எம்மண்ணின் வளங்களுக்கு கூட்டு வேலைத்திட்டம்தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வறுமை தொடர்பான SAAPEஅறிக்கை மற்றும் VGGT தமிழ் கைநூல் வெளியீட்டு நிகழ்வும், பொதுக் கலந்துரையாடலும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான மக்கள் கலந்துரையாடல் இணைப்பாளர்  அன்டனி ஜேசுதாசன் தலைமையில் கடந்த 10.07.2017 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் டில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் வி.பி. சிவநாதன் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹர்மன் குமார, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் என்.இன்பநாயகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி. தங்கராஜா , சங்கத்தின் செயலாளர், பிரபல அரசியல் சமூக ஆய்வாளர் ம. நிலாந்தன், அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி. அ. யோதிலிங்கம், பிரஜா அபிலாஷா வலையமைப்பு இணைப்பாளர் பிரான்சிஸ் ராஜன்பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


பேராசிரியர் சூசை ஆனந்தன் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையிலேயே முதலாவதாக அமைக்கப்பட்ட மீன்பிடித்துறைமுகமாக மயிலிட்டித் துறைமுகம் காணப்படுகின்றது. வடக்குப் பிரதேச கடல் வளத்தின் மையப் புள்ளியாகவும் இது அமைந்துள்ளது. வலிகாமம் வடக்கில் மிக முக்கிய துறைமுகமாகக் காணப்படும் மயிலிட்டித் துறைமுகம் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டாலும் அந்தப் பகுதி இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

தேசிய  மீனவஒத்துழைப்பு இயக்கம் பல தடவைகள் வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்டு அந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகளைப் பல்வேறு மட்டங்களுக்கும் எடுத்துச் சென்றுள்ளனர். வலிகாமம் வடக்குப் பிரதேசம் ஐந்தாயிரம் ஹெக்டேயருக்கு மேற்பட்டதொரு பிரதேசம்.  அங்கு கடல் வளம்இ நன்னீர் வளம்இ நில வளம் போன்ற பல்வேறு வளங்கள் காணப்படுகின்றன. அங்கு மயிலிட்டித்துறைமுகம்இ விமானத்தளம்இ புகையிரத நிலையம்இ காசநோய் வைத்தியசாலை போன்ற பல்வேறு வசதிகளும் அமைந்துள்ளன.  குட்டி அரசை நடத்துவதற்கான நில வளம்இ நீர் வளம் போன்ற அனைத்து வளங்களும் வலி. வடக்கில் அமைந்து காணப்படுகின்றன.

அவ்வாறான பரந்த பிரதேசத்தை இராணுவம் தேசிய பாதுகாப்பு என்ற ரீதியில்  குட்டி இராணுவ அரசாக வைத்திருக்கும் நோக்கிலேயே வலி. வடக்குப் பிரதேசம் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களுடைய போராட்டங்கள் காரணமாக வலி. வடக்கு நில ஆக்கிரமிப்பு விடயத்தில் சிறியதொரு தளர்வு ஏற்பட்டது.  குறிப்பிட்ட ஏக்கர் கணக்கான நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த விடயத்தில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.  வலி. வடக்குப் பிரதேசம் மீண்டும் முழுமையாக எங்களின் கைக்குள் வர வேண்டும். இவ்வாறான சூழல் ஏற்படும் போது தான் எங்கள்  இயற்கை வளம் பாதுகாக்கப்படுவதுடன், எமது மக்களின் நில உரிமையும் உறுதிப்படுத்தப்படும்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், நாயாறு போன்ற பிரதேசங்கள் பாரம்பரியமாகத் தமிழ்மக்கள் வாழ்ந்து வந்த வளம் மிக்க பிரதேசங்கள். தெற்கிலுள்ள சிங்கள அரசியல் தலைவர்கள் அரசியல் ரீதியாக அந்தப் பகுதிகளில் தென்னிலங்கை மக்களைக் குடியமர்த்தி முல்லைத்தீவு மக்களுக்கும், தெற்கைச் சேர்ந்த மக்களுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கியுள்ளனர். தமிழ்மீனவர்கள் செல்லாத வகையில் இராணுவத்தின் பாதுகாப்புடன் சுற்றிவர வேலி அடைக்கப்பட்ட நிலையில் தென்பகுதி மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகிறார்கள். நான் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் முல்லைத்தீவுப் பகுதிக்குச் சென்ற போது குறித்த இடங்களைப் பார்வையிட்டேன். நூறு வாடிகளுக்கு மேல் காணப்பட்டன. குறித்த பகுதியில் சனநடமாட்டத்தையே காண முடியவில்லை. இராணுவம் மாத்திரம் தான் அங்கு காணப்பட்டது. அடுத்த சீசனுக்குத் தென்பகுதி மீனவர்கள் வருகை தரும் வரை இதுதான் நிலைமை.

தற்போது மீன்பிடி மற்றும் விவசாயத் துறைகளில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் மாறியுள்ளது. இராணுவத்திற்கு அச்சப்பட்டு மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், எமது மக்கள் வறுமையின் பிடியில் தொடர்ந்தும் சிக்கித் தவிர்க்க வேண்டிய அவல நிலைமையேற்பட்டுள்ளது. தமிழ் மீனவர்கள் அதிகம் வாழும் முல்லைத்தீவுப் பிரதேசம் காப்பாற்றப்பட வேண்டும்.

முள்ளிக்குளம் மன்னார் மாவட்டத்தில் தென்மேற்காக அமைந்திருக்கும் ஒரு கத்தோலிக்க தமிழ்க் கிராமம். அங்கு 350 குடும்பங்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றனர். கடல் வளம், விவசாய வளம், காட்டு வளம் மிக்கதொரு பிரதேசமாக முள்ளிக்குளம் அமைந்துள்ளது. அந்தப் பிரதேசத்து மக்களைத் தற்காலிகமாக வெளியேறுமாறே இராணுவம் கூறியது. இராணுவத்தினரின் வார்த்தைகளை நம்பி வெளியியேறிய அந்தப் பகுதி மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை.

அண்மையில் முள்ளிக்குளம் கிராம மக்கள் மீள்குடியேற்ற அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், பாடசாலை மற்றும் ஆலய வளாகங்களில் தான் அந்தப் பகுதி மக்கள் தங்கியுள்ளனர். தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் முள்ளிக்குளம் பகுதியையே இராணுவத்தின் வடமேற்குக் கட்டளைத் தலைமைச் செயலகமாக மாற்றியிருக்கிறார்கள். இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம். தெற்கிலுள்ள கடற்கரையோரப் பிரதேசங்களில் இவ்வாறான இராணுவ முகாம்களை அமைப்பதை விடுத்து வடக்கு மாகாணத்தில் மக்களின் குடியிருப்புக்களுக்கு மத்தியில் இராணுவத்தினர் முகாம் அமைத்து ஏன் குடியிருக்கிறார்கள் என்பது புரியவில்லை.

மன்னாரில் தலைமன்னார், சிலாவத்துறை போன்ற இடங்களிலும் தென்பகுதி மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். தென்பகுதி மீனவர்கள் குறிப்பிட்ட சீசனுக்கு வந்து மீன்பிடியில் ஈடுபட்டுச் சென்ற பின்னர் அவர்கள் பயன்படுத்திய வாடிகள் அப்படியே காணப்படும். அதற்கு இராணுவத்தினர் காவல் காக்கின்றனர். யாரையும் குறித்த இடத்திற்குச் செல்ல இராணுவத்தினர் அனுமதிக்க மாட்டார்கள்.

தற்போது வடக்கு மாகாணத்தின் பல்வேறிடங்களிலும் காணப்படும் காட்டு வளங்கள் சூறையாடப்பட்டுத் தென்பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. மன்னார் மாவட்டத்திலிருந்து அதிகளவு காட்டு மரங்கள் கடத்தப்படுகின்றன. மன்னார் நீதிமன்ற வளாகத்திலும், அருகிலும் வேறு மாவட்டங்களுக்குக் கடத்திச் செல்லப்படவிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான மரங்கள் குவிக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி மன்னாரிலுள்ள அருவி ஆறு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலிருந்து பெருமளவு மணல் அகழ்வு செய்யப்பட்டுத் தென்பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. தற்போது வடக்கில் மணலுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் மணல் கடத்தலைத் தடுக்க உரிய அதிகாரிகள் தவறி விட்டனர்.

கற்பிட்டி, நீர்கொழும்பு, புத்தளம் ஏரிகள் போன்ற பிரதேசங்களில் நிலங்களை, ஏரிகளை, கண்டல் தாவரங்களைப் பல்தேசியக் கம்பனிகள் மூலமாக அரசாங்கம் அபகரிக்க முற்பட்ட போது அங்குள்ள மக்கள் அதனை எதிர்த்து வெற்றி கொண்டார்கள்.  குறிப்பாக நீர்கொழும்புப் பிரதேசத்தின் ஏரியை விமான இறங்கு துறையாக மாற்றுவதற்காக  அரசாங்கம் முனைப்புக் காட்டியது. 3500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு ஜீவனோபாயத் தொழிலாகக் கட்டுவலைத் தொழிலை மேற்கொண்டு வரும்  நிலையில் அந்தப் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத் தொழிலில் இந்தத் திட்டம் எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை உணர்ந்து பல்வேறு மத நிறுவனங்கள், பெண்கள் அமைப்புக்கள், மீனவ சமூகம் போன்ற பல்வேறு தரப்புக்களை அணிதிரட்டி அதனை அவர்கள் தோற்கடித்திருந்தார்கள்.

புத்தளம் ஏரிப் பிரதேசத்தை உல்லாசப்பயணத்துறைக்காக அபிவிருத்தி செய்வதற்காக கண்டல் காடுகள்,  ஏரிப் பிரதேசங்கள் போன்றவற்றை ஆக்கிரமித்து அதனுள் சகல அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.  அப்போதும் பல்வேறு அமைப்புக்கள் ஒன்றுதிரண்டு கிளர்ந்தெழுந்து பாரிய போராட்டங்கள் நடாத்தி அந்தப் பிரதேச வளத்தைக் காப்பாற்றினார்கள். அதேபோன்று எங்களுடைய மண்ணின் வளங்கள் பல்தேசியக் கம்பனிகளாலும், தென்பகுதி மக்களாலும் அபகரித்துச் செல்லப்படாமலிருப்பதற்கு ஒன்றிணைந்த கூட்டு வேலைத் திட்டம் அவசியம் என்றார்.

தொகுப்பு:- செல்வநாயகம் ரவிசாந்-
நிமிர்வு ஆடி 2017 இதழ் 


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.