செயலணிகளின் இராணுவ ஆட்சி

 


கொரோனா நெருக்கடியால் முழு உலகமுமே திணறிக் கொண்டிருக்க இலங்கையில் இராணுவ ஆட்சிக்கான அத்திவாரம் இடப்பட்டு முழுவீச்சில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்றதும் இராணுவ நிர்வாகங்களுக்கு மட்டுமல்லாமல் சிவில் நிர்வாகங்களுக்கும் ஓய்வுபெற்ற படைத்தளபதிகளை நியமித்துள்ளார்.

தொடர்ந்து தனக்குக் கீழ் பலநோக்கு அபிவிருத்தி செயலணி, கொரோனா ஒழிப்பு செயலணி என்று பல செயலணிகளை முதலில் உருவாக்கினார். தற்போது நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கமான, பண்பான, சட்டத்தை மதிக்கும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி மற்றும் கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியையும் உருவாக்கி இருக்கிறார். இந்த செயலணிகளில் தமிழர், முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் கூட இல்லை.    

முழுக்க முழுக்க இராணுவ அதிகாரிகளையும் பௌத்த தேரர்களையும் கொண்டு பேரினவாத அடக்குமுறை சிந்தனையோடு இவை உருவாக்கப்பட்டுள்ளன.   கிழக்கில் தமிழ்பேசும் சமூகங்கள் அதிகம் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் வரலாற்றுச் சின்னங்கள் அங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால் உருவாக்கப்பட்டுள்ள செயலணியில் தமிழ்பேசும் சமூகத்தவர்கள் இல்லாதது பெரும் அச்சநிலையை உருவாக்கி இருக்கிறது.

இலங்கையில் ஏற்கனவே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், ஏனைய விடயங்களுக்கும் சரியான சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் இருக்கின்றன. எனினும், நாடாளுமன்றம் போன்ற நாட்டின் உயர்ரசபைகளுக்குக் கூடக் கட்டுப்படாமல் ஜனாதிபதி தனக்கு மட்டும் பொறுப்பு சொல்லக் கூடிய வகையில் இந்த செயலணிகளை உருவாக்கியிருக்கிறார். அதன் நோக்கத்தை சாதாரணமானவரால் கூட புரிந்துகொள்ள முடியும்.

ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள வனத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் போன்றவற்றால் தமிழர் தாயகப் பிரதேசம் பகுதி பகுதியாக பிரித்தெடுக்கப்பட்டு தமிழரின் தாயக கோட்பாடு கேள்விக்குறியாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கிழக்கு தொல்பொருள் பாதுகாப்பு ஜனாதிபதி செயலணி தொடர்பில் பல்வேறு ஐயங்களையும் தெரிவிக்கின்றனர் கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள்.

இனி நாடாளுமன்றம் அமைச்சரவை என்பவை வெறும் பகடைக்காய்கள் ஆக்கப்பட்டு இராணுவத்தின் செயலணிகள்தான் ஆட்சி செலுத்தப் போகின்றன. அதுவும் போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ். 

இறுதிப்போரில் முன்னின்றவர்கள் தான் இன்று இராணுவத் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் உள்ளனர். பாதுகாப்பு அமைச்சர்தான் இவ்விரு செயலணிகளுக்கும் தலைமை தாங்குகிறார். ஜனநாயக ரீதியாகமக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படாத தன்னால் தெரிவு செய்யப்பட்ட அதிகம் இராணுவமயப்பட்ட செயலணிகளின் மூலம் நாட்டை நிர்வகித்து வருகிறார்.     இதற்கு தமிழ், முஸ்லிம் தலைவர்கள் மட்டுமல்ல சர்வதேசதில் இருந்தும் எதிர்ப்புக்கள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.

தென்னாசியப் பிராந்தியத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக முற்றிலும் இராணுவமயமாகிக் கொண்டுவரும் நாடுகளில் சிறீலங்கா முதன்மை வகிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இனி செயலணிகள் தான் அரசாங்க நிர்வாக கட்டமைப்புகளையே ஆட்சிசெய்யப் போகின்றன. அரசாங்க அலுவலர்கள் செயலணிகளுக்கு கீழ் தான் வரும் நிலை உருவாகியுள்ளது.

இனி தமிழ்மக்களுக்கெதிரான சகல ஒடுக்குமுறைகளையும் இந்த செயலணிகளே கவனிக்கப் போகின்றன. கிழக்கு மண் முழுமையாகவே அபகரிக்கப்படும் நிலை உருவாகி விட்டது. அங்கு தமிழ்மக்களின் இருப்பு கேள்விக் குறியாக்கப்பட்டு உள்ளது.

கிழக்கு மண்பறிப்புக்கு எதிராக நிற்பவர்களையும், தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பவர்களையும் வன்கரம் கொண்டு அடக்கும் செயற்பாடுகளையும் இந்த செயலணிகள் முன்னெடுக்கும் வாய்ப்புக்கள் அதிகம். இத்தீவில் ஜனநாயகம் மெல்ல மெல்ல குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, இராணுவ சர்வதிகார ஆட்சி மேலெழுந்து வருகிறது. 

இதனை நாம் ஒன்றாக எதிர்கொள்ளப் போகின்றோமா அல்லது இப்போது போல் உதிரிகளாக நின்று தனித்தவில் வாசிக்கப் போகின்றோமா என்பது தான் இப்போதுள்ள பெரும் கேள்வி.

செ. கிரிசாந்- 

ஆசிரியர் பார்வை -

நிமிர்வு 

வைகாசி- ஆனி - 2020 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.