ஈழத்துத் தொல்லியல் ஆய்வுக்களங்கள்




ஒரு நாட்டில் தொல்லியல் சான்றுகள் கண்டறியப்படும் போது அவை தொடர்பாக முனைப்புடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதும், அந்த ஆய்வுகளில் அந்த நாடுகளின் அரசாங்கங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதும் இயல்பான ஒன்று. ஆனால் இலங்கை போன்ற நாடுகள் இதற்கு விதிவிலக்கு. இலங்கையின் தமிழர் தாயகப்பகுதிகளில் அவ்வப்போது நிகழும் அகழ்வாராய்ச்சிகளும், அவ்வப்போது இயல்பாக வெளிப்படும் தொன்மங்களும், பாதியில் நின்று போன அல்லது நிறுத்தப்பட்ட ஆய்வுகளும், ஆய்வு முடிந்து தசாப்தங்களைக் கடந்தும் ஆய்வறிக்கைகள் வெளியிடப்படாத நிலைமைகளும், பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சான்றுகள் பராமரிப்பின்றி அழிந்து போவதும் இயல்பாகிப் போன விடயங்கள்.

இவ்வாறான சூழலில் இலங்கையின் தமிழர்                                                                                  தாயகப் பகுதிகளில் இனங்காணப்பட்ட சில தொன்மங்களையும், தொடர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டியதும் பாதுகாக்கப்பட வேண்டிய தேவையுள்ளதுமான சில பிரதேசங்களையும் இக்கட்டுரை பட்டியலிடுகிறது.

1. இரணைமடு -
இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கம் என்ற பெருமையையும், தமிழர்தாயகப்பகுதியில் பெரும்பான்மை விவசாயநிலங்களுக்கு நீர்வழங்கும் நீராதாரமாகவும் விளங்கும் இரணைமடுக்குளமும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளும் தொல்லியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இரணைமடு, மாங்குளம், முருங்கன், முதலான பல்வேறு இடங்களில் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட அறிஞர்கள் சரசின், செலிக்மன், வேலண்ட, போல், பர்சனர்காட்லே முதலானோர் இங்கெல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர். நீண்டகாலமாக இக்கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலையில் 1970 களின் பின்னர் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தின் முதன்மை தொல்லியலாளர்களில் ஒருவரான கலாநிதி சிரான் தெரணியகல இப்பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வெளிப்படுத்திய தகவல்கள் இக்கருத்துக்களுக்குப் புதுவெளிச்சத்தை ஏற்படுத்தியது எனக் கூறலாம்.


அவர் இங்கு மேற்கொண்ட ஆய்வுகளின் போது கிடைத்த ஆதாரங்களில் இருந்து இற்றைக்கு 1,25,000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பிராந்தியத்தில் கற்கால மக்கள் (மேலைப் பழங்கற்கால மக்கள்- Upper Paleolithic People) வாழ்ந்துள்ளனர் என்று அறிவித்தார். நாடோடிகளாக மிருகங்களை வேட்டையாடியும், இயற்கையாகக் கிடைத்த பழங்களையும், கிழங்கு வகைகளையும், காய்கனிகளையும் உண்டு ஆதிமனிதர்கள் இப்பிரதேசங்களில் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை இங்கு கிடைத்த கல்லாயுதங்கள் மூலம் அவர் நிறுவிக்காட்டினார். விரிவான ஆய்வுகள் நிகழ்த்தப்படாத நிலையிலும், இரணைமடுக் குளத்திற்கு கிழக்காக உள்ள மேட்டு நிலப்பகுதியில் இருந்து ஆதிமனிதர்கள் வாழ்ந்ததை உறுதிசெய்யும் தாழிகளின் உடைந்த பாகங்கள், கறுப்புச்சிவப்பு நிற மட்பாண்ட ஓடுகள், கழிவிரும்புகள், கல்மணிகள், சுடுமண் உருவங்கள் என்பன கிடைத்திருக்கின்றன.

2. குஞ்சுப்பரந்தன் -
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குஞ்சுப்பரந்தன் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று 1990 அளவில் பயிர்ச் செய்கைக்காகத் திருத்தப்பட்ட போது பெருங்கற்கால ஈமத்தாழி ஒன்று மீட்கப்பட்டது. இதுபற்றிய செய்தி அப்போதைய உதவி அரசாங்க அதிபராக இருந்த கலாநிதி.க.குணராசா (செங்கைஆழியான் ) அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்ட போது அவர் நேரில் சென்று அவற்றைப் பார்வையிட்டதுடன் அத்தாழிகள் பற்றிய விரிவான கட்டுரை ஒன்றையும் எழுதியிருந்தார்.

வடஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது முழுமையான பெருங்கற்கால ஈமத்தாழி என்ற வகையில் இதற்குத் தனிமுக்கியத்துவம் உண்டு. நான்கடி உயரமும், எட்டடி சுற்று வட்டமும் கொண்ட இத்தாழியின் விளிம்பு ஓரங்குலத் தடிப்புடையது. தாழியின் வெளிப்புறத்தில் சில அலங்காரக் கோடுகள் காணப்படுகின்றன. தாழிக்குள் மனித எலும்புக்கூட்டின் சிலபாகங்களும், சாம்பல் போன்ற கரிய பொருள், இருமட்கலங்கள் என்பன காணப்பட்டன. இப்பொருட்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 


3. கந்தரோடை-

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் பிரிவில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊர் கந்தரோடை.  இங்குள்ள, சுமார் 3.2 சதுரகிலோமீற்றர் பிரதேசத்தை உள்ளடக்கிய பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் தொன்மையான கறுப்புச் சிவப்பு மட்பாண்டங்கள், நாணயங்கள், எலும்புகள், கட்டட அழிபாடுகள், சிற்பங்கள் , சிலைகள், தமிழ்பிராமிப் பொறிப்புகள், மணி வகைகள், ஆபரணங்கள் முதலானவை கிடைக்கப்பெற்றன. 

இந்தியாவின் அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட தொன்மங்களோடு இவை அதிகம் ஒத்திருக்கின்றன. 1917 இல் போல்பீரிஸ் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகளில் அதிகமான புராதன தொன்மங்கள் நிறைந்த பகுதியாக கந்தரோடை இனங்காணப்பட்டதோடு அனுராதபுரத்திற்கு அடுத்த புராதன குடியிருப்பு மையமாகவும் இது அடையாளபபடுத்தப்பட்டிருக்கிறது.  வட இலங்கையைப் பொறுத்தவரை தொடர்ச்சியான நீண்ட அகழ்வாய்வுகளுக்கு உட்பட்ட இடமாகவும் கந்தரோடை விளங்கி வருகிறது.

இரும்புக்கால, பெருங்கற்கால சின்னங்கள் 1970 இல் விமலாபேக்லே எனும் ஆய்வாளரால் இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கிடைத்திருக்கின்றன. கந்தரோடையில் கிடைத்த சான்றுகளை காலக்கணிப்பிற்கு உட்படுத்தியதில் கி.மு 700க்கு முன்னர் மக்கள் குடியிருப்புப் பகுதியாக விளங்கிய பகுதி இதுவென்பதும் கண்டெடுக்கப்பட்ட தொன்மங்கள் ஆதி இரும்புக்கால பண்பாட்டு சின்னங்களை பிரதிபலிப்பதும் வெளிப்படுத்தப்பட்டன.  இங்கு வாழ்ந்தவர்கள் தமிழகத்தோடு நெருங்கிய ஒற்றுமை கொண்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் பல்வேறு எடுகோள்களை ஆய்வாளர் விமலாபேக்லே முன்வைத்துள்ளார். இத்தகைய குடியிருப்பு கந்தரோடை மாதோட்டம் பொம்பரிப்பு வரை பரந்திருந்ததாக பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. 

இங்கு கிடைத்த தொல்லியல் சான்றுகள் மூலம், இங்கு வாழ்ந்தவர்கள் தென்னிந்திய, வடஇந்திய, உரோம , சீன உறவுகளை பேணியிருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதனூடாக கந்தரோடை ஒரு நகர நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. இலங்கையில் பெளத்த மதம் பரவிய காலத்தில் அதன்தாக்கம் இப்பகுதியில் இருந்துள்ளதை கந்தரோடை ஸ்தூபியும் அதனைச் சுற்றி அமைந்த பலஸ் தூபிகள் போன்ற அமைப்புகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன. தமிழகத்தில் கி.பி 7 ஆம் நூற்றாண்டில் தமிழ்பௌத்தம் மேலோங்கி காணப்பட்ட காலத்தில் இவை அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதுஆராய்ச்சியாளர்களின் கருத்து.

கந்தரோடை,  பாண்டியர், சோழர், பொலநறுவை, யாழ்ப்பாணம் ஆகிய அண்டை அரசுகளோடும்,  சீனா அரசுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டதாக இருந்திருக்க வேண்டும் என்பது அனுமானம். 2011 இல் தொல்லியல் திணைக்களமும் யாழ்பல்கலைக்கழக வரலாற்றுத் துறையினரும் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் 54 கலாச்சார மண்படை அடுக்குகள் இங்கு கண்டு பிடிக்கப்பட்டன. இத்தகைய நீண்ட தொடர்ச்சியான சான்றுகள் இலங்கையில் வேறு எந்த இடத்திலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறார் யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் ப.புஷ்பரட்ணம்.

அகழ்வாய்வுக் கிடங்கின் 30 ஆம் 31 ஆம் மண்படைகள் பெருங்கற்காலத்திற்கு முற்பட்டவையாக இருப்பதால் கந்தரோடை, குறுணிக்கற்காலப் பண்பாட்டில் இருந்து வளர்ச்சி பெற்று பெருங்கற்காலத்தில் பௌத்தத்துடன் இணைந்து நிலையான வணிக சமய பண்பாட்டுடன் முக்கியம் பெற்று நகரமயமாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் S.கிருஷ்ணராஜின் நம்பிக்கை. காலகணிப்பீட்டின் அடிப்படையில் இது ஆதி இரும்புக்கால வழி வந்த பாரம்பரியத்தைக் கொண்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கந்தரோடையில் வாழுகின்ற தமிழ்மக்களின் பாரம்பரியம் கந்தரோடையின் தொடக்க காலப்பாரம்பரியமாக காணப்படுகிறது. பலநாட்டு வணிகர்கள் சந்திக்கும் மையமாக இருந்ததால் பிறநாட்டவரது பண்பாடுகளும் இங்கு உள்வாங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சீன பயணிகள் இங்கு தங்கி இருந்ததற்கான சான்றுகள் வெளிப்பட்டிருக்கின்றன.

2011ம்ஆண்டு,  இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தால் இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இந்த ஆய்வின் அறிக்கை இன்று வரை வெளியிடப்படவில்லை.1970 விமலாபேக்லி என்கிற ஆய்வாளரின் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில், ஆதி இரும்புக்கால பண்பாட்டு சின்னங்கள் கண்டறியப்பட்டன. இந்த ஆய்வில் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் கலாநிதி.சிரான் தெரணியகல இலங்கை தொல்லியல் திணைக்களப் பிரதிப் பணிப்பாளார் நிமல்பெரேரா,பேராசிரியர் புஸ்பரட்ணம் போன்றோரும் பங்கெடுத்திருந்தனர்.

இந்த ஆய்வில் வெளிப்பட்ட தொன்மங்களைக் காலக்கணிப்பீட்டுக்கு உட்படுத்தியதில் அவை 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதுஅறிவியல் ரீதியாக நிறுவப்பட்டது.

4. ஆனைக்கோட்டை -
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண நகருக்கு வடமேற்கே ஆறுமைல் தொலைவில் நாவாந்துறை கடற்பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ளது ஆனைக்கோட்டை. இங்கு 1980 ஆம் ஆண்டு கார்த்திகை  மாதம் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வொன்றில், பெருங்கற்பண்பாட்டுத் தடயங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தொடர்ந்து நிகழ்ந்த அகழ்வாய்வில் பெருங்கற்பண்பாட்டு ஈம அடக்கங்கள் யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெளிக் கொண்டு வரபட்டன. ஆய்வுக்குழியில் இருஎலும்புக்கூட்டு அடக்கங்கள் மேற்குக்கிழக்காக நீட்டிப்படுத்தவாக்கில் காணப்பட்டன. இவற்றைச் சுற்றி ஈமப்படையல்கள் பெருங்கற்காலத்திற்குரிய மட்பாண்டங்களில் இடப்பட்டிருந்தன. இரும்புக்கருவிகள், இரும்பு அகல் விளக்கு, சங்குகள், மணிவகைகள், கடல் உணவு எச்சங்கள், மாமிச உணவு எச்சங்கள், சுடு மண்ணாலான வட்டமான தாயம் போன்றதொரு விளையாட்டுக் கருவி ஆகிய பல்வேறு வகைப் பொருட்கள் ஈமப்படையல்களில் இடம்பெற்றிருந்தன. எலும்புக்கூடொன்றின் தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த கறுப்புச்சிவப்பு வட்டில் ஒன்றில் பித்தளையாலான முத்திரையொன்று கிடைத்தது. இது முத்திரை மோதிரமொன்றின் பாகமாகலாம். இதில் இரு வகையான எழுத்துக்கள் இருக்கின்றன.

முதலாவது வரியில் பெருங்கற்கால மட்பாண்டங்களில் வழமையாகக் காணப்படும் குறியீட்டெழுத்துக்களும் இரண்டாவது வரியில் கி.மு. 3 முதல் கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்குரிய பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. இவ்விரு வகை எழுத்துக்களாலும் குறிக்கப்பட்டுள்ளது ஒரு பொருளேயென்று கொண்டால் இரண்டாவது வரியிலுள்ள பிராமி எழுத்துக்களைப் படிப்பதன் மூலம் முதலாம் வரியிலுள்ள படிக்க முடியாததாகிய பெருங்கற்காலக் குறியீட்டு எழுத்துக்களுக்கு விளக்கம் கொடுக்கலாம்.  இந்த அடிப்படையில் பேராசிரியர் கா.இந்திரபாலா இதன் பிராமிப் பகுதியை 'கோவேதன்' அல்லது 'கோவேந்த' எனப் படித்து இதன் மூலம் குறியீட்டு எழுத்துப் பகுதிக்கு விளக்கங் கொடுத்துள்ளார். இவ்வாசகங்களின் மொழி ஆதித்தமிழ் அல்லது ஆதிமலையாளம் என்பது இவர் கருத்தாகும். இம்முத்திரைகளின் தொல்லெழுத்தியலை அடிப்படையாகக் கொண்டு ஆனைக்கோட்டைப் பெருங்கற்பண்பாட்டின் காலம் கி.மு. 3-2 ஆம் நூற்றாண்டென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5. வாவெட்டிமலை -

1800 ஆம் ஆண்டுக்குரிய இலங்கையின் இறுதி மன்னர்கள் என்ற புகழுக்குரிய வன்னிய மன்னர்களில் ஏராளமான வரலாற்றுச்சின்னங்கள் முல்லைத்தீவு மாவட்டமெங்கும் விரவிக் கிடக்கின்றன. அவ்வகையில் இந்த வாவெட்டி மலைக்கும் முக்கியமானதொரு இடமுண்டு.  ஒட்டுசுட்டான் தான்தோன்றியீஸ்வரர் ஆலயம் எனும் சைவர்களின் புராதன கோவிலையும் அதனோடிணைந்த வாவெட்டி மலைப் பகுதிகளிலும் பல்வேறு தொல்லியல் சான்றுகள் இருப்பதாக அவ்வப்போது பலரும் எழுதி வந்திருக்கும் பொழுதும் முறைப்படுத்தப்பட்ட எந்த அகழ்வாராய்ச்சியும் இப்பகுதிகளில் நடைபெறவில்லை. சமகாலத்தில் இலங்கைத் தொல்லியல்த் திணைக்களத்தின்ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இது அறிவிக்கப்பட்டுள்ள போதும், சட்டவிரோத கல்அகழ்தல் மற்றும் மலையழிப்பும் நடைபெற்று வருவதாக இப்பிரதேச மக்கள் தெரிவிகின்றனர்.

6. சங்கமன் -

இலங்கையின் கிழக்கு மாகாணம்- அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது சங்கமன். கண்டி பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் ஏராளமான புராதன சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில சின்னங்கள் கிறிஸ்துவுக்கு முன்னர் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், சில சின்னங்கள் கிறிஸ்துவுக்குப்பின்னர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றும் வரலாற்றுத்துறைப் பேராசிரியரான எஸ்.பத்தமநாதன் உறுதிப்படக் கூறுகிறார்.

மலைகளிலும் மலைகள் அருகேயும் காணப்படும் இந்தப்புராதனச் சின்னங்கள், இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், அவற்றினைப் பாதுகாப்பதற்கான போதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என அந்தப் பிரதேச மக்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கைகள் இடம் பெறுகின்றமையினால், அங்கு காணப்படும் பெறுமதி மிக்க புராதன சின்னங்கள் சேதமடைந்தும், அழிவடைந்தும் செல்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வெட்டுக்கள், நடுகற்கள், கல்லறைகள், பாறைத்தூண்கள், மலைகளில்குடையப்பட்ட நேர்த்தியான குழிகள் நீர்த்தொட்டிகள் என்றுஏராளமான ஆய்வுக்குரிய, பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று எச்சங்களைத் தாங்கி நிற்கிறது சங்கமன். பேராசிரியர் பத்மநாதனின் கருத்துப்படி, இங்குள்ள நடுகற்கள் ஆதி இரும்புக் காலம் என்று சொல்லப்படுகின்ற - பெருங்கல் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்று என்பதை அறிய முடிகிறது. பெருங்கற்கால மக்கள் தான் 'நாகர்'கள் என அழைக்கப்படுவதாகவும் 'நடுகற்கள்' இங்கு காணப்படுகின்றமையினை வைத்து, கிறிஸ்துவுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில், தமிழ்மொழியைப் பேசிய பெருங்கற்பண்பாட்டு மக்கள் இங்கு பரவியிருந்தார்கள் என்பதைத் திடமாக நிறுவமுடியும் என்கிறார் பேராசிரியர் பத்மநாதன். 

"ஈமத்தலங்களில் அமைக்கப்பட்ட நான்குக்கும் மேற்பட்ட கல்லறைகள் இப்பகுதியில் காணப்படுகின்றன. இவை நீள் சதுரமான வடிவுடையவையாகும். அந்தக் கல்லறையை நீளமான ஒரு கல்லினைக் கொண்டு மூடி விடுவார்கள். அதனை தொப்பிக்கல் (Dollmen) என்று சொல்வார்கள். இந்த 'தொப்பிக்கல்'கள் இங்கு காணப்படுவதை வைத்தும், கிறிஸ்துவுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு தமிழ்மொழி பேசிய மக்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்த முடியும்" என்பது பேராசிரியர் பத்தமநாதனின் வார்த்தைகள்.

7. பூநகரி -

இலங்கையில் யாழ்ப்பாணத்தையும் வவுனியாவையும் பிரிக்கும் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது பூநகரி பிரதேசம். போர் மற்றும் பராமரிப்பின்றி சிதைந்துள்ள ஐரோப்பியர்கள் காலத்தில் அமைக்கப்பட்டகோட்டை ஒன்று இங்கே அமைந்திருக்கிறது. இந்தக்கோட்டை தவிர, அதற்கு முந்தைய நுண்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தொன்மங்கள் சிலவும் அவ்வப்போது இப்பிரதேசத்தில் கண்டறியப்பட்டிருக்கின்றன. கிராஞ்சி உறைகிணறுகள், பிராமி எழுத்து வடிவத்தைக்கொண்ட சாசனங்கள் என இங்கு கண்டெடுக்கப்பட்ட சில சான்றுகள் யாழ்ப்பாண தொல் பொருள் நிலையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மண்டக்கல் மற்றும் மண்ணியாற்றுப் பகுதியில் 1982,1993 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய பலதரப்பட்ட கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 'பூநகரி மண்ணித்தலை சிவன் ஆலயம்' வரலாற்றுத் தொன்மையான சோழர் காலத்துக்குரிய கோயில் ஆகும். முழுமையான திராவிடக் கலை மரபை பிரதிபலிக்கின்ற மிகப்பழைமையான இக்கோவிலின் சுவர் சோழர்கால கலைமரபை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இக்கோவில் மடமானது ஆரம்பகால பல்லவ, சோழ, பாண்டிய காலங்களைப் பிரதிபலிக்கின்றன. மிகமுக்கிய அம்சமாக மூன்று அடுக்குகளைக் கொண்ட வகையில் இக்கோவிலின் விமானம் அமைந்திருக்கிறது.  விமானத்தின் மூன்று தளங்களும் சதுரவடிவில் அமைக்கப்பட்டிருப்பதுடன் மேலே தூபிவைக்கும் பகுதியானது வட்ட வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 14 அடி நீளம் கொண்ட விமானமாக இது கருதப்படுகிறது. இந்தக் கோவிலின் எச்சங்கள் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதியன்று பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் முறையான பராமரிப்பு வசதிகள் செய்யப்படாமல் விரைவில் சிதைந்து போகும் நிலையிலேயே இன்றும் இவை காணப்படுகின்றன.

8. கட்டுக்கரை -

மன்னார் மாவட்டத்தில் மிக அண்மையில் கண்டறியப்பட்ட புராதன குடியிருப்பு மையமாகக் கட்டுக்கரை சிறப்புப் பெறுகிறது. மன்னார் கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் 2016  இல் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சியொன்றில்,1400 வருடங்களுக்கு முன்னர்,
மக்கள் வசித்ததற்கான, அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர்முனைவர் ப.புஷ்பரட்த்தின் தலைமையில் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பிரிவு மாணவர்கள் இந்த அகழ்வாராச்சியை நிகழ்த்தினர்.


இதில், இரண்டு வகையான குடியிருப்புக்கள் இருந்தமைக்குரிய சான்றுகள் வெளிப்பட்டிருக்கின்றன.அவற்றிலொன்று கி.பி 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்னதானது என்பதை கிடைத்த சான்றுகளைக் கொண்டு இலகுவாக நிறுவிவிட முடியும் என்கின்றனர் ஆய்வுக்குழுவினர்.

மூன்று மீட்டர் நீள அகலம் கொண்ட மூன்று குழிகளை அகழ்ந்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மன்னார்
மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள மாதோட்டம் துறைமுகத்தில் இருந்து அனுராதபுரத்தின் புராதன இராசதானிக்கு அமைக்கப்பட்டிருந்த வீதியோரத்தில் இந்தக் குடியிருப்புக்கள் அமைந்திருப்பதாக நம்பப்படுகின்றது.

இப்பண்பாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டவை எனக் கருதக்கூடிய கல்மணிகள், கல்லினால் வடிவமைக்கப்பட்ட காப்புகள், சங்கு வளையல்கள் என்பன இங்கிருந்து அதிகளவில் கிடைத்துள்ளன. இப்பொருள்களுடன் இவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்ட கற்கள், கண்ணாடிகள்,  சங்குகள், மட்பாண்ட அச்சுகள், இரும்புருக்கு உலைகள் என்பனவும் கிடைத்துள்ளதன் மூலம், இரும்புருக்கு, கல்மணிகள், கண்ணாடிப்பொருட்கள், மட்பாண்டங்கள் என்பவற்றை உற்பத்தி செய்யும் சிறுதொழில் கூடங்கள் இங்கு இருந்திருப்பதாகக் கருத முடியும்.  இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள யானைகள், காளைகள் போன்றவற்றிற்குக் கட்டுகின்ற மணிகள் இலங்கையின் எந்தப்பாகத்திலும் காணப்படாதவைகளாக இருக்கின்றன.

ஐயனார் வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ள மதுரையில் கூட இந்த வகையான மணிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. அந்தவகையில் இந்தப் பிரதேசம் தனித்தன்மை வாய்ந்த ஒன்று என்றும் இப்பகுதியில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள மேலும் பல முடிச்சுக்களை அவை அவிழ்க்கும் என்கின்றனர் ஆய்வுக் குழுவினர்.

9. கரியாலை நாகப்படுவான் -
கிளிநொச்சி மாவடடத்திலுள்ள பூநகரி பிரதேச செயலர் பகுதிக்கு உட்பட்ட பிரதேசம் கரியாலை நாகபடுவான்.  யாழ்ப்பாண பல்கலைக்கழக நிதியுதவியுடனும் வடமாகாண மத்திய கலாசார நிதியம் மற்றும் தொல்லியற் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடனும் இப்பகுதியில் நிகழ்ந்த அகழ்வாய்வில் பூர்வீக மக்களது வழிபாட்டு மையமொன்றும் மேலும் சிலபுராதன தொன்மங்களும் வெளிப்பட்டிருக்கின்றன.

அகழ்வுக் குழியின் ஒரு பகுதியில் சமய வழிபாட்டு மையத்தின் வடிவம் ஒன்றும், அவ்வாய்வுக் குழியின் நடுப்பகுதியில் சிறிய வாய்ப்பகுதியை உடைய பெரிய மண்பானையும், அதன் மேற்பகுதியில் கவிழ்ந்த நிலையில் ஒட்டி வைக்கப்பட்ட சிறிய கலசங்களும் காணப்பட்டன. இப்பானையைச் சுற்றி சுடுமண்ணாலான சதுரவடிவான மூன்று பீடங்களும், அப்பீடங்களில் அமர்ந்திருந்த தெய்வ அல்லது மனித உருவத்தின் கால்கள் இப்பானையைத் தொட்ட நிலையிலும் காணப்பட்டன. தற்போது இவ்வுருவங்களின் தலைப்பகுதிக்குரிய முடிகள், காதுப்பகுதிகள் மட்டும் கிடைத்திருப்பதால் இவ்வுருவங்கள் மனிதனா அல்லது தெய்வமா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த மூன்று பீடங்களை அடுத்து நான்காவதாக நடுவில் உள்ள பானையை ஒட்டி மண் சட்டியின் விளிம்பில் படமெடுத்த நிலையில் ஐந்து தலைநாகம் காணப்படுகிறது. நாக இனக் குழுவின் தொடக்ககால வழிபாட்டு மையமாக இது இருந்திருக்க வேண்டுமென்ற முடிவுக்கு ஆய்வுக்குழுவினர் வந்திருக்கிறனர்.

வடஇலங்கையில் இன்றும் ஊற்றுப்புலம், இரணைமடு, மானிப்பாய், நவாலி போன்ற இடங்களில் பாம்புப்புற்றுக்கு படையல் செய்து வழிபடும் மரபு காணப்படுகிறது. சில இடங்களில் பாம்புபுற்று கருவறையில் வைக்கப்பட்டு அதன் மேல் ஆலயம் கற்களால் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, புளியம்பொக்கணை நாகதம்பிரான், புதூர் நாகதம்பிரான், நயினை நாகபூசணி போன்ற நாகவழிபாட்டு முறைகளைக் கொண்ட கோவில்கள் ஈழத்தமிழர் வாழ்வியலில் பிணைந்திருக்கின்றன.  நாகத்தை குல மரபு தெய்வமாகக் கொண்டுவழிபடும் மக்கள் தமது பெயர்களின் முன்னொட்டுச் சொல்லாக “நாக” என்ற பெயர் கொண்டும் அழைக்கும் மரபும் இருந்து வருகிறது. 

ஏற்கனவே நாகர்கள் இலங்கையில் வாழ்ந்த இனக்குழு என்பதற்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுஆதாரங்கள் பலவற்றை பேராசிரியர் பரணவிதான, சிரான்தெரணியகல ஆகியோர் வெளியிட்டுள்ளனர். நாகபடுவான் என்ற பெயரே நாகத்தைக் குலமரபாக்க கொண்ட மக்கள் வாழ்ததன் அடையாளம் என்பதை இவ்வாய்வுக் குழுவில் ஒருவரான கலாநிதி இரகுபதி அடிக்கோடிட்டிருக்கிறார்.

10. குசாணமலை -

மட்டக்களப்பு மாவட்டத்தில், செங்கலடியில் இருந்து தெற்கே 10 கி.மீ தொலைவில் பதுளை வீதிக்கு மேற்காக அமைந்துள்ளது குசாணமலை. காடுகளும், சிறுபற்றைகளும் சூழ்ந்த இக்குசாணமலைப் பகுதியில் தற்போது குடியிருப்புக்கள் காணப்படாவிட்டாலும் முன்பொருகாலத்தில் செறிவான குடியிருப்புக்களும், மக்கள் நடமாட்டமும் இருந்ததற்கான ஆதாரங்கள் செறிவாகக் காணப்படுகின்றன. இங்கு பரவலாகக் காணப்படும் கருங்கல் தூண்களும், செங்கட்டியால் அமைக்கப்பட்ட இருப்பிடங்களின் அழிபாடுகளும், பரவலாகக் காணப்படும் மட்பாண்டங்களும், இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள ஏழு பிராமிக் கல்வெட்டுக்களும் இங்கு புராதன குடியிருப்புக்களுடன் சமயம் சார்ந்த கட்டடங்களும் இருந்துள்ளன என்பதை உறுதி செய்கின்றன.

தென்னாசியாவின் தமிழகம் தவிர்ந்த பல வட்டாரங்களில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.4 ஆம் நூற்றாண்டு வரை பிராமியே கல்வெட்டு மொழியாக இருந்துள்ளது. ஆனால் குசாணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட இரு கல்வெட்டுக்களில் தமிழகத்தைப் போல் தமிழ்மொழிக்கே உரித்தான எழுத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழுக்குரிய தனித்துவமான இவ்வெழுத்துக்களிலிருந்து இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பிராந்தியத்தில் தமிழ்மொழியின் பயன்பாடு இருந்ததெனக் கூறலாம்.

அண்மைக்காலங்களில் மட்டக்களப்பிலுள்ள பிராமிக்கல் வெட்டுக்களை ஆய்வு செய்துவரும் பேராசிரியர் சி.பத்மநாதன் தனது களவாய்வின் போது தமிழ்மொழிக்கே சிறப்பான “ன” மற்றும் “ற” போன்ற எழுத்துக்களை அடையாளம் கண்டதாககே கூறியுள்ளார். மேலே பட்டியலிடப்பட்ட தொல்லியற் தளங்கள் சில உதாரணங்கள் மட்டுமே. இவற்றை வரிசைப்படுத்தியதில் எந்த எடுகோள்களும் பின்பற்றப்படவில்லை.

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம், கல்முனை, மணித்தலை, பூநகரி, மட்டுவில், கோணாவில், நாகமுனை, வீரபாண்டியன்முனை, காக்கைதீவு, மண்ணியாறு, தென்னியங்குளம், இலுப்பைக்கடைவை, குருந்தன்குளம், பனங்காமம், மன்னார், மாதோட்டம்,பல்லவராயன்கட்டு, முத்தரையன்கட்டு, அக்கராயன்குளம், பொம்பரிப்பு, வலிகாமம், நல்லூர், குடமுருட்டியாறு, முல்லைத்தீவு, அம்பலப்பெருமாள், சோழியகுளம், இப்பொத்தானை, வவுனியா, பதவியா, நிலாவெளி,கந்தளாய் என ஆய்வுக்குரியனவாக அடையாளப்படுத்தப்பட்ட பட்டியலின் நீளம் மிகப் பெரியது.

இப்பிரதேசங்களில் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்ட தொல்லியற் சான்றுகளும் கூட பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.மூன்று தசாப்தங்களாக உள்நாட்டுப் போர்ச்சூழலில் இருந்த இப்பிரதேசங்களில், தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் நடத்தப்படுவதிலும், அத்தளங்களைப் பாதுகாப்பதிலும் நடைமுறைச் சாத்தியங்கள் இல்லாது இருந்தன. 2009 ஆம்ஆண்டில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் இதுவரை இவ்விடயங்களில் அடைந்த முன்னேற்றம் என்பதும்பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பெரும்பாலான தொல்லியல் துறையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் இன்னும் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாத நிலையிலேயே இருப்பதும், இலங்கைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் 'வேலியேபயிரை மேய்வது போன்று'  தொன்மங்கள் சிதைக்கப்படுவதும், திட்டமிட்ட வரலாற்றுத் திரிபுகளுக்கு ஏதுவானதாக அவை தன்மைமாற்றம் செய்யபடுவதும் கொடுமையான விடயம். இதய சுத்தியுடன் அரச இயந்திரங்கள் செயற்பட ஆரம்பித்தால் இந்ததொல்லியற்தளங்கள் உலகம் வியக்கும் பல்வேறு விடயங்களை இந்த உலகிற்கு நிறுவும். அந்த விடயங்களால் நிச்சயம் உலக அரங்கில் இலங்கையின் கீர்த்தியும் அதிகரிக்கும் என்பது திண்ணம். 


தொகுப்பு: வேணுதன் மகேந்திரரட்ணம் 
நிகழ்ச்சித் தொகுப்பாளர் CMR வானொலி& TVi தொலைக்காட்சி
நிமிர்வு ஜனவரி   2020 இதழ்  

1 comment:

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.