ஒவ்வொரு பிடிமண்ணும் ஒவ்வொரு துளி நீரும் நம் உயிர் ஆதாரம்




மூன்று தசாப்தகால யுத்தம் எதிர்பாராத விதத்தில் முடிவுக்கு  வந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.  இக்காலப்பகுதியில் போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களிற்கான உடனடி உதவிகள், ஊனமுற்றோர், பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் மறுவாழ்வு முதற்கொண்டு பண்பாட்டு மீளெழுச்சி, சமய, சமூக நிறுவனங்களின் மீள்நிர்மாணம் வரை பல்வேறு செயற்பாடுகளை புலம்பெயர்ந்தோர் மேற்கொண்டு வருகின்றனர்.  இவற்றைவிட இலங்கைத்தீவில் வாழும் தமிழரின் பொருளாதாரத்தினைத் தீர்மானிக்கும் ஆதாரசக்தியாக புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்களே விளங்குகின்றனர். இதனால் வடக்குக் கிழக்கில் எஞ்சியுள்ள மக்களில் பலர் குறிப்பாக இளைஞர்கள் வெளிநாட்டுக்குப் புலம்பெயர்தலில் அதீத ஆர்வம் கொண்டுள்ளனர்.  போர் முடிவுக்கு வந்து எட்டாண்டுகளின் பின்னரும் காணப்படும் இந்நிலைக்குக் காரணங்கள் பல இருக்கின்றன.  இருப்பினும், புலம்பெயர்தல் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் அனைவரும் ஒத்த கருத்துக்கு வரவேண்டிய கட்டத்தில் உள்ளோம்.

  தீவகமக்களின் உள்ளக மற்றும் வெளிநாடுகளிற்கான புலம்பெயர்தலுக்கான ஏது நிலைகளை ஆராய்ந்தால் பல்வேறு உண்மைகள் வெளிவரக்கூடும்.  கடந்த பத்தாண்டுகளில் தீவகப் பிரதேசங்கள் பலவிதங்களில் அபிவிருத்தியைச் சந்தித்திருக்கின்றன.  பாடசாலைகளிற்குப் பற்பல கட்டடங்கள் நிறுவப்பட்டுள்ளன. உள்ளக வசதிகள் பெரிதும் மேம்படடிருக்கின்றன.  சனசமூக நிலையங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன. அங்கு வாசிப்புக்கான வசதிகள் முதற்கொண்டு படிப்பகங்கள் வரை உருவாக்கப்பட்டுள்ளன.  இந்து கிறீஸ்தவ ஆலயங்கள் மீளமைக்கப்பட்டிருக்கின்றன.  இருந்தும் தீவகத்தினை விட்டு வெளியேறிச் செல்லும்  மக்கள் தொகை அதிகரித்தே வருகின்றது.  காரணம் என்ன? இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது தீவகம் முதற்கொண்டு வடக்குக் கிழக்கின் சகல பகுதிகளும் கடுமையான வறட்சிக்கு உட்பட்டுள்ளன. தீவகத்தில் குடிநீர் பவுஸர்கள் மூலம் வழங்கப்படுகின்றன என்பது உண்மைதான். எனினும் இது ஒரு முழுமையான தீர்வு அல்ல.  கிணறுகளில் ஒரு சொட்டு நீர் தன்னும் இல்லாதிருப்பதால் சகல தேவைகளுக்குமான நீரை பவுஸர்களில் வழங்கிவிட முடியாது.  முறையான பாதைகள் அற்ற மீனவக் கிராமங்களிற்கு இந்த வசதி கூடக்கிடைக்காது.  அவர்கள் தினமும் 25லீட்டர் கொள்கலன்களில் நீரைச் சுமந்து செல்வதை எங்கும் காணலாம்.

 அபிவிருத்தி பற்றி சகலதையும் ஆராய்ந்த நாம் அடிப்படை விடயங்களில் தவறிழைத்துவிட்டோம் என்பதையே இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.  இத்தவறுக்குக் காரணமானவர்கள் என்று யாரையும் குற்றம் சொல்ல நான் விழையவில்லை.  நாம் அனைவரும், நாங்கள்  சுட்டும் விரல்களை எங்களை நோக்கி திருப்பி சுயவிசாரணை செய்ய வேண்டும்.  செய்தாலன்றி இச்சூழல் மாறாது.  நீர்வள முகாமைத்துவம் தொடர்பான நிலையான கொள்கைகளை உருவாக்க நாம் அனைவரும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.  புலம்பெயர் மக்கள், கல்விச் சமூகத்தினர், அரசியல்வாதிகள் அனைவரும் வெளிப்படையான கருத்துப்பகிர்வு மற்றும் நிபுணத்துவ ஆலோசனைகள் மூலம் கொள்கையுருவாக்கத்தில் பங்கெடுக்க வேண்டும்.

 நீர் மேலாண்மை மட்டுமன்றி நிலவளப் பயன்பாடு, நிரந்தரத் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தல், சூழலுக்கிசைவான நிலைத்து நீடிக்கும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தல் போன்ற பலவிடயங்களில் நாம் அக்கறையின்றி இருந்து வருகிறோம்.  இனியாகினும் எமக்கென ஒரு பொருண்மியத் தொலைநோக்கினை உருவாக்கிச் செயற்படுத்த வேண்டும்.  இல்லையேல் எம் மக்கள் ஒரு நீண்ட வெற்றிடத்தில் மீளவொண்ணா வறுமையில் வீழ நேரிடும்.  இருபத்தோராம் நூற்றாண்டுக்கு ஏற்றதும் பசுமைத் தொழில்நுட்பங்களிற்கு முன்னுரிமை தருவதுமான தொழிற்துறைகளிற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  காக்கைவெளிக் கடற்கரைச் சாலையூடு ஒரு முறை பயணிப்பீர்களானால் பிளாஸ்ரிக் பொலித்தீன் பாவனை எவ்வளவு ஆபத்தானதொன்றாக மாறியுள்ளது என்பதை உணர்வீர்கள். பிளாஸ்ரிக் பொலித்தீனுக்கான பதிலீட்டுப் பொருள் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.  பாரம்பரியமான தும்பு, பனையோலை, வாழைநார் உற்பத்திகளில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தல் வேண்டும்.  புங்குடுதீவில் அமைந்துள்ள வட இலங்கைச் சர்வோதயம், நீர்வேலி வாழைக்குலைச் சங்கம் போன்றவை பதிலீட்டுப் பொருள் உற்பத்திக்கு முக்கியத்துவம் தருகின்றன.

 உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் பல தமது வளங்களைச் சரியான திட்டமிடலுடன் அணுகியதன் காரணமாகவே அபிவிருத்தியை அடைய முடிந்திருக்கிறது.  பெரிதும் பயன்படுத்தப்படாமல் பயனற்றுப் போயிருக்கும்  எம் அரிய வளம் கடல்வளமே.  பாரம்பரிய மீன்பிடியைத் தவிர்த்து நாம் வேறு எதனையும் பற்றிச் சிந்திப்பதில்லை. ஆழங்குறைந்த கண்டமேடைப் பகுதிகளைப் பயன்படுத்தி பற்பல பணம் கொழிக்கும் தொழில்களை உருவாக்க முடியும்.  உதாரணமாக உவர்நீர் இறால் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு, கடற்பாசி வளர்ப்பு போன்றவற்றினைக் குறிப்பிடலாம்.  இப்புதிய தொழில் வாய்ப்புகள் பற்றி மக்களுக்கு அறிவூட்டவும் பயிற்சிகள் வழங்கவும் எம்மிடம் நிறுவனங்கள் எதுவும் இல்லை. கண்டல் காடுகளின் தாயகமாக இருக்கும் வடக்கும் கிழக்கும் அதன் பொருளாதார மகிமையை உணர்ந்ததுமில்லை.  அதனைக் காப்பதற்கான சூழலியற் செயற்பாடுகளில் எவ்வித முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டதுமில்லை. நம் வளங்களை நம்மவர் புறக்கணித்தொதுக்க அதனைச் சுற்றி வட்டமிடுகின்றன  மேலைநாட்டு நிறுவனக் கழுகுகள் என்பதே இன்றைய நிலை.  ஆழம் குறைந்த கண்டமேடைகள் மட்டும் அல்ல, பரந்து விரிந்திருக்கும் இந்துமா பெருங்கடலும் ஓர் அட்சய பாத்திரமே. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் அருகிருந்தும் நம்மவர்கள் ஆழ்கடல் மீன்டபிடி தொடர்பில் கிஞ்சித்தும் அக்கறை காட்டுவதில்லை.

 கடல் வளத்தினையும். நன்னீர் வளத்தினையும் சரிவரப் பயன்படுத்தத் தவறிய நாம் நிலவளத்தினை நாசம் செய்யும் இரசாயன உரங்களையும் பீடைகொல்லிகளையும் அளவுக்கதிகமாக பயன்படுத்தப் பின்னின்றதில்லை.  திட்டமிடலற்ற விவசாய இரசாயனப் பயன்பாடு நம் பாரம்பரிய விவசாய நிலங்களை மலடாக்கியுள்ளதோடு புற்று நோய்த் தாக்கத்தினையும் சிறுநீரகச் செயலிழப்பையும் எம் மக்களின் தீராச் சுமையாக்கியுள்ளது.  காலம் பிந்தியேனும் நம்மவர்கள் இயற்கை வேளாண்மையில் ஆர்வம் கொண்டு செயற்பட்டு வருகின்றமை மகிழ்ச்சியளிக்கும்  மாற்றமாகும்.  தெல்லிப்பழையில் அண்மையில் விடுவிக்கப்பட்ட விவசாய நிலங்களில் சேதனப் பயிர்செய்கையை அறிமுகம் செய்யப் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இரசாயனங்களால் மலடாக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுத்து அதில் இயற்கைப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளது.  அதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் திட்டமிடல் உதவிகளையும் சுவடி நிறுவகம் போன்ற சமூக முயற்சியாண்மை நிறுவனங்களும் தனிப்பட்ட துறைசார் நிபுணர்களும் வழங்கி வருகின்றனர்.  அசோலா-தாரா-நெற்பயிர் மூன்றையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்படும் சேதன முறையிலான நெற்செய்கை தென்னாசிய நாடுகளில் பெரிதும் பிரபல்யமானது.  இது வடக்கில் பரீட்சார்த்த ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் மண்ணில்லா விவசாயம், நீரூடக வளர்ப்பு முறைகள் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் எமது பிரதேசங்களில் முறையாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.  தற்போது உவர்நீராகியுள்ள நிலங்கள் பயன்பாட்டிலிருந்து விலக்கப்படாத சூழலை எவ்வாறு ஏற்படுத்துவது போன்ற விடயங்களில் திறந்த கருத்துப்பரிமாற்றங்கள் அவசியம் தேவை.

 மூன்று தசாப்தகால யுத்தம் காரணமாக பாரம்பரிய கால்நடை வளர்ப்புத் தொழிற்துறைகள் பாரிய அழிவைச் சந்தித்துள்ளன. எனினும் தற்போது இத்துறை மீண்டும் வடக்கு கிழக்கில் மீளெழுச்சி அடைகிறது.  மேச்சற் தரவைகள் அழிவடைந்துள்ளமை, விலங்குணவு உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்பட்டமை போன்றவை இத்துறையின் மீளெழுச்சிக்கு பாரிய தடையாக அமைகின்றன.  அடம்பன் பண்ணை, சீர் உயிர்ப்பண்ணை  போன்ற நிறுவனங்கள் ஒருங்கிணைந்த சேதனப் பண்ணை முறைமைகளை அறிமுகம் செய்வதற்கு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.  நன்னீர் மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு போன்ற துறைகளை நம்மவரிடையே இனிமேற்தான் அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது.  இத்தொழிற்துறைகளில் தென்னிலங்கைக்கும் நமக்கும் இடையிற் பாரிய இடைவெளி காணப்படுகிறது.  அலங்கார மீன் வளர்ப்பானது இலங்கையின் ஏற்றமதிகளில் முக்கிய இடத்தைப் பிடித்துவருகிறது.  நாமோ இத்துறை பற்றி அடிப்படை புரிதலுமற்றுக் காணப்படுவது துரதிஸ்டவசமானதொன்று.  புலம்பெயர் சமூகத்தின் நிதிப்பங்பளிப்புடன் உச்ச அளவிலான அறிவு, திறன் உள்ளீடுகளை மேற்கொண்டால் மாத்திரமே நாமும் ஏற்றுமதிக்கான ஏதுநிலைகளை உருவாக்கமுடியும்.

 இக்கட்டுரையில் அடிப்படை வளங்களின் மேலாண்மை தொடர்பில் முறையான கொள்கைவகுப்பின் அவசியம் பற்றியும், அடிப்படை வளங்களைச்; சார்ந்தியங்கும் முதனிலைக் கைத்தொழில்களின் மேம்பாடு பற்றியும் விரிவாக ஆராய்ந்தோம்.  இவ்விடயம் சார்ந்த தளத்தில் கடந்த பத்தாண்டுகளாக செயற்பட்டுவருவதில் இருந்து பெற்ற அனுபவங்கள், அனுபவங்களிலிருந்து கிடைத்த படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டே  இக்கட்டுரையை வரைந்துள்ளேன்.  இவ்விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன் தாயகத்தில் காத்திரமான செயற்திட்டங்களை முன்னெடுக்கவும் விரும்புகின்றேன்.  அதற்கான வாய்ப்புக்களை இக்கட்டுரை நிச்சயம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.  ஒவ்வொரு பிடிமண்ணும் ஒவ்வொரு துளி நீரும் நம் உயிருக்கு ஆதாரம் என்பதை நினைவிற் கொண்டு செயற்படுவோம்!

(யாழ் இந்துக்கல்லூரியின் அவுஸ்ரேலியா  - மெல்பேர்ன் பழைய மாணவர் சங்க வருடாந்த 2017 இதழில் வெளியான கட்டுரை) 

 வைத்தியகலாநிதி.ந.பிரபு
யாழ் இந்துப் பழைய மாணவர் (2006 உயிரியற்துறை)
இணை நிறுவுனர், சுவடி நிறுவகம்.


நிமிர்வு ஐப்பசி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.