ஏமாற்றத்திலிருந்து மாற்றங்களை தேடி…




அறிமுகம்:

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு. தேர்தல்களிலும் சிங்கள பௌத்தமே வெற்றிபெறுவது வரலாறு. வாழ்வு துன்பமயம், ஆசையே துன்பத்துக்கு காரணம், ஆசை அழைப்பே துன்ப நீக்கம் என யதார்த்தத்தை ஆய்வுக்குட்படுத்திய புத்தர் துன்ப நீக்கத்துக்கான எட்டு கூறுகள்  கொண்ட வழியை முன்வைத்தார்.தொடரவுள்ள பௌத்த தர்ம ஆளுகை இலங்கைக்கு ஆரோக்கியமாக யதார்த்தத்தை தருமா என்பதை எதிர்கால வரலாறே குறிப்பிடும்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் – 2019:

திட்டமிட்டபடி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. சிறீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் 52.25 வீதத்தையும் புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள்  41.99 வீதத்தையும் பெற்றனர். சிங்கள பௌத்தத்துக்கு அமோக வெற்றி. இது காவியின் வெற்றி என்பது சிலரின் நிலைப்பாடு.

சிங்கள பௌத்தத்தின் வெற்றி:

சிங்கள பௌத்தத்தின் தேர்தல் அரசியலில் வெற்றிபெற்று, இலங்கை சோசலிச குடியரசின் எட்டாவது நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதியாக, ஒற்றையாட்சியை தொடர்வதற்கான பதவியேற்பு பௌத்தத்தின் புனித நகர் அநுராதபுரத்தில் நடைபெற்றது. புதிய ஜனாதிபதி அவரது உரையில், “எனது வெற்றிக்கு இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை சிங்கள மக்களே முக்கியமானவர்களாக இருப்பார்கள் என்பதையும் சிங்கள மக்களின் ஆதரவுடனேயே நான் அமோக வெற்றியைப் பெறுவேன் என்பதையும் முன்கூட்டியே நான் அறிந்திருந்தேன்.

ஆனாலும் எனது வெற்றியில் தமிழ் - முஸ்லீம் மக்களையும் பங்குகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தேன். எனினும் என்னுடைய அழைப்புக்கு ஏற்றவாறான ஆதரவு கிடைக்கப்பெறவில்லை. ஆகவே அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அனைவரையும் என்னுடன் இணையுமாறு புதிய ஜனாதிபதியாக மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்.” எனக் குறிப்பிட்டார்.

பௌத்த குடும்பத்தில் பிறந்து, கொழும்பு ஆனந்தா கல்லூரியில் பௌத்த கோட்பாடுகளுக்கு அமைய கற்றமையால், பௌத்தம் அவருக்குள் பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கும் என அவர் தொடர்ந்து குறிப்பிட்டார். இதனால் பௌத்தத்துக்கான அரச ஆதரவு உறுதி செய்யப்பட்டது. தேசிய பாதுகாப்பு மற்றும் சுபீட்சமான எதிர்காலம் பற்றியும் வலியுறுத்தப்பட்டது.

தமிழர்களின் யதார்த்தமும் தேவையான விழித்தெழுதலும்:

வரலாறாகிவிட்ட தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை (தனிச்சிங்களச் சட்டம், கறுப்பு ஜுலை…) மற்றும் 2009 இல் இராணுவரீதியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப் போர் (முள்ளி வாயக்கால்) என்பன இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் சவால்கள் நிறைந்ததே என்பதை மட்டுமே சுட்டி நிற்கின்றன என்பது யதார்த்த உண்மை. தேர்தல் மூலம் தமக்கு வெற்றி கிடைக்கும் என தமிழர்கள் எவராவது எண்ணுவது யதார்த்தபூர்வமானதா என்பது முக்கியமான வினா. அத்துடன் ‘தேர்தல் அரசியல் மட்டும்’ எமக்கு நன்மைகளைத் தரும் என தமிழர்கள் யாராவது நம்புவது பொருத்தமானதா என்பதும் தவிர்க்கமுடியாத இன்னொரு வினா.

தேர்தல் அரசியல் நன்மை தரும் என நம்பியோருக்கு தேர்தல் முடிவு ஏமாற்றத்தையே தந்ததுள்ளது. தேர்தல் அரசியல், கட்சி அரசியல், மற்றும் பாராளுமன்ற கதிரை அரசியல் என்பவற்றை கடந்து மக்கள் அரசியல் தளத்தில், ‘ஈடுபாட்டு அரசியலில்’ ஈடுபட இதயபூர்வமாக விரும்புவோருக்கு இத்தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தைத் தராவிட்டாலும் அவர்களின் தகுதியின்மையை, ஒற்றுமையீனத்தை, தெளிவாக வெளிப்படுத்திவிட்டது.

யதார்த்தத்தை அங்கீகரிக்காதோர் பலர், ‘விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை’ எனக் கூறி போலியான எதிர்காலத்தை உண்மையாக முனைகின்றனர். இது யாருக்கும் எந்த நன்மையையும் தரவாய்ப்பில்லை.

சிங்கள பௌத்த இலங்கையில் சிறுபான்மையாக வாழும் தமிழர்கள் அனைவரும், போலிகளை விலக்கி விழித்தெழுவது இன்றைய காலத்தின் தேவை. அரசியல், சமூக, பொருளாதார, கலாசார, கல்வி, சுகாதார, சமய… வெளிகளில் தமிழர் எந்த இடத்திலுள்ளனர் என்பதை இதயசுத்தியுடன் தேடவேண்டும். யதார்த்தத்தை பொறுப்புடன் ஏற்கவேண்டும். ஆதிக்கங்கள் ஒருபோதும் நன்மை தரா, அவை அழிவை மட்டுமே தரும். அனைத்து மட்டங்களிலும் பங்கேற்பு தீர்மானங்கள் அங்கீகரிக்கப்படும் வரை நன்மைகள் கனவிலும் வராது.

சர்வாதிகார தலைமைத்துவங்களை எதிர்பார்க்கும் போக்கு நீண்டகால மட்டத்தில் மட்டுமல்ல குறுகிய கால மட்டத்திலும் ஆரோக்கியமற்றது. ஒருநபர் மைய தலைமைத்துவம் தலைமைத்துவங்கள் வளர்ச்சியையே தகர்க்கின்றது. ஒரு தலைவர், ஒரே தலைவர், ஒரு குடும்பம், ஒரு ஒழுங்கு, ஒரு சட்டம், ஒரு மொழி, ஒரு இனம்… எனும் போக்கு இயல்பான, இயற்கையான பன்மைத்துவத்தை மறுக்கின்றது.

பன்மைத்துவமின்றி மனுக்குலம் வாழ முடியாது. மக்கள் திரளாக கூட்டுப்பிரக்ஞையுடன் ஒன்றாக பன்மைத்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டும். பல நல்ல தலைவர்கள், பல நல்ல கருத்துகள் அவசியம். பங்கேற்புடன் தீர்மானங்களை மேற்கொள்ள எல்லா மட்டங்களிலும் தலைமைத்துவம் வளர்க்கப்படவேண்டும். ஒருவரை மட்டும் அளவுக்கதிகமாக அங்கீகரிக்கும் போக்கு தவிர்க்கப்படவேண்டும்.

பிரிவினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தேர்தல் பரப்புரைகள் நடைபெற்ற காலத்தில் பிரிவினைகளை விதைத்து யதார்த்தமற்ற போலி நம்பிக்கைகளை விதைத்த பல சக்திகளும்,  தற்போது பெற்றுள்ள தேர்தல் முடிவு மைய யதார்த்தத்தில், அடுத்தவரை தூற்ற முற்படுகின்றனர். ஒருவர் தன்னால் நன்மை ஏற்படவில்லை என்பதை அங்கீகரிக்க மறுத்து மற்றவரால் நன்மை ஏற்படவில்லை என அனைவருக்கும் அறிவிக்க முனைகின்றனர்.

சந்தர்ப்பவாதிகளாவதால் நன்மை கிடைக்கும் எனச் சிலர் கனவு காணலாம் ஆனால் நீண்ட காலப்போக்கில் சந்தர்ப்பவாதிகளுக்கும் கைவிடலே மிஞ்சும் ஏனெனில் காலத்துக்கு காலம் சந்தர்ப்பவாதிகள் புதிதாக முளைத்துக்கொண்டும் புதிய பாத்திரங்களாகிக் கொண்டுமே இருக்கின்றனர்.

புதிய தாராளவாதம் அனைவரையும் சந்தைக்கான விற்பனைப் பொருட்களாக்கி வருகிறது. நான் விற்கப்பட, ஆரோக்கியமான எமது விழுமியங்களை கைவிட்டுவிட்டு, ஆரோக்கியமற்ற தீயவைகளை அதிக விலைகொடுத்து வாங்க தயாராக்கப்பட்டு வரும்நிலை உச்சகட்டத்தை அடைந்துவிட்டது. ஆதரிப்பது மட்டுமல்ல எதிர்ப்பது மற்றும் மௌனம் காப்பது கூட தனிலாபமாகிவிட்டது.

இந்தோ – பசுபிக் பிராந்திய அரசியலை நகர்த்த உலக சக்திகள் இலங்கையில் தொடர்ந்து செயற்படுவது தவிர்க்க முடியாதது. ஒரு சக்தி தனது இலாபத்துக்காக யாரையும், எந்தப்பிரச்சினையும் தனதாக்கும். தேவையாயின் பிரச்சினைகளை பிறக்கச் செய்யும். யதார்த்தம் தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டு அடிப்படைகளை இழக்க யாரும் காரணமாகக்கூடாது. அதற்கு கூட்டுறவு தேவை. இலங்கையில் அனைவரும் அடிப்படை உரிமைகள் மற்றும் அடையாளங்களுடன் இயல்பாக வாழ வேண்டும் எனும் தூரநோக்கு தேவை.

கூட்டுறவை தடுக்கும் அனைத்து சக்திகளையும் நிராகரிக்க வேண்டும். பிரித்து ஆளுகை செய்வது, அடையாளங்களை சிதறடிக்கச் செய்வது, சொந்தத்தை புறக்கணிக்கச்செய்து உலகளாவிய சக்தியிடம் தன்னை அடைவு வைக்கச் செய்வது போன்றவை  புதிய தாராளவாதத்தின் முன்னெடுப்பு.

வர்க்க வேறுபாடு இன்று அதிகரித்து வருகிறது. கரைவலை இழுக்க இயந்திரங்கள் வருகின்றன, நண்பர்களும் உறவுகளும் அந்நியராக்கப்படுகின்றனர். அரிவுவெட்ட (நெல் அறுவடை) வருடாந்தம் வந்த அணிகளைக் காணவில்லை இயந்திரங்கள் அவர்களது இடத்தை நிரப்புகின்றன. இவை தொடர்வதால் தேர் இழுக்கவும் இயந்திரங்கள். இயந்திரங்கள் ஆளுவதை அங்கீகரிக்கும் மனித இதயமற்ற இயந்திரங்களாகி வருவது அனைத்து வெளிகளிலும் ஆபத்தானது. இதனால் கூட்டுறவு  உழைப்பு அவசரதேவையாகிறது.

தொகுப்பு:
முதலாவது ஒற்றுமை. இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வு பற்றி சிங்கள பௌத்த தரப்புடன் கதைப்போர் முதலாவது அவர்களுக்குள்  சமஷ்டியுடன் வாழவேண்டும். எந்த அடிப்படையிலும் யாரையும் யாரும் நிராகரிக்கக்கூடாது.

பௌத்த தர்மம் கூறுவதற்கமையவே ஆசைகள், பேராசை ஆதிக்கம் அகற்றப்படவேண்டும். இது அகத்திலும் புறத்திலும் ஏற்பட்டால் மட்டுமே துன்பம் அகற்றப்படும். இது தனியாட்களுக்குள் மட்டுமல்ல. எமது சமூகங்களுக்கும் இது பொருந்தும்.

ஏமாற்றங்கள் மாற்றங்களாகுவதற்கு அடுத்தவரை அங்கீகரிப்பது அடிப்படை. அதன்பின் ஏமாற்ற பரிணாமம் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். இத்தொடர்நிலை நடைபெற பிரிவினை அல்ல ஒற்றுமையும் பன்மைத்துவமுமே அவசியம்.

அருட்பணி S.D.P.செல்வன்
புனித மரியா ஆலயம்,கோப்பாய். 
நிமிர்வு டிசம்பர்   2019 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.