வஞ்சிக்கப்படும் ஈழத் தமிழ் அகதிகள்




இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு பேரிடியாகியுள்ளது. அவர்கள் வேண்டுமென்றே இந்திய அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து இந்தியா சென்ற ஈழத்தமிழ் அகதிகளும், மியன்மாரில் இருந்து புகலிடம் தேடிச் சென்ற ரோஹிஞ்சா முஸ்லிம்களும், பாகிஸ்தானில் இருந்து சென்ற அகமதியா முஸ்லிம்களும் இந்தச் சட்டத்திருத்தத்தில் இருந்து  புறக்கணிக்கப்பட்ட்டுள்ளனர்.

குறித்த சட்டத்திருத்த விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சிகள் பலவும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என வற்புறுத்தின. ஆனாலும் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர்கள் விடயத்தில் பாகுபாட்டுடன் நடந்து  கொண்டுள்ளது.

ஈழத்தில் இடம்பெற்ற போரினால் உலகெங்கும் எம் மக்கள் இடம்பெயர்ந்த போது கணிசமானோர் இந்தியாவுக்கும் இடம் பெயர்ந்திருந்தனர். அதிலும் ஒரு இலட்சம்  வரையிலான அகதிகள் இன்னமும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்திய அரசைப் பொறுத்தவரை இலங்கையில் இனப்பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவே சொல்கிறது.  ஆனால்,  ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கையில் இனப்பிரச்சனை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  யாழ்ப்பாணத்தில் சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இன்னொரு வகையில் போர் தொடர்ந்து நடக்கின்றது. ஓர் இராணுவ அடக்குமுறைக்கு கீழே வாழ்வதற்காக ஈழத்தமிழ் அகதிகள் இலங்கைக்கு மீள வருவது எந்த அளவுக்கு புத்திசாலித்தனமானது என்பது ஒரு நியாயமான கேள்வியே.  அதற்கு பதிலளிக்க வேண்டிய தார்மீகக் கடமை ஈழ அகதிகளை திருப்பி அனுப்ப முயற்சிக்கும் இந்திய அரசுக்கு உள்ளது. ஏனெனில் இலங்கையில் இனங்களுக்கிடையே நடந்த நடக்கின்ற பிரச்சனைகள் எல்லாவற்றிலும் இந்தியாவின் பங்கு கணிசமான அளவுக்கு இருக்கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது.

 ஈழத்து ஆவணப்பட இயக்குனரான சோமீதரன் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவில் வாழும் இலங்கைத்தமிழ் மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை காலம் காலமாக பலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், இவை குறித்தான எந்த முன்னெடுப்புக்களும் இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை. திபெத்திய அகதிகளை எடுத்துக் கொண்டால் நேரு காலத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் அவர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான பயண அனுமதிப்பத்திரம் உள்ளது. அகதிகள் என்கிற உரிமையை அனுபவிப்பவர்களாக உள்ளனர். இந்தியாவின் பல பாகங்களிலும் கடைகளை வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒரு ஈழத்தமிழ் அகதி மதுரையில் இருந்து சென்னை வருவதாக இருந்தால் கூட காவல்துறை அனுமதியை பெற வேண்டும். தாசில்தார் அனுமதி, அங்குள்ள கலெக்ட்டர் அலுவலகத்தில் அனுமதி என பல்வேறு இழுத்தடிப்புக்களின் பின்பே அனுமதிகள் வழங்கப்படுகின்றன. திபெத்திய அகதிகளுக்கு அவ்வாறான அனுமதிகள் எவையும் தேவையில்லை.

இந்தியா ஐக்கியநாடுகளின் அகதிகள் சாசனத்தில் கையெழுத்திடாத நாடு.  இதனால் இந்தியாவில் ஈழ தமிழர்கள் அகதிகளாக இல்லை. அவர்கள் சட்டவிரோதமாக குடியிருக்கிறார்கள் எனும் நிலைப்பாட்டையே இந்தியா எடுத்துள்ளது.  உதாரணமாக 79 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தவராக இருந்தால் 40 வருடங்களாக அவர் அங்கு வாழ்கிறார்.ஆனால் இன்றளவும் அவர் சட்டவிரோத குடியேறியாக கருதப்பட்டே சகல அரச ஆவணங்களிலும் பதிவுகள் செய்யப்படும். அவர் திரும்ப இலங்கை வந்து மீண்டும் இந்தியா செல்ல முடியாது. 7 ஆண்டுகள் வரை இந்தியாவுக்கான பயணத்தடை இருக்கும். இதே இலங்கை அகதி 40 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவுக்கோ, சுவிஸ்லாந்துக்கோ சென்றிருந்தால் அவர்கள் இந்நேரம் அந்நாடுகளின் குடியுரிமையைப் பெற்றிருப்பார்கள்.

ஈழத்தமிழ் அகதிகளின் குடியுரிமை பற்றி கதைப்பதற்கு முதல் சட்டவிரோதமாக தங்கியிருத்தல் என்கிற நிலையை நீக்க வேண்டும். ஈழத்தமிழ் அகதி மாணவன் பொறியியலாளர் ஆகலாம், ஆசிரியர் ஆகலாம். ஆனால் வேலை செய்ய முடியாது. எதிர்காலம் இல்லை. அவர்கள் சொந்த நாட்டில் பட்ட கஷ்டத்தை விட  பல்வேறு நெருக்கடிகளுக்குள் தான் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை தொடர்ந்தும் முகாம்களுக்குள் வைத்திருக்கவே இந்திய அரசு  விரும்புகிறது.

அரசியல், சமூக செயற்பாட்டாளரான சண் மாஸ்டர் கருத்து தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதிகள் முகாம்களிலும் வெளிப்பதிவிலும் தங்கியிருக்கிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பார்த்து முகாம்களில் வாழும் அகதி மக்கள் தான் மிகவும் வேதனையடைந்துள்ளார்கள். ஒரு நாட்டில் வாழமுடியாத பாதுகாப்பற்ற சூழலில் இருந்து ஒருவர் வெளியேறினாலே அவர் அகதி தான். தமிழ்நாட்டில் 35 ஆண்டுகளுக்கு முன் அகதியாக வந்த எம் மக்களிடம் சட்டவிரோத குடியேறிகள் என்கிற வார்த்தையை பிரயோகிப்பது முறையற்றது. 30 ஆண்டுகளுக்கு மேலாக பிறந்து வளர்ந்து படித்து திருமணமும் இங்கே செய்த ஒரு தலைமுறையை சட்ட விரோத குடியேறிகள் என்பது சரியா?அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.   

தோழர் தியாகு மத அடிப்படையிலான புறக்கணிப்பு குறித்து விளக்குகிறார், குடியுரிமை திருத்தச் சட்டம்முதலில் மசோதாவாக இருந்து இப்போது இந்திய நாடாளுமன்றில் இயற்றப்பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்பம் பெற்று குடியுரிமை திருத்தச் சட்டமாக உருவெடுத்துள்ளது. இது 1955 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்துக்கான திருத்தமாகும். அச்சட்டத்தில் இந்தியக் குடியுரிமை பெற விரும்பும் அயல்நாட்டவர் குறைந்தது 11 ஆண்டு காலம் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். என்ற சட்ட நெறி திருத்தப்படுகின்றது. 11 ஆண்டு தேவையில்லை 5 ஆண்டுகள் வசித்திருந்தாலே போதும் என்பது தான் திருத்தம். இது நல்ல திருத்தம் தானே என்று கேட்கத் தோன்றும்.

ஆனால், இந்தத் திருத்தம் எல்லா நாட்டவர்களுக்கும் பொருந்தக் கூடியதன்று. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கு மட்டும் தான் இந்தச் சலுகை. இந்த மூன்று நாடுகளிலும் கூட இஸ்லாமியர்களுக்கு இது பொருந்தாதாம். இந்து, கிறிஸ்தவர், பௌத்தர், சமணர், பார்சி என்ற பட்டியலில் இஸ்லாமியர் இடம்பெறவில்லை. இந்த திருத்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தோன்றி கிளர்ச்சிகளாக வெடித்துள்ளன. தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக தவிர எல்லா கட்சிகளுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தியா சமய சார்பற்ற நாடு என்பது உண்மையானால், சமய சார்பின்மை இந்திய அரசியலமைப்பின் அடித்தளக் கூறு என்பது உண்மையானால் வெளிப்படையாகவே மதத்தின் பெயரால் மனிதர்களை பாகுபடுத்தும் ஒரு சட்டம் எப்படி செல்லுபடியாகும்? இது  நீதிமன்றத்தில் நிற்குமா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. ஆளும் கட்சியின் விளக்கத்தை பார்ப்போம்.  இது இந்திய நாட்டின் முஸ்லிம்களை பாதிக்கக்கூடியதன்று. எனவே மதச் சார்பின்மைக்கு எதிரானதன்று என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்தியா உள்ளுறவில் மதச்  சார்பின்மையாகவும் வெளியுறவில் மதம் பார்த்தும் நடந்தால் அது சமயச் சார்பின்மைக்கு புறம்பல்லவாம். அப்படியானால் இந்தியா தனது இறக்குமதிக் கொள்கையில் மதம் பார்க்குமா? இஸ்லாமிய நாடுகளில் இருந்து பெற்றோல் இறக்குவதனை  தவிர்க்குமா? கிறிஸ்தவ நாடுகளில் இருந்து போர்த் தளபாடங்களை இறக்குவதனைக் கைவிடுமா? யூத நாட்டிடம் இருந்து உளவுக் கருவிகள் இறக்குவதனை கைவிடுமா? உள்நாட்டுக்கு மட்டும் தான் மதச் சார்பின்மை  என்றால்,எவ்வளவு பெரிய அபத்தமாக  முடியும்.

ஒடுக்கு  முறைக்கும்,பாகுபாட்டிற்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகும் யாரானாலும் அயல் நாட்டில் புகலிடம் கோருவதற்கு உரிமை உண்டு என்பது தான் பன்னாட்டுச் சட்டம். புகலிடம் நாடுவோரை மதம் பார்த்தோ இனம் பார்த்தோ பாகுபாட்டுடன் நடாத்த முடியாது.

அகதிகள் தொடர்பிலான பன்னாட்டு சட்டங்களில் இந்தியா ஒப்பமிடவில்லை என விளக்கம் தரப்படுகிறது.பெரும்பாலான ஐநா உறுப்பு நாடுகள் ஒப்பமிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தங்களில் ஒப்பமிடாமல் விலகியிருப்பது சிறுமைக்குரியதே தவிர பெருமைக்குரியதல்ல. இதற்காக பண்டிதர் நேரு முதல் மோடி வரை இந்தியாவை ஆண்டவர்கள் வெட்கப்பட வேண்டும். 1951 ஆம் ஆண்டு அகதிகள் தகுதிநிலை ஒப்பந்தம்,1967 அகதிகள் பற்றிய வரைமுறை உடன்படிக்கை இரண்டிலுமே இந்தியா சேரவில்லை. ஆனால், ஐநா உறுப்பு நாடுகளுள் ஒன்று என்ற வகையில் இந்தியா தனது கடப்பாடுகளில் இருந்து தப்ப முடியாது.

1948 ஆம் ஆண்டின் உலகளாவிய மானுட உரிமை சாற்றுரை அல்லது  பிரகடனம் இந்தியாவையும் கட்டுப்படுத்தும். இதில் இந்திய அரசு கையொப்பமிட்டிருப்பதனை நாடாளுமன்றில் யாராவது அமித்ஷாவுக்கு எடுத்துக் காட்டினார்களா? இந்த சாற்றுரையின் உறுப்பு 14 நேராகவே அகதிகள் உரிமை தொடர்பானது.

துன்புறுத்தப்படுவதில் இருந்து தஞ்சம் பெறவும் நாடவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.     இந்த உரிமையை இனம் பார்த்தோ மதம் பார்த்தோ யாருக்கும் மறுக்க முடியாது. வங்கதேசத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு தங்கள் தாயகத்தை விட்டு துரத்தப்பட்டதும் பர்மாவில் அவர்கள் இனவழிப்புக்கு ஆளானதாக ஐநாவில் அறிக்கையிட்டதும் இந்திய அரசுக்கு தெரியுமா?

ஆனால் அவர்கள் முஸ்லிம்கள் என்பதனாலேயே அவர்களை அகதிகளாக ஏற்று குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுப்பது என்பது தான் இப்போதைய குடியுரிமை சட்டத்தின் விளைவு என்றால் அது இந்திய அரசியலமைப்பின் சமயச்சார்பின்மைக்கு எதிரானது மட்டுமன்று,1948 ஆம் ஆண்டு மார்கழி 10  இல் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள மானுட உரிமை சாற்றுரைக்கும் புறம்பானது.  இதனால்த் தான் மார்கழி 10 ஆண்டு தோறும் மானுடவியல் நாளாக கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டும் அதே நாளில் தான் அமித்ஷாவும் குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வந்து மானுட உரிமை நாளை  கேவலமாகக் கொண்டாடியிருக்கிறார்.

தொகுப்பு-அமுது
நிமிர்வு டிசம்பர்   2019 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.