருக்கிறார். இந்த ஜனாதிபதி தேர்தலிலாவது தமிழ் மக்கள் மாற்றி யோசிப்பது அவசியாமாகிறது.
இந்நிலையில் தான் தமிழ்மக்களிடையே பொதுக் கருத்தை ஏற்படுத்தி பொதுவான வேட்ப்பாளர் ஒருவரை நியமனம் செய்யும் முயற்சிகளில் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் ஈடுபட்டன.  ஆனால் அவர்களின் முயற்சிகள் காலம் தாழ்ந்து இடம்பெற்றமையால் பொது வேட்ப்பாளர் நியமனத்தை செய்ய முடியவில்லை. ஆனால்இங்கே பலரும் உரையாடல்கள் நடாத்திக் கொண்டிருக்க கட்டுப்பணத்தை செலுத்திவிட்டார் சிவாஜிலிங்கம். 
தமிழர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் வெல்லது சாத்தியமற்றது என்பது எல்லோருக்குமே தெரிந்தது.  தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்பதனால் தமிழர்கள் தமது வாக்குகளை வீணடிக்கிறார்கள் என்று பலரும் கூறக்கூடும்.  ஆனால் தமிழ் மக்கள் இதுவரை ஆதரவளித்த சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் இதுவரை தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பாக செய்ததுஎன்ன என்பதற்கு காத்திரமான பதிலை அவர்களால் வழங்க முடியாது என்பதே உண்மை.
பொது வேட்ப்பாளர் ஏன் அவசியம் எனில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக சிந்திப்பதனை உறுதிப்படுத்த வேண்டும்.தமிழ்மக்களின் வாக்குகள் சிதறாமல் பலமான திரட்சியாக மாற்றப்படுதல் மிக அவசியமானது.  தமிழ் பொது வேட்ப்பாளரை நிறுத்தி கணிசமான வாக்குகளை பெறும் பட்சத்தில் சிங்களத்துக்கும் சர்வதேசத்துக்கும் ஒரு தெளிவான செய்தியை சொல்ல முடியும்.
முதலாவது தமிழ் மக்கள் சிங்கள தலைவர்களை இனியும் நம்பத் தயாரில்லை. இரண்டாவதுநாங்கள் ஒரு தேசமாக சிந்திக்கிறோம்.
இன்னொரு பக்கம் சிங்கள தலைவர்கள் இருவரும் 50 வீதத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றால் ஜனாதிபதியாக முடியாது. அந்நேரம் தமிழர்களின் இரண்டாம் தெரிவு வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற வாக்குகளாக அமையும்.  இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சிங்கள வாக்குகளை மட்டும் வைத்துக்கொண்டு ஜனாதிபதியாக முடியும் என்று கோதபாய ராஜபக்ச நம்புகிறார். அவரின் கணக்கைப் பிழைக்க வைக்க எண்ணிக்கையில் குறைந்துள்ள தமிழ் மக்களிடமுள்ள ஆயுதம் தமிழ் வேட்பாளர்.  இந்த தேர்தலைப் பகிஸ்கரிக்காமல் தமிழ் மக்களால் சிங்கள இனவாதிகளுக்கு ஒரு செய்தியை சொல்லவதற்கு இந்த தேர்தலை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டுமானால் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்பதே எம் முன்னால் உள்ள ஒரேயொரு தெரிவு.
இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் ஒரு தீர்மானிக்கும் சக்தி என்பது அப்போது வெளிப்படும். அதற்கு முதலில் தேவை தமிழர்கள் கட்சி நலன்களையும் தாண்டி ஒரு தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்பது.  அந்த வகையில் தமிழ் மக்கள் தமிழ் வேட்பாளர் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பது ஊக்குவிக்கப் படவேண்டும்.இங்கே சிவாஜிலிங்கம் தகுதியான வேட்பாளரா என்பது முக்கியமல்ல.  அவருக்கு வாக்களிப்பதனூடாக தமிழ் மக்கள் சொல்ல வரும் செய்தி என்ன என்பதே முக்கியமானது.

-செ.கிரிஷாந் -
நிமிர்வு ஒக்டோபர்  2019 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.