உதிரம் உறைந்த மாணவப் படுகொலைகள்! நாகர்கோவில்




1948 ஆம் ஆண்டு பிரித்தானியர்களிடம் இருந்து இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்பட்ட நாளில் இருந்து, இலங்கைத் தமிழர்கள் தமது சுதந்திரத்தை இழந்துவிட்ட நாளாகவே இருந்து வருகின்றது. இனரீதியான ஒடுக்கு முறைகளும், தமிழினப்படுகொலைகளும் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் தந்தை செல்வா அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்கள், ஒப்பந்தங்கள், சிங்கள ஆட்சியாளர்களுடனான இணக்க அரசியல்கள் எல்லாமே பேரினவாத அரசுகளினால் திட்டமிட்டு முறியடிக்கப்பட்ட நிலையில் 1976 ஆம் ஆண்டு  ஆயுதப்போராட்டத்தை முகிழ்க்க வேண்டிய நிலைக்குத் தமிழ் இளைஞர்கள் தள்ளப்பட்டனர். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு எதிராகப் பல படுகொலைகள் இடம்பெற்றன.

1957 ஆம் ஆண்டு   சிங்களக் காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட இங்கினியாகலைப் படுகொலைகளில் இருந்து,    இனஅழிப்பு நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரச படைகளும், இந்தியப் படைகளும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும்  காலத்திற்குக் காலம் மேற்கொண்டு வந்த நிலையில், மிகக் கொடூரம் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் வகையில் வடமராட்சி கிழக்கில் உள்ள நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது 1995 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22 ஆம் திகதி புக்காரா விமானங்களில் இருந்தும்  குண்டுகள் வீசப்பட்டன. அன்று கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருந்த மாணவர்களின் குருதி தோய்ந்த உடல்களும்,அவர்களின் செந்நிறமான வெள்ளைச் சட்டைகளும், மரங்களிலும், ஆலயச் சுவர்களிலும் ஒட்டிக் கொண்டிருந்த பிள்ளைகளின் தசைகளும் இன்றும் எமது நெஞ்சை உலுப்பிக் கொண்டிருக்கின்றன.


யாழ்ப்பாண  மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கில் உள்ள  நாகர்கோயில் என்ற கடலோரக் கிராமத்து மக்கள் பிரதானமாகக் கடற்றொழிலை செய்து வருகின்றனர்.  தெற்குப் புறமாக உள்ள தரவைப் பகுதி மக்கள் விவசாயத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நாகர்கோயில் கிராமத்தில் உள்ள  குழந்தைகள்  கற்பதற்காக1956ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பதினைந்தாம் திகதி  திரு.வி.நாகநாதன் அவர்களின் முயற்சியினால் நாகர்கோயில் வடக்கில்  நாகர்கோயில் நாகேஸ்வரா வித்தியாலயம் என்ற  பெயரில் ஓர் ஆரம்பப் பாடசாலை  அரசஉதவியினால் அமைக்கப்பட்டது. பின்னர் இப்பாடசாலை 1967  ஆம் ஆண்டில்  நாகர்கோயில் மகாவித்தியாலமாகத் தரம் உயர்த்தப்பட்டு, க.பொ.த. சாதாரண தரம் வரை மாணவர்கள் கற்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.

1990ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக பலாலி மற்றும் மயிலிட்டிக் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் சுமார் அறுநூறு குடும்பங்கள் நாகர்கோயிலிற்கு இடம்பெயர்ந்தன. அதனைத் தொடர்ந்து  நானூறு மாணவர்களைக் கொண்டிருந்த பாடசாலையின் மாணவர் தொகை எழுநூறாக உயர்ந்தது  .


அதேவேளை  1991ஆம் ஆண்டு ஆனையிறவுப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற உக்கிரமான மரபு வழிப் போரின் காரணமாக   தொடர்ச்சியாக ஏற்பட்ட விமானக் குண்டு வீச்சுக்கள் மற்றும் கடலில் இருந்தும் ஏவப்பட்டுக்  கொண்டிருந்த் பீரங்கிக் குண்டுத் தாக்குதல்களினால், வெற்றிலைக்கேணி ,மருதங்கேணி, ஆழியவளை , கட்டைக்காடு போன்ற கிராமங்களைச் சேர்ந்த  பல நூற்றுக்கணக்கான மக்களும் இடம்பெயர்ந்து நாகர்கோயில் பிரதேசத்திலேயே  தஞ்சமடைந்தனர். இதனால் வழமையாக உள்ள மக்கள் தொகையைவிட மிக அதிகளவிலான மக்கள் நாகர்கோயிலில் வந்து குடியேறத் தொடங்கினர். இதனால் 1993ஆம் ஆண்டுக்குப் பின்னர்,  மாணவர்களின் எண்ணிக்கை 830 ஆக அதிகரித்தது. அதேவேளை ஆசிரியர்களின் தொகையும்  இருமடங்காக அதிகரித்திருந்தது.

 1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் இருபத்தோராம் திகதி வடமராட்சியின் பல பாகங்களுக்கும் பலாலியிலிருந்தும்  இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலையும், விமானங்களில் இருந்தும் குண்டுகளையும் வீசி நாகர் கோயில் பிரதேசத்தின் மீது  கோரமான தாக்குதல்களை  மேற்கொண்டனர். அதனை அடுத்து மறுநாளும்  இருபத்திரண்டாம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு மக்கள் அச்சத்துடனும், பீதியுடனும் இருந்த நேரத்தில், வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள கடலோரக் கிராமங்களான   மணல்காடு, நாகர்கோயில், செம்பியன்பற்று, கற்கோவளம் பகுதிகளில் இடம்பெற்ற புக்காரா விமானங்களின் குண்டுத்தாக்குதல்களில், ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் பலர்  படுகாயமடைந்தனர்.

மணல்காட்டுப் பகுதியில் இருந்த கத்தோலிக்க தேவாலயமும் பலத்த சேதமடைந்தது. குண்டுத்தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அந்த இடத்தை நோக்கி பலாலியில் இருந்து எறிகணைத் தாக்குதல்களும் இடம்பெற்றுக் கொண்டே இருந்தன. அன்றைய தினம் காலையில் இருந்தே  மேற்கொள்ளப்பட்ட  விமானக் குண்டு வீச்சுக்களினால்,  வடமராட்சி கிழக்கில் உள்ள  பிரதேசங்கள் பதற்றமாக இருந்தபோதும், அந்தப் பிரதேச மக்கள்   கல்வியின் மீது  கொண்ட  ஆர்வத்தின் காரணமாக அன்றும்  வழமை போல தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

 அன்று  வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் இடம்பெற்ற இறைவழிபாட்டைத் தொடர்ந்து நற்சிந்தனை இடம்பெற்றது . ஏழாம் ஆண்டில் கல்விகற்றுக் கொண்டிருந்த நவரத்தினசாமி உமாதேவி தனது இனிய குரலில் அன்றைய நற்சிந்தனை உரையை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அதிபரின் உரைமுடிந்ததும், மாணவர்கள் தமது  வகுப்பறைகளுக்குச் சென்று கல்விச்செயற்பாட்டை மேற்கொண்டிருந்தனர். ஆசிரியர்களும் மிகவும் உற்சாகமாகக் கற்பித்துக் கொண்டிருந்தார்கள். அந்த அமைதியான சூழலைக் குழப்பும் வகையில், நாகர்கோயில் வான்பரப்பிற்குள் பலத்த இரைச்சலுடன் இலங்கை விமானப்படையின் இரண்டு புக்காரா விமானங்கள் பிரவேசித்தன. விமானங்களின் இரைச்சலினால், நாகர் கோயில் கிராமமே ஒருகணம் அதிர்ந்தது.


அந்தநேரம் வகுப்பறைகளில் இருந்து கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்கள் அதிர்ந்துபோய் என்னசெய்வதென்றே தெரியாத நிலையில் நாலா புறமும் அலறித் துடித்தபடி சிதறி ஓடிக் கொண்டிருந்தனர். அந்தநேரம்  நாகர்கோயில் வானைச் சுற்றி வந்த இரண்டு புக்காரா விமானங்கள், பாடசாலை என்று தெரிந்த பின்னரும் கூட அங்கே வெள்ளைச் சட்டையுடன் வெண்புறாக்கள் கூட்டம் போல் காட்சி அளித்த மாணவர்கள் மீது அடுத்தடுத்து எட்டுக் குண்டுகளைப் பொழிந்து தள்ளின.

புக்காரா விமானங்களில் இருந்த விமானப் படையினர்  பாடசாலையின் மீதும், அயல் பிரதேசங்களின் மீதும்  தொடர் குண்டுகளை வீசியதானால், அப்பிரதேசம் எங்கும் கரும் புகைமண்டலமாகக் காட்சி அளித்தது.

22.09.1995 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது சிறிலங்கா விமானப்படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான கொடூரமான இந்த விமானத் தாக்குதலில் 21 மாணவர்கள் உடல் சிதறிக் கொல்லப்பட்டனர். வெள்ளைச் சீருடையில் இரத்தம் தோய்ந்த நிலையில் உருக்குலைந்து உடல் சிதறி பலியான பிள்ளைகளைக் கண்கொண்டு பார்க்கமுடியாத அங்கிருந்தவர்கள் அவசரஅவசரமாகப் பாரிய குழிகளை வெட்டி, அதற்குள் ஒன்றின் மேல் ஒன்றாக உடல்களைப் போட்டு மண்ணால் மூடிவிட்டனர். இவர்களில் 12 பிள்ளைகள் 6 வயதும் 7 வயதும் உடையவர்கள். இவர்களுடன் 3 பொது மக்களும் கொல்லப்பட்டதுடன், 35 மாணவர்களும், 32 பெற்றோர்களும் படுகாயமடைந்தனர்.

புக்காரா  விமானங்களின் இரைச்சலின் மத்தியில்  பதற்றத்தில் பயந்து சிதறி ஓடிய சில மாணவிகள் சிலரின்  நீண்ட தலைமுடிகள்  பாடசாலை வளவைச் சுற்றிப்போடப்பட்டிருந்த முள்ளுக் கம்பிகளுக்கிடையில் சிக்கியதால் ஓடமுடியாமல் சிக்குண்டிருந்தனர். அவர்கள் இரத்தம் பீறிட்ட நிலையில் முள்ளுக் கம்பிகளுக்கிடையில்  தொங்கியபடி இறந்து கிடந்தனர். பல மாணவர்களின் சிதைந்த உடல்களின் தசைகள் அருகில் உள்ள ஆலயத்தின் சுவர்களின் மீதும், அங்கிருந்த ஆலமரத்தின் மீதும் ஒட்டிப் போய் இருந்தன.அவர்கள் வைத்திருந்த  புத்தகப் பைகள்  இரத்தத்தினால் தோய்ந்து செந்நிறமாகக் காட்சி அளித்தபடி அங்குமிங்கும் சிதறிக் கிடந்தன.

குண்டு வீச்சு நிகழ்ந்த அந்த ஒரு கணத்திற்குள் நாகர்கோயில் மகாவித்தியாலயம் பிணக்காடாகக் காட்சி அளித்தது. இந்தத் தாக்குதலில் காயப்பட்ட மாணவர்களையும், பொதுமக்களையும் சிறிது தூரத்தில் உள்ள அம்பன் வைத்தியசாலையிலும், பருத்தித்துறை மந்திகை அரசினர் வைத்தியசாலையிலும் கொண்டுபோய் அனுமதித்திருந்தனர். .இதில் 10 வயது மாணவியான இரஞ்சித்குமார் ரஜிதா  இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அந்தநேரம் போக்குவரத்துச் சேவைகளோ அல்லது மோட்டார் வண்டிகளோ இல்லாத ஒரு அவல நிலையில் காயப்பட்டவர்களை  உழவு இயந்திரங்களிலும், மாட்டு வண்டில்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் ஏற்றியபடியே வைத்தியசாலைகளுக்குக் கொண்டு சென்ற அந்தக் கொடூரமான காட்சி உலகின் வேறு எங்குமே நடந்திருக்க முடியாது.

இந்தக் கொடூரமான தாக்குதல்களைத் தொடர்ந்து  அருகில் உள்ள வைத்தியசாலைகளில் இருந்த அவசரசிகிச்சை வண்டிகள் கூட அங்கு கொண்டுவரப்படவில்லை. அதேவேளை நாகர்கோயில் பள்ளிப்பிள்ளைகளின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொடூரமான தாக்குதலை அடுத்து சில மணிநேரங்களில் இந்த இடத்திற்கு விஜயம் செய்த சர்வதேச செங்சிலுவைச்சங்கம், எம்.எஸ்.எப் மருத்துவக்குழு, அனைத்துலக மனித உரிமை அமைப்பு என்பன நேரில் பார்த்து உறுதி செய்ததுடன், தமது கண்டனத்தையும் வெளியிட்டனர்.

இந்தப் படுகொலை தொடர்பான முழுமையான வரலாற்றை  விரிவாக உணர்வு பூர்வமான முறையில் ஆவணப்படுத்த வேண்டும் என்ற பலரது வேண்டுகோளுக்கமைய      எழுதப்பட்ட “உதிரம் உறைந்த மண்” என்ற விவரணச் சித்திர நூல்  1996 இல் தமிழ்த் தாய்ப்  பதிப்பகத்தினரால் பிரான்சில் வெளியிடப்பட்டது. இதுவே நாகர்கோயில் மாணவப் படுகொலைகளை விரிவாக எழுதி வெளியிடப்பட்ட முதலாவது நூல் என்பதும்  குறிப்பிடத்தக்கது.


வல்வை.ந.அனந்தராஜ்
நிமிர்வு ஒக்டோபர்  2019 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.