கூட்டாகக் குரல் கொடுக்கும் போதே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியம்



அரசியல் கைதிகள் விடுதலைக்காக தமிழ் மக்கள் முன்னரை விட முனைப்பாகப் போராட ஆரம்பித்துள்ளனர். அரசியல் கைதிகளுக்காக போராட்டங்கள், வீதி மறியல்கள், ஹர்த்தால் என்று தமிழர் தாயகம் கொந்தளிப்பாகியுள்ளது.   யாழ், கிழக்கு பல்கலைக்கழக சமூகங்களும் பல்வேறு தளங்களில் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தீர்மானகரமான முடிவெடுக்கும் நிலையில் உள்ள ஜனாதிபதியோ அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தை ஒத்திப் போட்டு வருகிறார். 

 “சில அரசியல் கட்சிகள் மக்களின் பிரச்சனைகளை தீர்த்துவைக்க முயலாமல் அதை தமக்கு சார்பான அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர். பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் இவ்விடயங்களை அணுகவில்லை. இவ்வாறான காரணங்களினால் தான் இந்த விடயத்தினை நாம் கையிலெடுத்துள்ளோம்." என தெளிவாக யாழ் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியத்தினர்  20.10.2017 அன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்தனர்.

அன்று சமூக விடுதலைக்காக சிலுவை சுமந்த நாம் இன்று சரீர விடுதலைக்காக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. எம்மவர் சாதனைகளைச் சொல்லி கதிரையேறிய கதாபாத்திரங்கள் கண்மூடிச் செயற்படுகின்ற இவ்வேளையில் கல்விச் சமூகம், பல்கலைக்கழக சமூகம் எமக்கான விடுதலை நோக்கிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அரசியல் கைதிகள் அண்மையில் ஊடகங்களுக்கு அனுப்பிய கடிதமொன்றில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளனர். 

 அரசியல் கைதிகள் விவகாரத்தை அரசாங்கமோ வடக்கு மக்களின் பிரச்சினையாகவும், பயங்கரவாதத்தோடு தொடர்புபட்ட பிரச்சினையாகவும் மட்டுமே பார்க்கின்றது.   சிறைகளில் வாடும் பலரும் விளங்காத மொழியில் எழுதப்பட்ட விடயங்களை ஒப்புக்கொண்டு கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். தாம் இன்ன காரணத்துக்காக தான் சிறைகளில் வாடுகிறோம் என்கிற விடயமே தெரியாத பலர் சிறைகளில் வாடுகின்றனர்.  இவர்களின் விடுதலைக்காக கூட்டாக தமிழ் சமூகம் குரல் கொடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. இவர்களுக்கு தண்டனை வழங்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு தண்டனை வழங்குவது தான் இவர்களின் நோக்கம். தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு தண்டனை வழங்குவதென்ற இந்த நிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்கிறதா? இல்லையென்றால் இவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  சிவில் சமூகங்களின் தலைமைத்துவம் அரசியல் தலைமைத்துவங்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய நிலைக்கு வர வேண்டும். அரசியலில் அடிமட்ட தலைமைத்துவம் வெளியில் வர வேண்டும். உதாரணமாக இயக்கங்கள் உருவாகிற காலத்தில் அவர்கள் ஒரு அமைப்புக்குள் வந்தவுடன், அரசியல் தலைமைத்துவங்கள் எல்லாம் பின்னால் போகிற நிலை இருந்தது. கீழே இருக்கிறவர்கள் மேலே வரும் போது மேலே இருக்கிறவர்கள் வெளியே தள்ளப்படுகிறார்கள். அப்படியானதொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குகின்ற நிலைக்கு நாங்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளோம். இப்போது இருக்கிற தலைமைத்துவங்களை நம்பிக் கொண்டு போனால் எங்களுக்கு எதிர்காலம் கிடையாது. என  “அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம்’’எனும் அமைப்பின் ஏற்பாட்டாளர்  அருட்தந்தை சக்திவேல் நிமிர்வின் வைகாசி இதழுக்கு பேட்டியளிக்கும் போது அழுத்தம் திருத்தமாகவே குறிப்பிட்டிருந்தார். 

சிறைகளுக்குள் வாழும் இந்த அரசியல் கைதிகளின் குடும்பங்களோ மோசமான நிலையில் உள்ளன. குடும்ப உறவுகள் அன்றாடம் வாழ்க்கையை கொண்டு நடாத்தவே மிகவும் சிரமப்படுகின்றன. பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். எமது தமிழ் சமூகம் இவர்களின் விடுதலைக்கு தொடர்ந்து கூட்டாக குரல் கொடுக்கும் போது தான் ஒட்டுமொத்த விடுதலை என்பது சாத்தியமாகும்.    

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.