தாரா வளர்ப்பில் சாதிக்கும் இளம்பெண்


               

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த இளம் பெண்ணான ஸ்ராலினி ராஜேந்திரம் இன்று ஒரு வெற்றிகரமான தொழில் முயற்சியாளராக விளங்குகிறார். இதன்மூலம் எம் பெண்களுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்.  வியாபார முகாமைத்துவம் படித்துள்ள இவர் இன்று சுவடிகள் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஆக பணியாற்றுகிறார்.  அதேவேளை, சீர் பயோ (ளுநநச டீழை) என்கிற நிறுவனத்தை நிறுவி அதனூடாக தாரா வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.

 இன்று 300 க்கும் மேற்பட்டதாராக்களைவளர்ந்துவரும்  ஸ்ராலினியுடன் பேசியபோது,

2016 ஆம் ஆண்டு சித்திரை மாதம் மலேசியப் பயணத்தின் போது தான் என் தொழில் முயற்சிக்கான முதல் விதை நாட்டப்பட்டது. அங்கு பல புதிய வர்த்தக முயற்சிகள் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வெற்றிகரமான முதலீட்டாளர்களையும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது.  இங்கே எப்படி பரவலாக கோழி இறைச்சி விற்கப்படுகிறதோ அதே போல் அங்கே உள்ள பெரும்பாலான கடைகளில் தாரா இறைச்சி விற்கப்படுகிறது. தாரா இறைச்சியின் சுவையும், போசணைப் பெறுமானமும் நன்றாகவே இருந்தன. தாரா இறைச்சி ஏன் எங்கள் பகுதிகளில் இல்லை என எனக்குள்ளே கேள்வி தோன்றியது. அதனை ஏன் சிறு தொழில் முயற்சியாக ஆரம்பிக்கக் கூடாது என்று யோசித்தேன்.

எனக்கு சுவடிகள் நிறுவனத்தை சேர்ந்த வைத்தியர் நடராஜா பிரபுவும், கணேசமூர்த்தி ஸ்ரீபவனும் சரியானதொரு வழிகாட்டிகளாக இருந்தார்கள். அவர்களின் ஆலோசனையின் பேரில் 2016 ஆனி மாதம் ஐந்து சோடி தாராக்களுடன் தாராப் பண்ணையை கொக்குவில் பொற்பதி பிரதேசத்தில் ஆரம்பித்தேன். எனக்கு இந்த தொழில் முயற்சி பெரும் சவால் நிறைந்ததாகவும் இருந்தது. ஏனெனில், எமது மக்கள் தாரா இறைச்சி, முட்டைகளை பெரும்பாலும் உணவுத் தேவைக்கு பயன்படுத்தாத சூழலே இருந்தது. மக்களுக்கு தாரா இறைச்சி மற்றும் முட்டை நல்ல போசனைப் பெறுமானங்கள் நிறைந்தது என விழிப்பூட்ட துண்டுப் பிரசுரங்கள் மூலம் முயற்சித்தோம். அது நல்ல பலனை அளித்தது. கிட்டுப் பூங்காவில் நடந்த சிறுகைத்தொழில் கண்காட்சியிலும் காட்சிக் கூடமொன்றை அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட முடிந்தது.

 இப்போது ஓரளவு தாரா இறைச்சி நுகர்வு எம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தாரா முட்டைகளை அழகுசாதன தேவைக்காக இங்கே அதிகம் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக தாராக்கள் குறித்து எம்மக்களிடையே சில கருத்துக்கள் உண்டு. ஒன்று, தாரா முட்டை சரியான வெடுக்கு என்று சொல்வார்கள். அவர்கள் சொல்கிற அளவுக்கு தாரா முட்டை வெடுக்கு கிடையாது.

இரண்டாவது, தாராக்கள் வளர்ப்பதற்கு குளம் அல்லது நீர்நிலை ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும் என்பது. நான் கோழிக் கூடுகள் போன்ற நிலக் கூடுகளுக்குள் வைத்து தான் கடந்த ஒன்றரை வருடங்களாக தாரா வளர்த்து வருகிறேன். எந்த பிரச்சினையும் இல்லாமல் வளர்ந்து வருகிறது. நீர்நிலை அவசியமல்ல. இருந்தால் நல்லது.

மூன்றாவது தாராக்களுக்கு சாப்பாட்டு செலவு கூடுதலாக இருக்கும் என்பது. நான் பெரிதாக எந்த செலவும் இல்லாமல் தான் தாரா வளர்த்து வருகிறேன். மூன்று திருமண மண்டபங்களில் ஓடர் கொடுத்துள்ளேன். அங்கே வீணாகும் சாப்பாடுகளை வாங்கி வந்து தான் தாராக்களுக்கு உணவாக கொடுக்கிறேன். இது தவிர அசோலாக்களையும், மண்புழுக்களையும்  வளர்த்து தாராக்களுக்கு உணவாக்கி வருகிறேன்.

 தாராக்களை மூன்று நிலைகளில் விற்பனை செய்து வருகிறேன். தாராக் குஞ்சு ஒருசோடி 450 ரூபாய்க்கும், 3 மாதம் நிரம்பிய தாராக்கள் ஒரு சோடி - 1400 ரூபாய்க்கும், பெரிய தாராக்கள் 3500 ரூபாய்க்கும் விற்று வருகிறேன். என் போன்ற தாரா வளர்க்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு தாரா வளர்ப்பு முறைகளை சொல்லிக் கொடுக்கவும் ஆர்வமாக இருக்கிறேன். ஏற்கனவே சில இடங்களில் என்னிடம் தாரா வாங்கி வளர்ப்பை சிலர் ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கும் சந்தை வாய்ப்பை நானே ஏற்படுத்திக் கொடுக்கிறேன்.

தாரா வளர்ப்பு மட்டுமல்ல தாரா முட்டை மா என்கிற சத்து மாவையும் உற்பத்தி செய்து வருகிறேன். வல்லாரையும் வளர்த்து விற்பனை செய்து வருகிறேன். அத்தோடு கத்தாழை நாற்றுக்களையும் விற்பனை செய்கிறேன். முருங்கை கன்றுகளை வளர்க்கும் நோக்கமும் எதிர்காலத்தில் இருக்கிறது.  இவையெல்லாவற்றையும் தாண்டி சுவடி அமைப்பின் கல்வி நிறுவனமூடாக சின்னம் சிறார்களுக்கு ஆங்கில மொழியையும் கற்பித்து வருகிறேன், என்றார்.

இன்று வேலையில்லா பட்டதாரிகள் பலர் அரசாங்க வேலைக்கு மட்டுமே விண்ணப்பித்துவிட்டு காத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் முற்றுமுழுதாக தன் உழைப்பை நம்பி புதிய முயற்சிகளை செய்யும் இளையோரை ஊக்குவிக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும்.  வறுமையான தச்சுத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்த ஸ்ராலினி இன்று  24 வயதிலேயே இந்த நிலைக்கு முன்னேறி இருப்பது ஏனையவர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

தொடர்புகளுக்கு-0779866409, 0768384466
தீசன்-
நிமிர்வு ஐப்பசி 2017 இதழ்-


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.