மண்ணும் மரபறிவும்

 


தமிழ்நாட்டின் நெய்தல் நில மக்கள், குறிப்பாக கடலோடிகள் குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகின்றவர் கன்னியாகுமரியில் வாழும் முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின். பேராசிரியர், கடல் சூழலியல் மற்றும் வள அரசியல் ஆய்வாளர் எனும் பின்னணி கொண்டவர். தமிழகம் நன்கறிந்த கட்டுரையாளர்; பல நூல்களின் ஆசிரியர். மீனவர்களின் பிரச்சனைகளை எளிய நடையிலும் இலக்கியமாகவும் பதிவு செய்திருக்கிறார். 

மண்ணும் மரபறிவும் தொடர்பில் எழுத்தாளரும் சூழலியலாளருமான வறீதையா கான்ஸ்தந்தின் அவர்கள் ‘சூழல் அறிவோம்’ அமைப்பை சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர்கள்  மத்தியில் பகிர்ந்து கொண்ட விடயங்கள் வருமாறு,

நான் கடல் குறித்து இயற்கை குறித்து தேட தொடங்கினேன். ஆழிப்பேரலை பேரிடரில் இருந்து எழுதத் தொடங்கினேன். ஒவ்வொரு துறை சார்ந்த சமூகமும் தனக்கே உரித்தான தனித் தன்மையுடன் வாழ்கிறது என்று சொன்னால், அந்த நிலத்தில் இருக்கின்ற இயற்கை சார்ந்த வளங்கள், அது சார்ந்த தொழில்கள், அந்த வளங்களையும் தொழில்களையும் சார்ந்த உணவு முறை, இவை சார்ந்த ஒரு வாழ்க்கை முறை, இவை எல்லாவற்றையும் சார்ந்த ஒரு மரபறிவு என்பவற்றைக் கொண்டு அது வாழ்கிறது என்று அர்த்தம். அந்த மரபறிவு வாழ்க்கை முறை என்பது குறிப்பிட்ட சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாக மாறி விடுகிறது.

உதாரணமாக, ஒரு சூழலியல் தேவையாக இயற்கையின் தேவையாக குளங்களை நாங்கள் பார்க்கிறோம். அதனோடு சேர்ந்து பல்வேறு சமூகங்களின் பொருளாதாரத்தின் மூலமாக ஆதாரமாக அவை இருக்கின்றன என்பதை பொதுவாக நாம் கவனிப்பதில்லை. ஒரு குளம் சிதையும் போது அதனை சார்ந்திருக்கின்ற பல்வேறு பறவைகள் உள்ளிட்ட  உயிரினங்கள் இறந்து விடுகின்றன. குளத்தில் தண்ணீர் இருக்கும் போது குளத்துக்கு பக்கங்களில் இருக்கின்ற கிணறுகளிலும் நல்ல தண்ணீர் கிடைக்கும். குளம் சிதைவடையும் போது கிணறுகளில் தண்ணீரும் இல்லாமல் போய் விடும். குளத்தை சார்ந்து பல்வேறு செயற்பாடுகள் தொழில்கள் கூட இடம்பெறும். அரசுகளும் அரச அதிகாரிகளும் இந்த மண் சார்ந்து வாழும் மக்களின் வாழ்க்கையை புரிந்து கொள்ளத் தவறி விடுகின்றார்கள். மலையில் தொடங்கி மருத நிலம் சமவெளி நிலம் என்று பின் சிதைவுகளின் நீட்சி இறுதியாக கடலில் வந்து சேர்க்கிறது.

ஒரு பேரிடர் குறிப்பிட்ட இடத்தில் வருகிறது என்றால்   முதலில் ஒரு இடர் எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். இயற்கை அனர்த்தம் (natural disaster) என்று தவறாக சொல்கிறோம். இயற்கை ஒருபோதும் பேரழிவை ஏற்படுத்தாது. ஆனால் இயற்கை சீற்றமடையும் பின்பு அது தணியும். எப்போது ஒரு இயற்கை சீற்றம் பேரிடராக மாறுகின்றது என்றால், இயற்கையை அதுவரை மனிதன் கையாண்டு வருகின்ற முறைகளில் உள்ள குறைபாடுகள் தான் இயற்கை சீற்றத்தை பேரிடராக மாற்றுகிறது. ஒரு பேரிடரை தடுக்க முடியாது என்றால் அதன் தாக்கத்தை எவ்வாறு குறைக்க முடியும். ஒரு பேரிடரின் பாதிப்புகளை எவ்வாறு மட்டுப்படுத்த முடியும்? பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு விரைவாக மீட்க முடியும்?  அவர்களை எப்படி விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர முடியும். இப்படி எல்லாவற்றையும் சேர்த்தது தான் பேரிடர் மேலாண்மை என்பதாகும். 

நிலத்தை அதன் சூழலியலை ஆழமாக புரிந்து கொண்டு அந்த சூழலோடும் நிலத்தோடும் தங்களை  இணைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்ற அந்த மக்களின் மரபறிவை கவனத்தில் கொள்ளாத எந்த மேலாண்மை திட்டமும் பயன்தராது.  அது எதிர் விளைவுகளை (counter productive) ஏற்படுத்துகின்றது. கடந்த கால வரலாறுகளில் இருந்து நிறைய மேற்கோள்களை பார்க்க முடியும். 

சுனாமி வந்தது. நிறைய மக்கள் இறந்து போனார்கள். இதற்கு தமிழக அரசின் எதிர்வினை எப்படி இருந்தது? தமிழக கடற்கரை முழுவதும் தடுப்புச் சுவர் கட்டி சுனாமிப் பேரலையின் பாதிப்பிலிருந்து இந்த மக்களை காப்பாற்றுவோம் என்று சொல்கிறது. இது சரியான தீர்வா?

கடல் என்பது சீறும் பின் ஆறும் என்பார்கள். அது கரையை தொட்டு வருவதற்கு குறிப்பிட்ட இடம் வேண்டும். சிறிய குழந்தைகள் இருக்கும் வீடுகளில் எங்கேயும் போய் விளையாட வேண்டாம் என்று அவர்களை கட்டிப் போட்டால் என்ன செய்வார்கள்? அவர்கள் கேட்க மாட்டார்கள். அவர்கள் விளையாடுவதற்கும் இடம் கொடுக்க வேண்டும். அதே போல கடலும் தரையும் அதனதன் எல்லைகளோடு  தழுவியும் விலகியும் உறவாடுகின்றன. இதனை நாங்கள் புரிந்து கொள்வதில்லை. ஒரு ஆற்றுக்கு தரை எவ்வளவு முக்கியம் என்று நாம் புரிந்து கொள்வதில்லை. ஆற்றின் இயல்புக்கு மாறாக ஆழப்படுத்தும் போது அந்த ஆறு எவ்வாறு சிதைந்து அழிகின்றது என்பதைக் குறித்து நாம் கவலைப்படுவதில்லை. 

தற்காலிக பலனுக்காக நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். நம் கண் முன்னால் மலைகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. கடற்கரை மக்கள் கல்லை கொண்டு வந்து இங்கே போடாதீர்கள். துறைமுகங்களை கட்டாதீர்கள் என்கிறார்கள். கடலுக்கும் கரையோர மக்களுக்குமான உறவென்பது கரையில் கற்களை அடுக்கிய போது இல்லாமல் போனது. இனி கடலில் காலும் நனைக்க முடியாது. காற்று வாங்கி இளைப்பாறவும் முடியாது. ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரைகளை ஒட்டி வாழ்கின்றார்கள். கடல் சீற்றம், அலைச் சீற்றம் காலத்தில் அந்த மக்களால் கடலை தொட முடியவில்லை. 

எல்லா இடங்களிலும் மனிதனுக்கும் சூழலுக்குமான மோதல் இருந்து கொண்டே இருக்கிறது. இயற்கையை பாதுகாப்பதற்கு இயற்கை அரண்களையே சார்ந்திருக்க வேண்டும் என்கிற புரிதலை நாங்கள் ஏற்படுத்த வேண்டி இருக்கிறது. 

பேரிடர்கள் ஏற்பட்ட போது ஏன் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றால்,   இயற்கை சீற்றம் பேரிடராக மாறுவதற்கு முன்னரேயே அந்த மக்களின் கட்டுப்பாட்டை மீறிய பல செயற்பாடுகள் அந்த சமூகத்தையே பலவீனப்படுத்தி இருக்கும். ஏற்கனவே பலவீனப்படுத்தப்பட்டிருந்த மக்கள் இப்படியான பேரிடர்களால் இன்னும் நலிவுற்றனர். ஒரு பேரிடர் வரும் போது அந்த இடம் முழுவதுமே பாதிக்கப்படும். அது பணக்காரர்களையும் சாதாரண மனிதர்களையும் ஒரே மாதிரி பாதிப்பதில்லை. குழந்தைகளையும் வயதானவர்களையும் ஒரே மாதிரி பாதிப்பதில்லை. 

நான் சுனாமி பேரழிவின் போது தமிழக கடற்கரையின் பல இடங்களுக்கும் சென்று பார்த்தேன். பேரழிவு என்று வரும் போது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். சூழலியலோடு பெண்ணியத்தை சேர்த்து பேச வேண்டி இருக்கிறது. சூழலியலோடு வரலாற்றைப் பேச வேண்டி இருக்கிறது. சூழலியலோடு நிலவியலை பேச வேண்டி இருக்கிறது. 

இலை அழகாக இருக்கிறது, பூ அழகாக இருக்கிறது, கனி அழகாக இருக்கிறது. மரம் அழகாக இருக்கிறது என்று வியந்து பேசி விட்டு ஒதுங்கி விடுவதல்ல சூழலியம். இன்று இயற்கையை கணிக்க முடியவில்லை. இயற்கை கணிப்புக்கும் அப்பால் போய் விட்டது.  

காலநிலை மாற்றத்தில் குறிப்பாக மழைவீழ்ச்சி அன்றைய காலம் போல் இன்று ஒழுங்காக இல்லை. 80 நாளில் பெய்ய வேண்டிய மழை 30 நாளில் கொட்டித் தீர்க்கின்றது. என்ன செய்வது? அந்த மழையை தாங்கிப் பிடிக்க நிலம் தயாராக இல்லை. கொங்கிறீற் சுவர்களை கட்டியெழுப்பி போதாக்குறைக்கு நிலத்துக்கும் கொங்கிறீற் போட்டு மூடி விடுகிறோம். மழைத்தண்ணீர் தேங்கி கசிந்து நிலத்துள் இறங்க வாய்ப்பு இருந்தது. பல வீடுகளில் தரைகளை இப்போது சீமெந்தால் மூடிய பிறகு மழை நீர் மண்ணுக்குள் புக வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.  உலகத்தின் ஒட்டு மொத்த நீரையும் ஒற்றைக் கட்டுமானமாக பார்க்க வேண்டும். ஏரிகள், குளங்களை எல்லாம் ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டினோம். தண்ணீர் செல்லும் பாதைகளையும் பறித்தோம். மழை தண்ணீர் எங்கே போவது? அது தான் இயற்கையுடன் மனிதர்களின் ஊடாட்டத்தில் ஏற்பட்ட விபத்து.   

ஒன்று இரண்டு இஞ்சி அளவு மண் உருவாகவே ஆயிரம் ஆண்டுகள் செல்கின்றன என்கிறது விஞ்ஞானம். அந்த மேல் மண்ணை கனரக இயந்திரங்களை பயன்படுத்தி அள்ளிப் போடுகிறோம். பின்பு அந்த மண்ணிலே பயிர்கள் வளராது.  உயிர்ச் சத்துக்களும் நீர் சத்துக்களும் இருந்தால் தான் தாவரங்கள் உருவாக முடியும். 

ஒவ்வொரு இடத்துக்கும் தனித்துவமான பண்புகள் இருக்கின்றன. இயற்கையோடு சேர்ந்து வாழ்கின்ற மக்களுக்கு அனர்த்தங்கள் பெரிய பாதிப்புகளை கொடுக்காது. இங்கே 16000 மக்கள் இறந்த போது அந்தமானில் வாழும் பழங்குடி மக்கள் 263 பேரில் ஒருவர் கூட இறக்கவில்லை. இயற்கையின் முன்னறிவித்தலை பின்பற்றி தங்களை தற்காத்துக் கொண்டார்கள். இயற்கை எமக்கு எளிமையான வாழ்க்கையை கற்றுத் தருகிறது. 

நமது நுகர்வு வெளியை குறைத்துக் கொள்ள வேண்டும். அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தக் கூடிய பொருள்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத எல்லா பொருள்களையும் வீட்டில் வாங்கி குவித்துவிட்டு பின் வீட்டில் இருக்க இடமில்லாமல் அலைந்து திரியும் வாழ்க்கையில் இருந்து நாங்கள் படிப்படியாக விடுபட வேண்டிய தேவை உள்ளது. 

தொகுப்பு : அமுது 

ஐப்பசி 2022 நிமிர்வு இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.