இயற்கையிலிருந்து விலகியதால் இன்னல்களை எதிர்கொள்கிறோம்





இயற்கை என்றால் என்னவென்று தெரியாத பிரச்சினையொன்று எல்லோருக்கும் வந்துவிட்டது.  ஆனால், இயற்கையோடு சேர்ந்து வாழாமல் நாம் இருப்போமாக இருந்தால் இயற்கை எங்களை திருப்பி அடிக்கும். அழித்தும் விடும். 

நிறைய விடயங்களை நாம் இன்று இயற்கை வழியிலிருந்து கைவிட்டு விட்டோம். நாங்கள் நீண்ட தூரம் இயற்கையிலிருந்து விலகி வந்துவிட்டோம்.  இயற்கை வழி இயக்கத்தின் இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு மருதனார்மடத்தில் உள்ள யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவனத்தின் அதிபர் கந்தசாமி ஆற்றிய உரையிலேயே மேற்படி தெரிவித்தார்.

தொற்றாநோய்களான இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை வந்தால் மருத்துவர்கள் சொல்வார்கள் நடைப்பயிற்சியில் கவனம் செலுத்துங்கோ என்று. விடிகாலை எழுந்து 2 கிலோமீற்றர் தூரம் நடக்க சொல்லுகின்றார்கள். அதைத்தான் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் விடிய கோயிலுக்குச் சென்று 3 தடவை அல்லது 5 தடவையேனும் வீதியைச் சுற்று என்று. இப்பொழுது எமக்கு கோயிலுக்கு போகவும் நேரம் இல்லை. வீதி சுற்றவும் நேரம் இல்லை. முன்னர் தியானம் இருந்திருக்கின்றது. இப்பொழுது நாங்கள் தியானத்தை கடைப்பிடிப்பதில்லை. 

இப்பொழுது 45 வயதிற்கு பிறகு நிறையப் பேருக்கு கால் உளைவு, முழங்கால் மூட்டுக்களில்  பிரச்சனை கல்சிய குறைபாடு என்று சொல்லுகின்றார்கள். நாங்கள் தொழிற்பட்டால் தான் கல்சியத்தை உடல் உறிஞ்சும். நாங்கள் தொழில்படாவிட்டால் கல்சியத்தை உறிஞ்சாது. முன்னர் இயற்கையாகவே கல்சியத்தை உறிஞ்சக் கூடியமாதிரி இருந்தது. இன்று கல்சியத்துக்கு குளிசை போடும் பழக்கம் வந்துவிட்டது.

உணவுப்பழக்கவழக்கத்தில் நாங்கள் நல்லா மாறிவிட்டோம். பாஸ்தா, நூடுல்ஸ் என்று வெள்ளைக்காரனின் சாப்பாடுக்கு மாறி வருகிறோம். புறோயிலர் கோழிக்கு முன்னர் ஒன்றரை மாதம் கணக்கு வைத்திருந்தவன் இப்பொழுது ஒரு மாதத்தில் நிறை வருவதற்காக பாவிக்கின்ற உணவில் நிறைய ஹோமோன் கலக்கின்றார்கள். இந்த ஹோமோன்கள் அந்த இறைச்சியோடு எங்களுக்குள் வந்து நிறையப்பிரச்சனையை தருகின்றது. முன்னைய காலங்கள் ஒரு பெண்பிள்ளை பூப்படைவதென்றால் 11, 14 வயதாகும். இப்பொழுது சிறுவயதிலே பூப்படைகின்றார்கள். வெளிநாட்டில் இன்னும் சிறுவயதில் பூப்படைகின்றனர். மலட்டுத்தன்மை இருக்கின்றது. இப்பொழுது நிறையப் பேர் 5, 6 வருடங்கள் பிள்ளை இல்லாமல் இருக்கின்றனர். இப்பொழுது ஆண்களுக்கு மார்பு பெரிதாகின்றது. இதற்கும் புறோயிலர் கோழி தான் காரணம்.

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகின்ற யூரியா இரண்டாம் மகாயுத்தத்தில் பாவிக்கப்பட்ட ஒரு இரசாயனப் பொருள். அதனால் தான் இங்கு யுத்தம் நடக்கின்ற பொழுது அரசாங்கம் யூரியாவை தடை செய்தது. ஏனென்றால் அதை வெடிபொருளாக பாவித்துவிடுவார்கள் என்று. இரண்டாம் மகாயுத்தத்திற்கு யூரியா தயாரித்த தொழிற்சாலைகளை மூடிவிடமுடியாது. ஆகவே அவற்றை உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளாக மாற்றினார்கள். 1960 ஆம் ஆண்டுகளுக்கு பின்னரே நாங்கள் இங்கு யூரியா பாவிக்கத் தொடங்கியது. யூரியா இன்று மாலை போட்டால் காலையில் போய் பயிரை பார்த்தால் பச்சை பசேல் என்று இருக்கும். 

 1960 ஆம் ஆண்டுற்கு பின்னர் தான் கிருமிநாசினி பாவிக்கத் தொடங்கினோம். இப்போது  அரசாங்கமே மானியத்தில் நிறைய செயற்கை உரங்களைத் தருகின்றது. யூரியா அதிகம் பாவிக்கப்பட்டது யாழ் மாவட்டம். 

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தான் குடிநீரில் நைதிரேற்றின் அளவு கூட. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது கர்ப்பிணித் தாய்மார்கள், பிறந்த குழந்தைகள் தான். யாழ்ப்பாணத்தில் பிறக்கின்ற 1000 குழந்தைகளில் 5 குழந்தைகளுக்கு இதயத்தில் துவாரம் வந்துவிடும். அப்படி என்றால் நல்ல இரத்தமும் அசுத்த இரத்தமும் கலக்கும். இதயம் என்பது இரத்தத்தை அமுக்கிப் பாய்ச்சும் ஓர் உறுப்பு. இப்படி துவாரம் ஏற்படுகின்ற பிள்ளை உடனே இறக்கும். அல்லது இரண்டு வயதிற்குள் இறக்கும்.  யாழ்ப்பாணத்தில் நிலப்பரப்புக்கள் சிறியது. மலசலக்குழியும் கிணறும் கிட்டகிட்ட இருந்தால் மலம் சிதைவடையும் போது அமோனியா வருகிறது. அக்குழிகளில் குழாய் வைத்திருப்பதால் அமோனியா மேலே செல்லுகின்றது. ஆனால் நைதிரேற் தண்ணீரோடு கரைந்து கிணற்றுக்குள் வருகின்றது. மலக்குழிக்குக் கிட்ட கிணறு இருப்பதால் நைதிரேற் பிரச்சனை இருக்கின்றது. பொம்மை வெளியில் முஸ்லிம் பகுதிகளில் நடுவீட்டுக்குள் மலசல குழி இருக்கின்றது. 

5 அடி தள்ளி கிணறு இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் கடைகளின் பின் பக்கம் பார்த்தால் மதில் இருக்கும். மதிலின் ஒரு பக்கம் கிணறும் மற்றைய பக்கம் 3 அடி தள்ளி மலசலகூடமும் இருக்கும். சுகாதாரத்திணைக்களம் பரிசோதித்து பார்த்த பொழுது எல்லா தண்ணீரிலும் மலத்தொற்று கிருமிகள் இருப்பது தெரிய வந்தது. அவ்வளவு கடையும் உடனடியாக  பூட்டப்பட்டது. 

இயற்கையில் இருந்து நாங்கள் தள்ளித்தள்ளி போக இயற்கை எமக்கு பாடம் சொல்லிக் கொண்டிருக்கின்றது. நெல்லுக்கு எல்லா மருந்தும் சரிவரவில்லை. மார்சல் சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றது. மார்சல் அடித்தால் ஒரு மாததிற்கு அறுவடை செய்யக்கூடாது.  அதனை விவசாயி அடிக்க அதிலுள்ள நச்சுத்தன்மை எங்களுடைய உடலில் சேருகின்றது. இதனால் புற்றுநோய் தாக்குகிறது. மகரகம வைத்தியசாலையில் யாழ்பாண புற்றுநோய்க்கு என்று ஒரு விடுதியே வைத்திருக்கின்றார்கள். மரக்கறி, பழங்கள்  போன்றவற்றால் புற்றுநோய் வருகின்றவர்களுக்கெல்லாம் யாழ்ப்பாண கான்சர் என்றே பெயர் வைத்துவிட்டார்கள். இப்பொழுது தெல்லிப்பளையில் புற்று நோய்க்கு தனிப்பிரிவு தொடங்கி விட்டார்கள். பசுமைப் புரட்சியின் தாக்கத்தால் அதிக விளைச்சல் வரவேண்டும் என்பதற்காக பாரம்பரிய இனங்களெல்லாம் விட்டு புதிய இனங்கள், உரப்பசளை பிரயோகம், கிருமிநாசினி பிரயோகம் எல்லாம் போட்டு விளைவை அதிகரிக்கப்படுகிறது. 

இப்பொழுது கிடைக்கின்ற சம்பளத்திற்கு மேல் இரட்டிப்பாக போட்டால் தான் தொற்றா நோய் தொற்று நோய் எல்லாவற்றிற்கும் தனியார் மருத்துவமனைகளில் பதிவு செய்து மருந்து எடுத்துக்கொண்டு வர சரியாக இருக்கும். அதிலிருந்து நாங்கள் தப்பவேண்டும் என்றால் இயற்கைவழிக்குத் திரும்ப வேண்டும். எங்கள் கல்லூரியின் பழைய மாணவரான கிரிசன் முழுமையான இயற்கை விவசாயியாக மாறி எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்கின்றார். முதலில் நாங்கள் சிந்திக்கப் பழக வேண்டும். இந்தியாவில் இது முன்னேற்றம் அடைந்துள்ளது. அங்கு கிராமங்கள் இயற்கையிலிருந்து மாறவில்லை. ஆனால் எங்களுடைய கிராமங்களில் பூச்சிநாசினி, உரப்பசளை என்பவற்றை நீண்டகாலத்திற்கு முதலே பாவிக்கத் தொடங்கி விட்டோம். எங்களை உரப்பசளை பாவிக்கத் தூண்டியதே அரசாங்கம் தான். மானியம் 50 வீதம். அதாவது 2000ரூபா உரப்பசளை என்றால் 1000 ரூபாவிற்கு மானியத்தில் தருவார்கள். அதனால் எல்லா விவசாயிகளும் உரப் பசளைகளைப் பாவிக்கப் பழகி இப்பொழுது திண்டாடுகின்றோம். 



எப்பொழுதும் நாங்கள் எங்களுடைய எதிர்கால சந்ததிக்கு தீங்கு விளைவிக்காமல் எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய வேண்டும். அதற்கு நாங்கள் இயற்கைவழிக்கு போகவேண்டும். எங்களுக்கு எங்களது தாய் தந்தையர் வீடெல்லாம் கட்டி சீதனம் தந்தார்கள். அதே போல் நாங்கள் எங்களுடைய பிள்ளைகளுக்கு செய்ய முடியாது. ஏனென்றால் அவ்வளவு பணமும் வைத்தியசாலைக்கு கொடுக்கப் போகின்றோம். வைத்தியர்களும் முன்னர் போல 100 ரூபாக்கு எல்லாம் வர மாட்டார்கள். இப்பொழுது 1000 ரூபாவிற்கு மேலேதான். அதற்கு எங்களுடைய உழைப்பு போதாது. ஆகவே நாங்கள் எங்களுடைய உடம்பை இயற்கையாகவே பாதுகாக்க வேண்டும். அதற்கு இயற்கையான உணவை சாப்பிட வேண்டும். இயற்கையாகவே மரக்கறிகள் பழங்கள் உற்பத்தி செய்பவர்களை ஊக்கிவித்தால் தான் உணவு வரும். 

விவசாயி ஒரு காலமும் தனக்காக மட்டும் உழைப்பதில்லை. சேற்றில் விவசாயி கால் வைக்காவிட்டால் நாங்கள் சோற்றில் கைவைக்க முடியாது என்று சொல்லுவார்கள். இப்பொழுது நாங்கள் சோறில்லாவிட்டால் கொத்துரொட்டியோ ஏதோ ஒன்று வாங்கிச்  சாப்பிடுவோம். ஆடிக்கூழ், ஒடியற்கூழ் என எவ்வளவு சத்து உணவை சாப்பிட்ட சமூகம் நாங்கள்.  எம்மவர்கள் முன்னர் பூப்படைந்தவர்களுக்கு உழுத்தம் களி, உழுத்தம் மா சாப்பாடு கொடுப்பார்கள். உழுத்தம் கோதில், எள்ளில்  ஒமேகா எனும் ஊட்டச்சத்து அதிகளவு இருக்கின்றது. நாங்கள் இப்பொழுது எப்பொழுதாவது இருந்திட்டு ஒரு நாள் தான் தோசை சாப்பிடுகின்றோம். அதுவும் கடையிலை சாப்பிட்டால் அதுவும் இருக்காது வெறும் கோதுமை மாவிலை மட்டும் தான் சுடுகின்றார்கள். சலரோகம் வந்தால் B 12,  B 6  தேவை என்பார்கள். அவையெல்லாம் பழைய சோற்றில் இருக்கின்றது. 

முன்னைய காலங்களில் 4, 5 பிள்ளைகள் இருப்பார்கள். கைக்குத்தல் அரிசி சோறு சாப்பிட்டோம்.   அம்மா மூத்த பிள்ளைகளை அப்பாவோடு தோட்டத்திற்கு போகச் சொல்லி  சொல்லுவார். மற்றப் பிள்ளைகளை வீட்டிலை நில் நெல்லை குத்து என்று சொல்லுவார். நெல்லு குத்திப்போட்டுத்தான் விளையாட மைதானத்திற்கு போகலாம். இதனால் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே பயிற்சி கிடைத்தது. உரலில் நெல்லை இடிப்பதாலும் ஒரு நன்மை இருக்கின்றது. இடிக்கும் போது வயிற்றுத் தசைகள் அழுத்த்தும் போது இன்சுலீன் சுரக்கும் அளவு அதிகரிக்கும். முன்னையவர்கள் இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்தார்கள். இப்பொழுது இன்சுலீன் சுரக்கும் தன்மை குறைவு. 

கோழி வளர்க்கும் போது பெரிய காணி என்றால் திறந்து வளர்ப்பது சிறந்தது. இப்பொழுது இங்கே விழிப்புணர்வு ஏற்பட்டு மக்கள் புறோய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதை குறைத்துக் கொண்டு வருகின்றார்கள். இப்பொழுது நாட்டுக் கோழிக்கே கேள்வி அதிகம். இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் க.பொ. த. உயர்தரப் பரீட்சையில் முதல்நிலை பெற்ற மாணவியின் குடும்பத்தில் தந்தை காணாமலாக்கப்பட்டுள்ளார். தாயாருக்கு வலது கை இல்லை. மூன்று பிள்ளைகள். இந்நிலையில் அவர்கள் நாட்டுக்கோழிகளை திறந்த வெளியில் வளர்த்து முட்டை, கோழி என்பனவற்றை விற்பனை செய்தே வாழ்வாதாரத்தை நடத்துகின்றார்கள்.  இதுவும் நாட்டுக்கோழிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

முன்னர் குடித்த தண்ணீரை இப்பொழுது எங்களால் குடிக்க முடியாமல் இருக்கின்றது. அந்த தண்ணீர் இப்பொழுது சுவை மாறி  வருகின்றது. இதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. யாழ்குடாநாட்டில் மழைத் தண்ணீரெல்லாம் பாறைகளினூடாக போய் கீழுக்குள் நிற்கின்றது. அது கடல் தண்ணீர் மேலெழுந்து வராமல் அமத்தி நிற்கின்றது. இதில் ஒரடி தண்ணீரை நாங்கள் உறிஞ்சி எடுத்தால் 45 அடி கடல்நீர் மேலே வரும். இதற்கு உதாரணம் நிலாவரை கிணறு. அதில் 125 அடிக்கு கீழே உப்புநீர். நல்ல நீர் அமுக்கமாக உப்புநீரை கீழே வைத்திருக்கின்றது. 

இப்பொழுது தண்ணீர் சேமிப்பதை விட பாவிக்கும் வீதம் அதிகமாக இருக்கின்றது. முன்னர் குளமோ கிணறோ ஒன்று இருந்தால் ஆறேழு குடும்பம் அதைத்ததான் பாவிக்கும். இப்பொழுது தாய்க்கு ஒரு கிணறு பிள்ளைக்கு ஒரு கிணறு என குழாய்க் கிணறு அடிக்கின்றார்கள். முன்னர் வாளியாலை அள்ளுவதால் பஞ்சியில் கொஞ்சமாக குளித்தோம். இப்பொழுது மோட்டர் அதனால் தண்ணீர் வீண்விரையம் ஆக்கப்படுகின்றது. பாவிப்பது அதிகரித்ததால் கீழே இருக்கின்ற கடல் நீர்  மேலே வருகின்றது.தீவுப்பகுதி, வடமராட்சி பகுதிகளில் பனை அதிகம். சொட்டு நீரையும் வெளியே விடாமல் நிலத்துக்கு  உள்ளே செலுத்துகின்ற ஆற்றல் பனை மரத்திற்கு இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஆறும் இல்லை குளமும் இல்லை. மழைநீர் கடலுக்கு போவதற்கு நிலத்திற்கு அடியில் ஒரு பாதைதான் இங்கே இருக்கின்றது. அங்கு சேமிக்கப் படுகின்ற நீரைத்தான் நாங்கள் திரும்ப பாவிக்கப் போகின்றோம். பாவிக்கும் நீரின் அளவை குறைத்து. சேமிக்கின்ற நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். இதனை எல்லோரும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

தொகுப்பு - அமுது 

மாசி 2020 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.