மாற்றுத்திறனாளிகளின் கருவி


இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் ஏராளமான மாற்றுத்திறனாளிகளை உருவாக்கி விட்டுள்ளது. போருக்குப் பின்னர் உருவாகியுள்ள பெரும் மாற்றுத்திறனாளி சமூகம் தொடர்பில் நாம் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும். அந்தவகையில் இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணத்திலிருந்து  செயற்பட்டு வரும் “கருவி” நிறுவனம் முக்கியத்துவம் பெறுகிறது.

மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையமான கருவி 2013 யூன்மாதம் 12 ஆம் திகதி வலுவிழப்புடன் கூடிய நபர்களை சமூகவிருத்தியின் ஆரோக்கியமான பங்காளராக்கும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந் நிறுவனத்தில் பார்வைக் குறைபாடுடையோர் செவிப்புலன் பாதிப்புடையோர் கை கால் பாதிப்புக்குள்ளானோர் மற்றும் மனவிருத்தி குன்றிய 354 பேர்  அங்கத்தவர்களாக உள்ளனர்.

இந்நிறுவனத்தின் உருவாக்கத்தின் அவசியம் குறித்து கருவி மாற்றுத்திறனாளிகள் சமுகவள நிலையத் தலைவர் திரு.க.தர்மசேகரம் கருத்து தெரிவிக்கையில்,

வலுவிழந்தோருக்கான பணிகளை பல்வேறு நிறுவனங்கள் செய்து வருகின்ற வேளை இப்படியான ஒரு  நிறுவனத்தை தோற்றுவித்ததன் முக்கியத்துவம் என்னவென்றால் யுத்தம் நடந்த பிற்பாடு வலுவிழப்புடன்கூடிய நபர்கள் தொடர்பான ஒரு காத்திரமான செயற்பாட்டு பொறிமுறை ஒன்று உருவாக்குவதற்கான ஒரு தேவைப்பாடு உணரப்பட்டது. வெறுமனே தற்காலிகமான வசதிப்படுத்தல்களோடு திருப்தி கொள்கிற ஒரு சமுதாயத்தை நாங்கள் தோற்றுவிப்பதாக இல்லாமல் நிரந்தரமான வாழ்வாதர மேம்பாட்டுப்பணிகளை முன்னெடுப்பதும் அதனூடாக வலுவிழப்பினோடு கூடிய நபர்களின சமூகப்பங்களிப்பை அதிகரிக்கச் செய்தலும் என்ற அடிப்படையிலேயே கருவி மாற்றுத்திறனாளிகளின் வலுவளநிலையம் தோற்றுவிக்கப்பட்டது.

ஏற்கனவே நாங்கள் கூறியது போன்று யுத்தம் நடந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் வலுவிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்தது யாவரும் அறிந்த உண்மை. யுத்த காலத்தின் போது தமிழ் சமூகத்தில் அங்கவீனமுற்றவர்கள்
அவர்களுக்கான பணிகள், ஏற்பாடுகள் முறையாக பேணப்பட்ட நிலைமை இருந்திருக்கின்றது. ஆனால் யுத்தத்திற்கு பின்னர் அவர்கள் தங்களைத்தாங்கள் காத்துக் கொள்வதும் சமூகத்திற்கு பயனுடையவர்களாக வாழ்தல் என்ற அடிப்படையும் அற்றுப்போன ஒரு நிலைமை இருந்தது.

பல குடும்ப பிணக்குகள் வலுவிழந்தோரைச்சார்ந்து எழுந்தன. ஏனென்றால் அடிப்படையில் அவர்களுடைய பொருளாதார நிலைமைகள் சார்ந்தும் அவர்களுடைய இருப்புச் சார்ந்தும் ஏற்பட்ட பிரச்சனைகள் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதிந்திருந்ததை நாங்கள் அவதானித்திருந்தோம். எனவே தான் இவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஒரு காத்திரமான செயல்நிறை பொறிமுறையாகத் தான் நாங்கள் இந்த கருவியைக் கண்டோம்.


கருவி என்கின்ற பெயரைச் சூட்டியதன் முக்கியத்துவம் என்னவென்றால் சமூகப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒரு கருவியாக எப்பொழுதும் திகழவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் நாங்கள் இந்த கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூக வளநிலையம் என்று வைத்தோம். வெறுமனையே வலுவிழந்தோர் சேவைபெறுனர்களாக இல்லாமல் சேவை வழங்குனர்களாகவும் அவர்களை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகவும் கட்டுமானவசதிப்பாடுகளையும் உள்கட்டுமான வசதிப்பாடுகளையும் எமது நிறுவனம் கொண்டிருக்கின்றது.

இது பதினொருபேரைக் கொண்ட ஒரு பரிபாலன சபையால் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது. போசகர்கள் இருக்கிறார்கள். அதேபோன்று வளவாளர் சபை ஒன்றும் பொதுச்சபையும் இருக்கின்றது. இவ்வாறான கட்டமைப்பின் பின்னணியிலேதான் எமது நிறுவனத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எமது அங்கத்தவர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள், வட்டியற்ற கடன் உதவிகள், எமது அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான கற்றல் வசதிப்படுத்தல்கள் மற்றும் வலுவிழந்தோர் சமூகம் சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்குகள், வலுவிழப்புடன் கூடியவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் போன்ற பல்வேறுபட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

எங்களுக்கு தெரிந்த வரை வலுவிழந்தவர்களுக்கான தகவல்களையும் செய்திகளையும் பொதுவிடயங்களையும் ஆராய்ந்து வெளியிடும் நோக்கில் “வலு” என்கிற பெயரில் காலாண்டு சஞ்சிகையினையும் வெளியீடு செய்து  வருகிறோம். அதே போன்ற கருவி பட்டிமன்றக்குழு ஒன்று இருக்கின்றது. அந்த பட்டிமன்றக்குழுவினுடைய பங்குபற்றுனராக வலுவிழந்த நபர்கள் இருப்பார்கள். இந்த பட்டிமன்றத்தின் ஆற்றுகையூடாக சமூகம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தல் எங்களுடைய பிரதான நோக்காக இருக்கின்றது.

ஆலயவிழாக்கள், கலை கலாசார விழாக்களில் இந்த பட்டிமன்ற ஆற்றுகைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதே போன்று “இராகஸ்ருதி” இசைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. இந்த இசைக்குழு ஆற்றுகைகளும் ஆலயவிழாக்கள், கலை கலாசார நிகழ்வுகளின் போது நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இந்த ஆற்றுகைகளினூடாக கிடைக்கின்ற நிதியினுடைய ஒரு பகுதி அதில் பங்குபற்றுனர்களுக்கும் ஏனைய மிகுதிப்பகுதி எமது நிறுவனத்திற்கும் வந்து சேர்கின்றது. அதனூடாக எமது நிறுவனத்தின் பல்வேறுபட்ட பணிகளையும் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கின்றது.

இதேபோன்று உற்பத்தி சந்தைப்படுத்தல் போன்ற அலகு ஒன்றை நாங்கள் ஸ்தாபித்திருக்கின்றோம். இது ஸ்தாபிக்கப்பட்டதன் அடிப்படை வலுவிழந்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்குவது. சந்தைப்படுத்தல்களிலும், உற்பத்தித்துறையிலும் வேலைவாய்ப்பை வழங்குவதாக இருக்கின்றது. தற்போது அந்த பிரிவினூடாக “சைன்-ளூiநெ” என்கின்ற பெரியரிலான திரவசலவை சவர்க்காரமொன்று உற்பத்தி செய்து சந்தைப்படுத்தப்படுகின்றது. உற்பத்தி பகுதியிலும் சந்தைப்படுத்தலிலும் தற்போது 12 பேர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இந்த செயற்திட்டம் மிகவும் உதவிக்கரமாக இருக்கின்றது. இவற்றை நாங்கள் மேலும் அபிவிருத்தி செய்யவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.தற்போது எங்களுடைய அங்கத்தவர்களுடைய 27 பிள்ளைகளுக்கு கற்றல் வசதிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு தனிநபர் ரீதியாகவும் சில அமைப்புக்கள் ரீதியாகவும் மாதாந்தம் உதவிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கருவி சமூகவள நிலையத்தினுடைய பணிகள் அனைத்தும் நலன்விரும்பிகள் அன்பர்கள் ஆர்வலர்கள் கொடையாளர்களின் அயராத பங்களிப்புடனேயே முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எமது நிறுவனம் பதிவு செய்யப்பட்ட முறைப்படுத்தப்பட்ட வகையில் ஒரு கட்டமைப்பைக் கொண்ட நிறுவனமாக இருக்கின்றது.

நாங்கள் தற்போது தற்காலிகமான இரண்டு வீடுகளில் தான் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். எமது செயற்பாடுகளை நிரந்தரமான இடத்திலேயே நிறுவுவதற்கான
முயற்சியிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கான 30 பரப்புக் காணியொன்றையும் தெரிவு செய்துள்ளோம்.  இந்தக் காணியை சதுர அடிகளாக வகுத்து ஒரு சதுர அடிக்கு இலங்கை ரூபாய் படி  140 ரூபா என்ற வகையில் அந்த செயற்திட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு பகுதியளவான நிதி அதற்காக சேர்க்கப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுச் சந்திக்கு அருகிலுள்ள எமது நிறுவனத்துக்கு நேரடியாக விஜயம் செய்தால் எமது பணிகளை நேரடியாக காணக்கூடியதாக இருக்கும்.  முயசரஎi.ழசப என்ற எமது இணையத்தளத்திலும் எமது பணிகள் சார்ந்த விடயங்களைப் பார்க்க முடியும்.

எங்களுடன் மாற்றுத்திறனாளிகள் அங்கத்தவர்களாக இணையவேண்டுமாயின் எமது நிலையத்தில் படிவம் ஒன்றைப் பூர்த்தி செய்து அங்கத்தவராக இணைந்து கொள்ளலாம்.

எமது நிறுவனத்தில் உற்பத்தி பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குகின்றோம். விற்பனையில் இருப்பவர்களுக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. சுயதொழில் செய்பவர்களுக்கு தேவையறிந்து கடன்களை வழங்கியிருக்கின்றோம். மூலப்பொருட்கள் வாங்கி கொடுத்திருக்கிறோம்.

தேவைமதிப்பீட்டுக் குழுவொன்றை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்களிடம் வரும் கோரிக்கைகளை தேவைமதிப்பீட்டுக் குழுக்களிடம் வழங்கி தொகைகள் மதிப்பிடப்பட்டு வழங்கப்படும். ஆனால் உதவிகோரும் அனைவருக்கும் உதவி வழங்குவதில்லை. அவர்கள் அதனை எவ்வாறு செயற்படுத்துவார்கள் என்பதையறிந்து தேவைமதிப்பீட்டுக்குழு சிபார்சு செய்பவர்களுக்கு மட்டும்தான் நாம் உதவிகளை வழங்குவோம். இப்படியான  முயற்சிகள் எமக்கு பெருமளவிற்கு வெற்றியளித்திருக்கிறன. நாங்கள் உதவி வழங்குகிற எல்லோரும் பெரும்பாலும் தங்களுடைய தொழில்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கருவி நிறுவனம் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரைக்கும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்பதை எடுத்துக் கொண்டால் குறிப்பாக  மாற்றுத்திறனாளிகள் மத்தியில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம்.

மாற்றுத்திறனாளிகளான நாங்களும் சமூகத்திற்கு வேலை செய்யக்கூடியவர்களாக இருக்கிறோம் என்ற சிந்தனையை விதைத்திருக்கிறோம். அதே எங்களுக்கு பெரியதொரு வெற்றி. இங்கே வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூறுவது “இங்கே வந்தால் ஏதும் வாங்கலாம் என்ற அடிப்படையில் வரவேண்டாம் எங்களால் சமூகத்திற்கு என்ன வழங்கலாம் என்ற சிந்தனையோடு வாருங்கள். அதற்கான வசதிகளை நாங்கள் செய்து தருவோம்”;.

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ செலவுகள் அதிகமாக காணப்படுகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களையெல்லாம் வழங்கியிருக்கிறோம். அத்தோடு மாதாந்தம் இங்கு வருபவர்களுக்கு தொற்றுநோய் தொடர்பான சோதனைகளை செய்து வருகின்றோம். வருடாந்தம் மருத்துவ முகாம் ஒன்று எங்களுடைய அங்கத்தவர்களுக்கு நடத்துகின்றோம். அதிலும் எங்களுடைய அங்கத்தவர்கள் பயன்பெற்று செல்லக்கூடியதாக இருக்கின்றது. எங்களுடைய அங்கத்தவர்களின்  மனநலனை மேம்பாடு செய்யக் கூடிய யோகபயிற்சி போன்றவற்றையும் நாங்கள் நடத்துகின்றோம். இது ஒரு சமூகம் சார்ந்த சிந்தனை,  சமூகப்பணிகளோடு ஈடுபாடும் அக்கறையும் கொண்டு உதிரிகளாக வாழ்ந்தவர்களை கூட்டிணைத்து செய்யப்பட்ட ஒரு முயற்சிதான் இந்தக் கருவி.

ஆங்காங்கே இந்த சமூகத்திற்கு பணிசெய்ய வேண்டுமென்ற விருப்பத்தோடும் பொருத்தமான களங்கள் இல்லாமல் இருந்தவர்களையும் கூட்டிணைத்தது தான் இந்தக்கருவி. முதலில் எங்களுடைய கலந்துரையாடல்களில் 25பேர் கலந்து கொண்டார்கள். இன்று பல்லாயிரக்கணக்கானவர்களின் பங்களிப்போடு இந்த கருவி நிறுவனம் இயங்கி வருகிறது. இன்றைக்கும் நிதிசார்ந்த, அபிவிருத்தி சார்ந்த தேவைப்பாடுகள் இருக்கின்றன. வேறும் பல உற்பத்திப் பொருட்களை நாங்கள் செய்வதற்கு இருக்கிறோம். அது சம்பந்தமான நிதியீட்டமும் வளங்களும் சரியான முறையில் எங்களிடம் இல்லை. இப்பொழுது விவசாயம் மட்டும்தான் செய்கிறோம். நாங்கள் வேறு பல உற்பத்திகளை செய்வதற்கு 2.7மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது.

சைன் சலவைத்திரவத்தை செய்வதற்கும் நல்லூர் பிரதேசசெயலகத்தினுடைய விஞ்ஞான தொழில்நுட்ப பிரிவினால்தான் இந்த பயிற்சி வழங்கப்பட்டது. அதனை தற்போது சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் பகீரதன் அவர்கள் வளவாளராக இருந்து அந்த பயிற்சியை வழங்கிய
அடிப்படையில்தான் நாங்கள் இந்த உற்பத்தியை காத்திரமான அளவில் செய்து கொண்டிருக்கிறோம். இது முற்றுமுழுதான எங்களுடைய நிறுவனத்தின் வணிகம் சார்ந்த ஒரு செயற்பாடு. அதனுடைய வடிவமைப்புக்கள் எல்லாமே வணிகம் சார்ந்த ஒரு கட்டுமானத்துடன்தான் இருக்கின்றன. இதிலிருந்து வருகின்ற வருமானம் எங்களுடைய அங்கத்தவர்களின் கலைமேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகின்றது.

தற்பொழுது வடமாகாணத்துக்குள்ளேதான் எங்களுடைய உற்பத்தி விநியோகங்களை செய்து கொண்டிருக்கிறோம். இதனை விருத்தி செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. இதற்கு நிதி சம்பந்தமான தடங்கல்கள் உள்ளது. நாங்கள் அதனை நிவர்த்தி செய்து கொண்டால் அனைத்துப் பகுதிகளிலும் எங்களுடைய விற்பனையை விஸ்தரிக்கக்கூடிய வாய்ப்பிருக்கும். ஒரு விடயம் என்னவென்றால் எமது நிறுவனம் ஆரம்பித்த காலத்தோடு ஒப்பிடுகிற போது நிறுவனத்திற்கே வந்து சைனை வாங்கிக்கொண்டு போகிற வாடிக்கையாளரின் தொகை படிப்படியாக அதிகரித்துச் செல்கின்றமை எங்களுக்கு மனநிறைவைத் தருகின்ற ஒருவிடயம். பல்வேறு தடைகளையும் தாண்டி எடுத்த முயற்சி இன்றைக்கு மெல்ல மெல்ல வெற்றியளிக்கின்ற இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது மனநிறைவான ஒரு விடயமாகும். நாங்கள் சில கடைகள் மூலமாகவும் அதனை விற்பனை செய்து வருகின்றோம். தற்போது நேரடியாக வாடிக்கையாளரிடம் விற்பனை செய்வதுதான் எங்களின் வணிக உத்தியாக இருக்கிறது. கடைகளிலும் இப்பொழுது கேட்டு வாங்கத் தொடங்கிவிட்டார்கள்.

தற்பொழுது யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான சூப்பர் மாக்கெட் போன்ற இடங்களில் விற்பனை செய்து காட்சிப்படுத்துகின்ற அளவிற்கு எங்களுடைய உற்பத்தி மேம்பட்டிருக்கின்றது. அதே நேரம் எங்களுடைய நிறுவனத்தின் பெயரைப்பயன்படுத்தி வேறு பொருட்களையும் விற்பனை செய்கின்ற ஒரு துர்பாக்கியமான நிலையும் இருக்கின்றது. ஆகவே அவற்றில் எங்களுடைய சமூகம் சார்ந்தவர்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். எங்களுடைய இலக்கு வலுவிழப்புடன்கூடிய நபர்களினுடைய சமூகப்பங்கினை அதிகரித்தலாகும் என கூறி முடித்தார்.

துருவன் 

நிமிர்வு ஆனி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.