யாப்பு: மாகாண சபைகள்



மாகாண சபை எமக்கு எதுவுமே செய்யவில்லை, அது இருந்தும் என்ன பயன், அதன் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்று எம்மில் பலர்அங்கலாய்க்கிறோம்.  ஆனால் அம்மாகாணசபை நாம் எதிர்பார்ப்பனவற்றை வழங்குமளவுக்கு அதிகாரம் கொண்டுள்ளதா என்று ஆராய்ந்து பார்க்கத் தவறிவிடுகிறோம்.

மத்திய அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் உள்@ராட்சி சபைகள் என்பவற்றுக்கிடையான  உறவுகள் தொடர்பில் புதிய யாப்பில் இடம்பெற வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமையில்  ஓர் உபகுழு நியமிக்கப்பட்டது.  இவ்வுபகுழுவின் அறிக்கையை வாசித்தாலே பல உண்மைகள் தெரிய வரும்.  இவ்வறிக்கையின் முதலாம் பாகத்தை சென்ற இதழில் வெளியிட்டோம். 

மாகாணசபைகளும் ஆளுனரின் அதிகாரங்களும் தொடர்பாக இவ்வறிக்கையில் உள்ளனவற்றை இந்த இதழில் தருகிறோம் - ஆசிரியர்.

 பதின்மூன்றாம் திருத்தச் சட்டமூலத்தின் குறுகிய கட்டமைப்பும், மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் தொடர்பாக யாப்பின் தெளிவின்மையும் மாகாண சபைகளினூடாக அதிகாரப் பகிர்வுக்கு தடைகளாக உள்ளன. மேலும்  நிறைவேற்று அதிகாரங்கள் குவிந்துள்ள ஜனாதிபதி ஆட்சி முறை மற்றும் மாகாண சபைகளின் மட்டுப்படுத்தப்பட்ட நிதி அதிகாரம் என்பனவும் அதிகாரப் பகிர்வுக்கு தடைகளாக உள்ளன.  நாட்டின் ஒற்றையாட்சி அரசியலமைப்பும் ஒரு தடைக்கல் என குழு உறுப்பினராலும் அழைக்கப்பட்டோராலும் சுட்டிக்காட்டப்பட்டது.

மாகாண அபவிவிருத்திக்கென திறைசேரியால் ஒதுக்கப்படும் நிதிகள், அவை எவ்வாறு செலவு செய்யப்படலாமென கட்டுப்படுத்தும் கண்டிப்பான அறிவுறுத்தல்களுடனேயே வழங்கப்படுகின்றன.  மேல்மாகாணசபை உள்ளிட்ட ஓரிரு சபைகளைத்தவிர ஏனைய மாகாணசபைகள் இந்த அறிவுறுத்தல்களை வெறுமனே அங்கீகரிக்கும் சபைகளாகவே உள்ளன.  மாகாணசபைகளில்; வரவு செலவுத்திட்டங்கள் ஏகமானதாகவே நிறைவேற்றப்படுகின்றன.  இது மாகாணசபை உறுப்பினர்களிடையே ஒருமைப்பாட்டைக் குறிக்கவில்லை.  மாறாக மாகாணசபைகளின் மீதான மத்தியின் கட்டுப்பாட்டுக்கும் தமது அதிகாரமின்மைக்கும் எதிர்ப்புத்; தெரிவிக்கும் ஒரு செயலாக இது எடுத்துக் கொள்ளப்படலாம்.
   
செயற்திறனும் சட்டநிறைவேற்று அதிகாரமும் உள்ள மாகாண சபைக்கு  ஒரு உயிர்ப்பான ஜனநாயக சூழல் அவசியமானது.  ஒரு ஆரோக்கியமான எதிர்க்கட்சியும் அவசியமாகும்.  ஒரு விழிப்பான எதிர்க்கட்சியின் விமர்சனங்களின்றி ஆளும்சபை தனது செயற்பாடுகளில் மந்தமாகவும்  செயற்திறன் அற்றுப்போகவும் வாய்ப்புகள் உள்ளன.  இதனையுணர்ந்தே நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஒரு சபை அடிப்படையிலான ஆட்சிமுறை சோல்பரி ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டது.

ஆளுனரின் அதிகாரங்கள்

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு ஆளுனருக்கு  மாகாணசபைகளின் நிறைவேற்று மற்றும் சட்டவாக்கப்பணிகளில் தலையிடக்கூடிய அதிகாரங்களை பதின்மூன்றாம் சட்டமூலம் வழங்குகிறது.  அது மாகாணசபை மீதான மத்திய அரசின் அதிகாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.  இவ்வகையான கட்;டமைப்பு  அதிகாரப்பகிர்வின் அடிப்படையையே தகர்க்கிறது.

மாகாண பொதுமக்கள் சேவையின் அலுவலர்களை நியமித்தல், இடம் மாற்றல், பதவிஉயர்த்தல், பதவி விலக்கல் என்பவற்றுக்கான அதிகாரங்கள் ஆளுனரிடமேயே உள்ளன.  மாகாண சபை அமைச்சர்களால் எடுக்கப்படும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்படும் அலுவலர்கள் மீது கூட எந்தவிதமான அதிகாரமும் அற்ற  நிலையிலேயே ஒரு மாகாணசபை உள்ளதென இதன் மூலம் தெளிவாகவே தெரிகிறது.  இவ்வலுவலர்கள் மாகாண சபைக்கு விசுவாசமாக இருப்பர் என எதிர்பார்க்க முடியாது.
 

 மாகாண முதலமைச்சரும் அமைச்சரவையும் ஆளுனரின் செயற்பாட்டுக்கு ஆலோசனையும் உதவிகளுமே வழங்க முடியும். மாகாண சபைக்கும் ஆளுனருக்குமிடையே கருத்து முரண்பாடு ஏற்படுமிடத்து ஆளுனரின் முடிவே இறுதியானது.  இம்முடிவுக்கு எதிராக எந்தவொரு வழக்கும் தொடரப்பட முடியாது.
 
ஆளுனரின் பரிந்துரையின்றி நிதியுடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு சட்டமும் மாகாண சபையினால் கருத்தில் எடுக்கப்பட முடியாது.  மாகாணசபையினால் நிறைவேற்றப்படும் எந்தவொரு சட்டமும் ஆளுனர் அனுமதித்த பின்னரே அமுலாக்கப்படலாம்.  ஆளுனர் அனுமதிக்காத பட்சத்தில் அச்சட்டத்தை மாற்;றும் பரிந்துரைகளுடன் அதனை மாகாண சபைக்கு திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுனருக்கு உள்ளது.  மத்தியில் கூட பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டத்தை நிராகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது.  அப்படியிருக்க மாகாண ஆளுனருக்கு இவ்வதிகாரம் இருப்பதன் காரணம் என்ன?
 
ஆளுனர் அனுமதிக்காத ஒரு சட்டத்தை மாகாணசபை அங்கீகரிக்குமாயின் அதனை ஜனாதிபதியின் அனுமதிக்கென ஆளுனர் அனுப்பி வைக்கலாம்.  அச்சட்டத்தின் அரசியல் அமைவுத்தன்மைத் தீர்மானிப்பதற்காக அதனை உச்ச நீதிமன்றுக்கு  ஜனாதிபதி அனுப்பி வைக்க வேண்டும்.  ஆனால் இதற்கென ஒரு கால எல்லை இல்லை.  இதனால் மாகாண சபையால் இயற்றப்படும் சட்டங்கள் ஆளுனரால் ஏற்றுக்கொள்ளப்படாதவிடத்து அச்சட்டங்கள் உரிய நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படாது.

 சில ஆளுனர்கள் தமது சட்ட வரம்புகளை மீறி ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதிகளாக செயற்படுகின்றனர்.  இது மாகாணசபையின் அதிகாரத்தை மத்தியால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியின் கையில் சமர்ப்பித்துவிடுகிறது.  மாகாண சபையின் சுயாதீனத்தையும், பொறுப்புக் கூறலையும் அர்த்தமற்றதாக்கிவிடுகிறது.

நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கலைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுனருக்கு அதிகாரங்கள் அளிக்கப்படுதல் நிறைவேற்று அதிகார ஆட்சியை இன்னொரு உருவில் தொடர்வதாகும்.  மக்களுடன் நெருக்கமாக இருக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களே மத்திய அரசைவிட மக்களுக்கு பொறுப்பாகவும் பொறுப்புக் கூற வேண்டியவர்களாகவும் உள்ளனர்.

     மேற்குறித்த அவதானிப்புக்களிலிருந்து இவ்வுபகுழு பின்வரும் முக்கிய விதப்புரைகளை முன்வைக்கிறது.

1.   ஆளுனர் தன்னியல்பாகச் செயற்பட அனுமதிக்கும் சட்டமூலங்கள் திருத்தியமைக்கப்பட வேண்டும். இது வரை அரசியல் யாப்பில் காணப்படும் ஆளுனரின் தற்றுணிவு செயற்பாடுகளைத் தவிர ஏனைய விடயங்களில் ஆளுனர் மாகாண முதலமைச்சரினதும் அமைச்சரவையினதும் ஆலோசனைகளுக்கு அமைய நடக்க வேண்டிய ஒரு பெயரளவில் நியமிக்கப்பட்ட அதிகாரியாக இருக்க வேண்டும்.
2.   மாகாண பொதுமக்கள் சேவை ஒரு சுயாதீன மாகாண பொதுமக்கள் சேவை ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.
3.   மாகாண பொலிஸ் சேவை ஒரு சுயாதீனமான மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
4.   மாகாண சபைகளில் நிறைவேற்றப்படும்  சட்டங்களுக்கு ஆளுனரின் அனுமதி பெறப்பட வேண்டுமென்ற நியதி கைவிடப்பட வேண்டும்.
5.   மாகாணசபைகளில் நிறைவேற்றப்படும்  சட்டங்களின் அரசியலமைப்பு அமைவுத்தன்மை நீதிமன்றங்களால் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
6.   மாகாணசபையின் நிதி சம்பந்தப்பட்ட சட்டவாக்கங்களுக்கு ஆளுனர் பரிந்துரை தேவையென்ற நியதி கைவிடப்பட வேண்டும்.
7.   ஆளுனர் மாகாண முதலமைச்சரின் ஒப்புதலுடன் ஜனாதிபதியால் நியமிக்கப்படல் வேண்டும்.
8.   மாகாணத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலையும் பட்சத்தில் மாகாண அரசை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சட்டங்கள் வலுவாக்கப்பட வேண்டும்.

சுயாதீன பொதுமக்கள் சேவை ஆணைக்குழு

மேற்குறிப்பிட்டவாறு மாகாண பொதுமக்கள் சேவை அலுவலர்களைக் கட்டுப்படுத்துவதற்கான எல்லா அதிகாரங்களையும் பதின்மூன்றாம் திருத்தச் சட்டமூலம் ஆளுனருக்கு வழங்கியுள்ளது.  திட்டங்களை உருவாக்குதல், ஆட்சேர்ப்பு, நடைமுறை வழமைகள், பதவி உயர்வு, இடமாற்றம், பதவி நீக்கம், விசாரணை உள்ளடக்கிய எல்லா அதிகாரங்களும் ஆளுனரிடமேயே உள்ளன.  மேலும் இந்த பொது சேவை அலுவலகம் தொடர்பாக எவராவது முறைப்பாடு செய்தால் அதன் மீதான தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் ஆளுனரிடமேயே உள்ளது.

ஆகவே பொதுசேவைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கே இல்லாத அதிகாரங்கள் ஆளுனருக்கு இருப்பது தெளிவாகிறது.  பதின்மூன்றாம் திருத்தச்சட்;டத்தில் மாகாண முதலமைச்சரினதும் அமைச்சரவையினதும் பரிந்துரைகளுக்கு ஆளுனர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.  ஆனால் அந்நடவடிக்கைகள் தொடர்பாக கேள்வி கேட்கவோ எந்த நீதிமன்றுக்கும் அதிகாரம் இல்லை.  இது ஆளுனருக்கு தடையற்ற அதிகாரங்களை வழங்குகிறது.

இதனால் மாகாண அமைச்சரவையின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அவர்களது செயலாளர்கள் ஆளுனரின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றனர்.  அவர்கள் தமது துறைசார்ந்த அமைச்சரைவிட ஆளுனருக்கே அதிக கடப்பாடு உள்ளவர்களாக உள்ளனர்.

மேலும் பொதுசேவைகள் பலவற்றை நாடளாவிய பொது சேவை என வகைப்படுத்துவதாலும் மாகாண பொது சேவை பாதிப்புக்குள்ளாகிறது.  அத்துடன் மாகாண பொது சேவைக்கு அலுவலர்களை நியமிப்பதற்கு திறைசேரியின் நிர்வாக சேவைத்திணைக்களத்திலிருந்து அனுமதியைப் பெறவேண்டும் என்ற சட்டம் மாகாண பொதுச் சேவையைப் பாதிக்கிறது.

மேற்குறித்த அவதானிப்புகளிலிருந்து பின்வரும் விதப்புரைகளை இக்குழு முன்வைக்கிறது.
1.   மாகாண பொதுச்சேவை ஒரு சுயாதீனமான மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட வேண்டும்.
2.   இவ்வாணைக்குழுவுக்கு மாகாண முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டாக உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். இந்நியமனங்கள் அரசியலமைப்புச் சபையால் அங்கீகிக்கப்படல் வேண்டும்.
3.   மாகாண பொதுச் சேவைக்கு அலுவலர்களை நியமித்தல் பதவி உயர்த்தல், இடமாற்றல், வேலைநீக்கம் போன்றவை சுயாதீனமான மாகாண பொதுசேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட வேண்டும்.
4.   மாகாண அமைச்சரவையே மாகாண பொதுசேவை அலுவலர்கள் தொடர்பான எல்லா அதிகாரங்களையும் கொண்டிருக்கும்.
5.   நாடளாவிய பொதுச்சேவைகள் என்பது நிர்வாகசேவை, பொறியியல் சேவை, அரச மருத்துவ அலுவலர் சேவை, பொலிஸ் அலுவலர் சேவை, விஞ்ஞான அலுவலர் சேவை, கணக்காய்வாளர் சேவை என்பவற்றுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட வேண்டும்.  நாடளாவிய பொதுச்சேவை அலுவலர்கள் மாகாண சபைகளில் கடமையாற்றுவதை தேசிய பொதுச்சேவை ஆணைக்குழுவும் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவும் கலந்தாலோசித்து முடிவெடுக்கும்.
6.   மாகாணசபை பொதுச்சேவை அலுவலர்கள் மத்திய பொதுச்சேவை அலுவலகங்களில் இணைந்து கொள்ள சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும்.
7.   நாடளாவிய பொதுச்சேவை அலுவலர்களுக்கும் மாகாண பொதுச்சேவை அலுவலர்களுக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
8.   மாகாண நிர்வாக சேவை எனத் தனிப்பிரிவு ஆரம்பிக்கப்பட வேண்டும்.  இப்பிரிவில் உள்ளவர்கள் மாகாண சபைகளுக்கிடயே இடமாற்றம் பெறலாம்.
9.   அதிகாரப் பரவலாக்கலை செயற்திறனுள்ளதாக்கவும் அரசாங்கத்தில் இரட்டைத் தன்மையை இல்லாதொழிக்கவும் மாவட்டச் செயலகங்கள் மாகாண நிர்வாகத்தின் அங்கமாக உள்வாங்கப்பட வேண்டும்.  அரசாங்க அதிபரும் பிரதேச செயலாளர்களும் மாகாண பொதுச்சேவையில் கூடுதல் பிரதம செயலாளராகவும், உதவி செயலாளர்களாகவும் உள்வாங்கப்படல் வேண்டும்.
10. கிராம சேவையாளர் எல்லோரும் மாகாண பொதுச் சேவைக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.

மாவட்ட அரசாங்க அதிபர்களினதும் பிரதேச செயலாளர்களதும் செயற்பாடுகள் தொடர்பாக இவ்வுப குழுவின் பரிந்துரைகளை அடுத்த இதழில் பார்ப்போம்.

நிமிர்வு ஆனி 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.