தமிழ்த் தேசியத்தை அழித்தொழிக்கும் பயணம்


தமிழ்த் தேசியமும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளும் தகர்ந்து போவதில்லை.  அவை நீறுபூத்த நெருப்பாகவே தமிழ் மக்களின் மனதில் கனன்று கொண்டிருக்கின்றன என்பதற்கு சுதந்திர இலங்கையின் வரலாற்றில் பல பதிவுகளைக் காணலாம். இந்தப்பதிவுகள்  அனைத்துமே ஒரு விடயத்தை அதாவது தமிழ்த்தேசியம் தொடர்பாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து தெளிவான, உறுதியான செய்தியை திரும்பத் திரும்பக் கூறுகின்றன.  அதாவது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான போராட்ட வடிவங்கள் காலத்துக்கு காலம் மாறியுள்ளன.  போராட்ட வடிவங்கள் மாறின என்பதற்காக அரசியல் அபிலாசைகள் மாறிவிடவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் தமிழ் மக்களின் உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கின்ற அரசியல் அபிலாசைகளை அழித்துவிட சிங்கள பௌத்த பெருந்தேசியவாதமும், வெளிநாட்டுச் சக்திகளும் தொடர்ந்தும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.  உண்மையில் தமிழ் மக்களிடமிருந்து எழுந்த போராட்ட வடிவங்களைத் தமது கூட்டுச்சதி மூலம்    இவர்கள்      வெற்றி கொண்டுள்ளனர்.  இந்த வெற்றிகள் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை அழித்துவிட முடியவில்லை என்பது மேற்படி சக்திகளுக்கு நன்கு தெரியும்.  அதற்கேற்ப மேற்படி சக்திகளும் காலத்துக்குக் காலம் தமது தந்திர மூலோபாயங்களையும்    செயற்பாடுகளையும் மாற்றி அமைத்து வருகின்றன.

அந்த வகையில் தமிழ் மக்களுக்கெதிரான கூட்டுச் சதிகாரர்களின் நயவஞ்சக இராஜதந்திர நகர்வுகளை மேவி மாற்று வழியில் தமிழ் மக்களை வழி நடத்தக் கூடிய சக்தி தமிழ்த் தலைமைத்துவங்களிடையே இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகள்  தமிழ்த் தலைமைத்துவங்களுக்குள் விதி விலக்காக அமைந்த போதும் இலங்கை மற்றும் வெளிநாட்டுக் கூட்டுச் சதி மூலம் அழிக்கப்பட்டுவிட்டனர்.
 
தமிழ்மக்களை இந்த அழிவில் இருந்து அதாவது முள்ளிவாய்க்கால் அழித்தொழிப்பில் இருந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் காப்பாற்றுவர் என்ற மாயைக்குள் தமிழ் மக்கள் ஆழ்ந்தனர்.  துப்பாக்கிச் சன்னங்களால் அல்ல வாக்கு வேட்டுக்களால் தமிழ் மக்களுக்கு விடிவு, விமோசனம் கிடைக்கும,;; அவற்றைப் பெற்றுத் தருவோம்;,   இவைகளை வென்றெடுக்க நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை வாரித் தாருங்கள் என்ற தேர்தல் பரப்புரைக்குள் வென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் நாடாளுமன்றம் நுழைந்தனர்.   ஆனால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரின் நாடாளுமன்றப் பிரவேசம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்கான பயணத்தை விரைவுபடுத்துவதாகவோ அல்லது உறுதிப்படுத்துவதாகவோ அமையவில்லை என்பதை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் பங்காளிகளாக இருப்பவர்களில் ஒரு பகுதியினரின் செயற்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன.
   
1977இல் அடுத்த தேர்தல் தமிழீழத்தில் என மக்கள் ஆணை கோரி வெற்றி பெற்ற பின் எவ்வாறு தமிழ் மக்கள் கைவிடப்பட்டனரோ அதே போல் இன்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு விடிவு, விமோசனம், சம~;டி மூலமான தீர்வு என்றெல்லாம் கூறி நாடாளுமன்றம் புகுந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களைக் கைவிட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களைக் கைவிட்டமை    என்பது தற்செயல் நிகழ்வு அல்ல  கூட்டமைப்பினரின் கையாலாகத்தனம், இயலாமை என்பவற்றின் வெளிப்பாடாகவும் இந்த நிலை உருவாகிவிடவில்லை.

தமிழீழவிடுதலைப்புலிகளை அழித்துவிட வேண்டும்.  தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப்போகச் செய்ய வேண்டுமென்ற இலங்கை அரசாங்கத்தினதும், வெளிநாட்டுச் சக்திகளினதும் கூட்டுச் சதியின் தொடர்ச்சியாகவே கூட்டமைப்பினரின் போக்கும், செயற்பாடுகளும் அமைந்துள்ளன என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஊடகங்களில் புற்றீசல் போல்  தகவல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதாவது கூட்டமைப்பினரில் ஒரு பகுதியினர் தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் கூட்டுச்சதியில் பங்களராகச் செயற்பட்டமை குறித்த  தகவல்களும் ஊடகங்களில் கசிந்துள்ளன.  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்களே இத்தகைய தகவல்களுக்குச் சொந்தக்காரர்களாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
2004ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளில் பிளவினை ஏற்படுத்துவதில் இலங்கையுடன் இணைந்து சர்வதேச சக்திகள் வெற்றி பெற்றன.  இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்பே   கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்  ஒரு பகுதியினர் கூட்டுச்சதிக்கு ஒத்திசைவானவர்களாக, பங்காளராக இருந்திருக்கின்றனர்.
   
2002 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது கொழும்பில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டுத்   தூதரக  உயர்அதிகாரி ஒருவரின் வாசஸ்தலத்தில் விருந்துபசாரம் ஒன்று ஏற்பாடாகி இருந்தது.  அந்த விருந்துபசாரத்தில் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் பங்குபற்றினர்.  இவர்களில் ஒருவர் ஆங்கிலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளை சரமாரியாக   விமர்சித்துப் பேசினார்.  விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட அனைவரது கண்களும் அந்தத் தலைவரை நோக்கித் திரும்பின.  அவருடைய உரை எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது மாத்திரமல்ல விரைவில் அந்த தமிழ்த் தலைவர் கூட்டமைப்பில் இருந்து விலகப்போகிறார் என்ற செய்தியை எனக்கு உணர்த்தியது.  நான் எதிர்பார்த்தது போல் குறிப்பிட்ட தமிழ்த் தலைவர் குறுகிய காலத்தில் கூட்டமைப்புடனான உறவினைத் துண்டித்துக்கொண்டார்.

இவரது உரை முடிந்தவுடன் இன்னொரு ஆச்சரியம் அங்கு நிகழ்ந்தது.  கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர் விடுதலைப்புலிகள் மீது விமர்சனங்களை முன்வைத்தவரைக் கட்டித்தழுவி “நீ வெளிப்படையாகப் பேசுகின்றாய். நான் மௌனமாக இருக்கின்றேன்”       என்று கூறிவிட்டு விருந்து நடைபெற்ற வாசஸ்தலத்தில் இருந்து வெளியேறினார்.  அவ்வாறு வெளியேறியவர் இன்று வரை கூட்டமைப்பில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 அந்த வகையில் கூட்டமைப்பில் ஒரு பகுதியினர் விடுதலைப்புலிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு 2002 ஆம் ஆண்டுக்கு முன்பிலிருந்தே இலங்கையுடனான சர்வதேசத்தின்   கூட்டுச்சதியில் வெளித்தெரியாத பங்காளர்களாக இருந்து வந்துள்ளனர் என்பது புலனாகின்றது.  2004ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகளில் பிளவினை ஏற்படுத்தி கருணாவைப் பிரித்தெடுத்து உலகமே வியந்து நின்ற ஒரு போராட்ட இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

தற்போது இலங்கையினதும் சர்வதேச சக்திகளினதும் கூட்டுச் சதி ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மீதும் திரும்பியுள்ளது.  தமிழ்த்தேசியத்தை சிதைக்கும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப் போகச்செய்யும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் முக்கிய பங்காளராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஒரு பிரிவினர் வெளிப்படையாகவே களம்  இறக்கப்பட்டுள்ளனர்.  இந்தப் பிரிவினர் இலங்கையில் சிங்களத்தலைமைத்துவங்களின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ,  இன்றைய நல்லாட்சியின் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமானவர்கள். அன்று கருணா அம்மான். இன்று கூட்டமைப்பின் ஒரு பகுதியினர்.
  2010ஆம் ஆண்டில் அதிவணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு அவர்கள் “முள்ளிவாய்க்கால் அழிவைவிட மிக மோசமான முள்ளிவாய்க்கால் அழிவை தமிழ் மக்கள் எதிர்கொள்ளப் போகின்றனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.  இந்த முள்ளிவாய்க்கால் அழிவு ஒட்டுமொத்த தமிழினத்தின் இருப்பு, பாதுகாப்பு, தாயக கோட்பாடு, சுயகௌரவம், அரசியல் அபிலாசை அனைத்தையும் கேள்விக் குறியாக்கிவிடும் என்றும் அதிவணக்கத்துக்குரிய அடிகளார் சுட்டிக்காட்டியிருந்தார்.

  இன்று அந்த நிகழ்ச்சி நிரலினை நிறைவேற்றுவதில் கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் களமிறங்கியுள்ளனர்.  மக்களின் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்துடன் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் பயணத்தை ஆரம்பித்துவிட்டனர்.  தமது நிகழ்ச்சி நிரலுக்கு தமிழ் மக்களிடையே உள்ள அனைத்து சக்திகளையும் இலங்கையுடனான சர்வதேச  கூட்டுச்சக்திகளின் துணையுடன் எதிர்கொள்ளவும் துணிந்துவிட்டனர்.  இவர்களின் முதலாவது இலக்காக வடமாகாண முதலமைச்சர் உள்ளார்.

இந்தக் கூட்டுச் சதி மூலம் தோற்றுப் போவது தமிழ் மக்களோ அல்லது தமிழ்த் தேசியமோ அல்லது தமிழ் மக்களின் அரசியல் அபிலாகைளோ அல்ல என்பதனை காலம் இவர்களுக்கு நிச்சயம் உணர்த்தும்.

  “தர்மத்தினை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்” இது தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.


 வி.தேவராஜ், மூத்தபத்திரிகையாளர்-


நிமிர்வு ஆடி 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.