செம்மண்ணோடு ஒன்றித்த பெருவாழ்வு: தற்சார்பு பொருளாதாரம் குறித்து விளக்குகிறார் செம்புலம் மூர்த்தி

ஊரில இயற்கையாகவே கிடைக்கின்ற மூலிகை செடிகளையும், பாரம்பரியமாக எங்கள் ஊரில் விளைந்த மரக்கறிகளையும் தானியங்களையும் மீண்டும் மக்களிடம் கொண்டு செல்வது தான் எங்களின் நோக்கம்.  தான் சார்ந்த பிரதேச மக்களின் நலன் கருதி "செம்புலம் கிராமிய பொருளாதார அபிவிருத்தி நிறுவனம்" ஊடாக பயன்தரு மூலிகை, காய்கறி, மரக்கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கி வருவதோடு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார் செம்புலம் மூர்த்தி. (ஞானமூர்த்தி விக்னேஸ்வரமூர்த்தி -ரகு).

செம்மண் கிராமமான யாழ்ப்பாணம் - குப்பிளானை சேர்ந்த இவர் இயற்கை வழி இயக்கத்திலும் செயற்பாட்டாளராக விளங்கி வருகிறார். 

எமது பிரதேசத்தில் சுண்டங்கத்தரியின் அடையாளமாக விளங்கும் இவர் 2018 இல் வெறும் 500 சுண்டங் கத்தரிகளை நாட்டி ஒரு வருடத்தில் 6 இலட்சம் ரூபாக்களுக்கு மேல் இலாபமீட்டி இருக்கிறார். பெரிதாக நோய்த்தாக்கமில்லாத, வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய  எம்மண்ணின் பயிரான சுண்டங் கத்தரியை நடுமாறு விவசாயிகளை ஊக்குவித்து வருவதோடு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

பாகற்காய், முருங்கையிலை, பனங்கிழங்கு போன்ற பல்வேறு உணவுப்பொருள்களையும் பாதுகாப்பான முறையில் சூரிய ஒளியில் உலர்த்தி தனது செம்புலம் நிறுவனமூடாக விற்பனை செய்தும் வருகின்றார். இன்று எமது பிரதேசங்களில் மரக்கறிகளை விற்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். ஆனால், அவற்றை உலர்த்தி மாதக்கணக்கில் பேணி வைக்க முடியும் என்பதனை கடந்த சில வருடங்களாக செயற்படுத்தி வருகிறார்.

கடந்த வருடம் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பனம் சொக்லேட்க்கு யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் நல்ல கிராக்கி இருந்தது. சிங்களவர்கள், வெளிநாட்டவர்கள் மட்டுமல்லாது எம்மவர்களும் போட்டி போட்டு வாங்கினர்.   


எங்களுடைய சாப்பாட்டு முறைகள் என்றைக்கு மாறியதோ அன்றைக்கே எங்களின் சந்ததிகளை வருத்தக்காரர் ஆக்கி வைத்திருக்கிறோம். இளைய சமுதாயத்தினர் விவசாயம் செய்வதனை தரக்குறைவாக நினைக்கிற நிலை உள்ளது. ஊரில இருந்த பாரம்பரிய இனங்களை அழித்து விட்டோம்.   எங்களின் ஊருக்கு ஒவ்வாத மாங்கன்றையும், வாழைக்குட்டியையும், தென்னங்கன்றையும் நடுவதால் எந்தப் பயனும்  இல்லை.   என தனது இயற்கை வாழ்வியல் சார்ந்த உரையாடலை ஆரம்பிக்கின்றார்.

நாங்கள் உள்ளூரில் கிடைக்கின்ற மூலிகை தாவரங்களை சாப்பிட்டு வந்தாலே மருத்துவரை தேடிப் போக வேண்டிய தேவை இல்லை.
கறிமுருங்கையில் ஆரம்பித்து மணத்தக்காளி, குறிஞ்சா, முசுட்டை,  தவசி முருங்கை, வாத நிவாரணி, தூதுவளை, மொசுமொசுக்கை என பல்வேறு மூலிகைத் தாவரங்களையும் வளர்த்து ஒரு நாளைக்கு ஒரு இலைவகை தாவரத்தை சாப்பிட்டு வந்தாலே எங்களது ஆரோக்கியம் மேம்படும்.


இன்று இவ்வளவு மூலிகை தாவரங்கள் இருந்தும் கிராமப்புறங்களில் வளரும் குழந்தைகள், சிறார்கள் ஆரோக்கியம் இல்லாத நிலையில் தான் வளர்க்கின்றனர். ஆரோக்கியமில்லாத வருங்கால தலைமுறையை உருவாக்கி என்ன செய்யப் போகிறோம்? இது மிகவும் ஆபத்தானது.

எமது பிரதேசங்களில் கைவிடப்பட்ட இன்னொரு பாரிய வளம் பனை. அதிலிருந்து எவ்வளவோ ஆரோக்கியமான உணவுப்பொருள்களை செய்யக் கூடியதாக இருந்தாலும், அதனை நாங்கள் யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.

ஒவ்வொரு வீடுகளிலும் கோழிகள், ஆடு, மாடுகள் என்று இருக்குமானால் முட்டை பாலால் எமது குழந்தைகளின் ஆரோக்கியத்தை இன்னும் சிறப்பாக பேண முடியும்.

தற்சார்பு வாழ்க்கையை நாம் வாழுவோமாக இருந்தால் கொரோனா இல்லை இன்னும் வரப்போகும் எந்த நெருக்கடிகளையும் நாம் எதிர்கொள்ள முடியும்.

தொடர்புக்கு: 0772281820

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.