புலமும் களமும் புரிதல் அவசியம்




ஈழத்தமிழர்கள் உலகமெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள். ஏதிலிகளாக அல்ல எழுச்சிமிக்க இனமாக. புலத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் பிரதான வர்க்கத்தினருடன் போட்டிபோடும் பெரிய தொழிலதிபர்களாகவோ அன்றி பிரதான வர்க்கத்தின் முன்னணி நிறுவனங்களில்  பெரிய பதவிகளில் பணிபுரிபவர்களாகவோ தம் கடின உழைப்பால் உயர்ந்து நிற்கிறார்கள்.

ஓர் இனமாக தமிழன் சாதிக்கத் தவறியிருந்தாலும்  தனிப்பட்ட முறையில் பலர் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். ஆனால் தாயகத்தில் நிலமை வேறாக உள்ளது. அங்குள்ள சிலர் உழைப்பை மறந்தவர்களாக, வெளிநாடுகளிலிருந்து வரும் பணத்துக்காக ஏங்கிக் கிடப்பவர்களாக எதுவித முயற்சியுமெடுக்காமல் வீணே காலத்தை கழிப்பவர்களாக வாழ்கிறார்கள்.

ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் இதற்கான  காரணத்தை கண்டறிய முன்வர வேண்டும். எமது இனம் தன்மானத்தோடு தன்னிறைவாக தலை நிமிர்ந்து வாழ புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.

ஈழத்தமிழர்களின் மிகப்பெரிய பலவீனம் ஒற்றுமையின்மை. வெள்ளையர்களின் ஆட்சி முடிவுக்கு வரும் வரை ஓன்றாயிருந்த தமிழர்கள் அதன்பின் பதவி மோகத்திலோ அன்றி அடையாள தாகத்திலோ தெரியவில்லை பிரிந்தே செயற்பட்டார்கள்.50 களில் உரிமைக்காக தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள ஏகாதிபத்தியத்தோடு அகிம்சை வழியில்  போராடிய போதும் பிரிந்தே நின்றார்கள். இன்று பல கூறாக பிரிந்து நிற்கிறார்கள்.

பயிற்சியும் கொடுத்து ஆயுதம் ஏந்தி போராட வழி சமைத்தது அண்டை வல்லரசு. தனி ஒரு அமைப்பாக இயங்க விடாமல் பல இயக்கங்களையும் தோற்றுவித்ததும் அதே வல்லரசுதான். விடுதலைக்காக போராட சென்ற இயக்கங்களுக்கிடையில் பிணக்குகளைத் தோற்றுவித்து அவர்களுக்குள் உட்பகையை உருவாக்கி சகோதரக் கொலைகளை நடத்தியதும் அதுதான். அதையும் தாண்டி ஒரு இயக்கம் தனிப்பெரும் இயக்கமாக வளர்ந்தபோது அதை அழித்ததும் அந்த அரசுதான். தனி இயக்கம் கோலோச்சிய போது உதிரி இயக்கங்களுக்காக புலத்திலும் களத்திலும் ஒரு சிறு தொகை மக்கள் ஆதரவழித்த போதும்  புலம்பெயர் சமூகம் ஒரு குடைக்கீழ் அணிதிரண்டிருந்தது என்றே சொல்வ வேண்டும். 2009 ஆம் ஆண்டு போராட்டம் முடிவுற்ற போது புலம்பெயர் சமூகம் இரண்டானது.

இதை சாட்டாக வைத்து உதிரி இயக்க ஆதரவாளர்கள் செயற்பட்ட போது புலம்பெயர் சமூகம் சுக்கு நூறாகியது. போராடி தமிழீழம் காண்போம் என சென்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு நிதி சேகரிக்கின்றோம் என செயற்பட்ட புலம்பெயர் ஏஜன்டுகளால் நட்டாற்றில் விடப்பட்டார்கள். போதாததற்கு அகப்பட்ட நிதியையோ அல்லது அமைப்பின் பேரில் வாங்கப்பட்ட சொத்துக்களையோ சுருட்டிக் கொண்டபோது புலம்பெயர் சமூகம் ஏமாற்று பேர்வழிகளை இனம் கண்டு கொண்டதால் மனதில் மண் மீதும் மக்கள் மீதும் அக்கறை இருந்த போதும் விலகியே வாழத் தலைப்பட்டார்கள்.



இன்று ஆளுக்கு ஒரு அமைப்பு என உருவாக்கி தமக்கென ஓர் கூட்டத்தை வைத்துக் கொண்டு இனத்துக்கான தேவைகளில் இணக்கமாக செயற்படாமல் அடையாளத்தையும் அதிகாரத்தையும் முன்னிலைப்படுத்தும் அவாவில் பிரிந்தே நிற்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது களத்திலுள்ள எம் மக்கள்தானென்பதை புரியாமல் போட்டி போடுகிறார்கள். களத்தின் தேவைகள் பல. ஒவ்வொருவர் ஒவ்வொன்றை செய்யலாம். பாரிய பொது வேலைத்திட்டம் வரும்போது அனைவரும் கைகோர்த்து செயல்படலாம். ஆனால் ஏன் முடியவில்லை?

புலத்தில் இப்படியான ஏமாற்றமென்றால் களத்தில் நிலைமை மோசமாகிப் போயுள்ளது. 2009 போராட்டம் முடிவுக்கு வந்தவுடன் அரசாங்கம் தமிழர்களை பலவழிகளாலும் சீரழித்து தலையே தூக்க முடியாமல் செய்வதற்கான திட்டத்தை வகுத்தது. ஒன்று ஒவ்வொரு 2 கிலோமீற்றருக்கும் ஒரு மதுசாலையமைத்தது. இரண்டாவதாக இராணுவம், பொலிசின் அனுசரணையோடு வாள்வெட்டு கலாச்சாரத்தையும் கஞ்சா கலாச்சாரத்தையும் வளர்த்தது. மூன்றாவதாக விபச்சாரத்தை வளர்த்தது. இவைக்கான நிதி எங்கேயிருந்து கிடைக்கிறது என்று பார்த்தால் அதற்கும் புலம்பெயர் சமூகம்தான் உண்மை தெரியாமல் உதவிவருகிறது.

இன்றைய புலம்பெயர் சந்ததி தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்து அந்த சுவையோடு வெளிநாடுகளுக்கு வந்தது. அதற்கு தாய் மண்மேல் சிறு பிணைப்பாவது இருக்கும். அதனால் அங்கிருப்பவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பண உதவி கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அதனால் உழைத்து தனது வாழ்வையும் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய தேவை அவனுக்கு இல்லாமல் போகிறது. தனது பெற்றோர் காலையிலிருந்து மாலை வரை வீட்டில் படுத்துக்கிடந்துவிட்டு மாலையில் சென்று நடுச்சாமம் வரை மதுசாலையில் மயங்கிக் கிடப்பதை பார்க்கும் பிள்ளைகள் தமது எதிர்காலத்திற்காக தம்மை வளமாக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களாக வளர்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. இன்று தனது பெற்றோருக்கு நிதியுதவி செய்யும் புலம்பெயர் நண்பர்களின் பிள்ளைகள் தங்களுக்கு எந்தவித உதவியும் செய்ய மாடடார்கள் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருப்பது பெற்றோர்கள் தான். அவர்களே ஊதாரியாகத் திரியும் போது பிள்ளைகள் எப்படிக் கல்வி கற்பார்கள்? உழைக்க கற்றுக் கொள்வார்கள்? இன்னும் 15 வருடங்கள் கழிய அடுத்த சந்ததிக்கு எந்த உதவியும் புலத்திலிருந்து கிடைக்காமல் போக உழைக்கும் ஆற்றலும் இல்லாது போக பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இறுதியில் பணம் படைத்தவர்கள் வீட்டில் வேலைக்காரர்களாக போய் சேர்வார்கள். வீட்டு வேலை தேடி தெற்கிற்கு செல்லும் நிலை வரும். இதைத்தான எமது வருங்காலச் சந்ததிக்கு செய்யப் போகிறோமா?. இதை புலம்பெயர் சமூகம் தடுக்க வேண்டும். தீவிரமாக சிந்திக்க வேண்டும்.



எங்களுக்கென்றோர் தாயகமிருந்தது. அதில் நாம் ஒரு தேசிய இனமாக மிகவும் சந்தோஷமாக இருந்தோம். பின்பு நாம் ஒடுக்கப்பட்டோம். சுதந்திரத்தை வேண்டினோம். அடிபட்டோம். மிதிபட்டோம்.

யூத இனம் தனது தேசத்திலிருந்து ரோமானியர்களால் விரட்டியடிக்கப்பட்டபோது அவர்களும் பல நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். எம்மை விட பலமடங்கில் அவர்கள் தாம் புகுந்த நாட்டில் பணம் படைத்தவர்களானார்கள். அதைத்தாண்டி அவர்கள் மிகவும் ஒற்றுமையாக செயல்பட்டார்கள். அவர்களுக்கென ஒரு பாலை நிலத்தை கொடுத்தபோது அவர்களின் ஒற்றுமை பலத்தாலும், நிதி பலத்தாலும், நல்லதொரு தலைமையாலும் அதில் பல தொழிற்சாலைகளை உருவாக்கினார்கள்.

இன்று முழு உலகையுமே கட்டியாளும் வல்லமை படைத்தவர்களாக இருக்கிறார்கள். எங்களில் பாதிப்பேர் இன்னமும் நாட்டிலேயே வாழ்கிறார்கள். அவர்களிடையே பொருளாதார பலத்தை புலம்பெயர் சமூகம் கட்டியெழுப்பும் போது அரசியல் விடுதலைக்கான பாதை தானே திறக்கும். எதிர்கால சந்ததி தெற்கிற்கு வீட்டு வேலைக்காரர்களாக போக வேண்டிய நிலையும் வராது.

இதற்கு என்ன செய்யலாம்?

புலம்பெயர்ந்த நாடுகளில் உவ்வொரு ஊருக்கும் ஓர் சங்கம் இருக்கிறது. உடுப்பிட்டி நலன்புரிச் சங்கம் தனது ஊரை சுற்றி வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்பிற்கென ஓர் தையற்தொழிற்சாலயை உருவாக்கி 25 பேருக்கு வேலை வழங்கி 25 குடும்பத்திற்கு வாழ்வாதாரம் வழங்குவது போல் ஒவ்வொரு ஊர்ச் சங்கமும் தனது ஊரிலே ஒரு தொழிற்சாலையை ஏன் உருவாக்க கூடாது? எந்தக் கிராமத்தில் என்ன தொழிற்சாலையை உருவாக்கலாம் என்ற கணிப்பை செய்ய வேண்டியது தாயகத்திலுள்ள அமைப்பாகத் தானிருக்கலாம். அப்படியான திட்டங்கள் வகுக்கப்படும் போது அதனை புலத்திலுள்ள ஊர்சங்கங்கள் நிறைவேற்ற முன்வர வேண்டும்.

எதைத் தயாரிக்கிறோம் எவ்வளவு தயாரிக்கிறோம் என்பதை பொறுத்து தொழிற்சாலையை நிறுவுவதற்கான செலவு  50,000 இலிருந்து 200,000 டொலர்கள் வரை தேவைப்படும். இது மாகாண அரசினால் செயற்படுத்தப்பட வேண்டிய திட்டம். ஆனால் ஆரம்ப உதவிகளுக்கும், அதற்கான திட்டமிடல் ஒழுங்கமைப்பு  ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் யாழ்ப்பாணமுகாமையாளர் சம்மேளனம்  (Jaffna Manager's Forum)என்ற அமைப்பை நாடலாம். எந்தெந்த ஊரில் எத்தயை தொழிற்சாலையை உருவாக்கலாம் என்ற தகவல்களை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். தொடர்பு கொள்ளுங்கள் நிரஞ்சன் -077-304-3206. பொறுப்பான சமூகத்தை உருவாக்கி பலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி அரசியல் சுபீட்சம் காண்போம்.


வைரமுத்து சொர்ணலிங்கம்
நிமிர்வு ஜனவரி   2020 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.