யார் இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள்?






ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மார் நாட்டின் மேற்கில் உள்ள ராகைன் மாகாணத்தில் வாழ்ந்து வரும் மக்கள் கூட்டத்தினர்.  ஆனால் அம்மக்களை வங்காளிகள் எனவும் வந்தேறு குடிகள் எனவும் மியான்மார் அரசாங்கம் கருதி வருகிறது.  அவர்களுக்கு மியான்மாரில்  குடியுரிமை இல்லையெனவும் கூறி வருகிறது. இது மியான்மாரில் உள்ள இனவாத பௌத்த கொள்கைகளின் ஒரு வெளிப்பாடாகும்.  இதனை எம்மவரில் சிலரும் நம்பி ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியான்மார் அரசின் வன்முறைகளுக்கு  வக்காலத்து வாங்கி வருகிறார்கள். முகநூல் போன்ற வலைத்தளங்களில் அப்படியான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள்.  ரோஹிங்யா அகதிகளை இலங்கையினுள் அனுமதிக்கக் கூடாதென இலங்கைப் பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.  மியான்மார் அரசுக்கும் தமது ஆதரவையும் தெரிவிக்கிறார்கள்.  இந்த ரோஹிங்யா மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அரச இனவழிப்புக்கான காரணங்களை கதைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

 கரையோர மாகாணமாகிய ராகைன் கி.பி. 8ஆம் நூற்றாண்டு முதலே அராபிய வர்த்தகர்களின் தாக்கத்துக்கு உட்பட்டு வந்துள்ளது.  அன்று இம்மாகாணம் அரகன் என அழைக்கப்பட்டது.  அரேபிய வர்த்தகர்களின் இஸ்லாம் மதத்தால் கவரப்பட்ட அரகன் மக்களில் பெரும்பான்மையினர் இஸ்லாம் மதத்தைத் தழுவிக் கொண்டனர்.



கி.பி 1430 ஆண்டில் வங்கதேச மன்னன் ஜலாலுதீன் முகமது,  வலிகான் எனும் தளபதி தலைமையில் அரகன் மாகாணத்தைக் கைப்பற்ற படைகளை அனுப்பினான்.  அரகனைக் கைப்பற்றிய வலிகான் அம்மாகாணத்தின் அரசனாகத் தன்னையே பிரகடனப்படுத்திக் கொண்டான்.  அங்கு முஸ்லிம் சமூக அமைப்புக்களையும், முஸ்லிம் நீதி மன்றங்களையும் நிறுவினான்.  இந்த வரலாற்று ஆவணங்களில் இருந்து அரகனின் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளனர் என்று புலனாகிறது.  மியான்மார் அரசு சொல்வது போல இவர்கள் ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்ட வந்தேறு குடிகள் அல்ல என்பதும் தெளிவாகிறது.

 இன்று ராகைனில் ஏறத்தாள 1.1மில்லியன் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  எவ்வாறு இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள சிறுபான்மை தமிழ்மக்களால் பெரும்பான்மை சிங்கள இனம் பாதிக்கப்பட்டு விடும் என்று பெரும்பான்மை அரசு பயப்பிராந்தி அடைகிறதோ அவ்வாறே ரோஹிங்யா சிறுபான்மையினரால் பெரும்பான்மை பௌத்த இனம் அழிந்துவிடுமென மியான்மார் அரசு கருதுகிறது.  இலங்கையிலும் மியான்மாரிலும் ஆட்சியாளர்கள் தமது இருப்பைத் தங்க வைத்துக் கொள்ள இப்பயப்பிராந்தியைத் திட்டமிட்டே பெரும்பான்மை பௌத்தர்கள் மத்தியில் பரப்பினார்கள்.  அதில் வெற்றியும் கண்டார்கள். இன்று இவ்விரு நாடுகளிலும் பெரும்பான்மை இனமக்கள் தமது அரசாங்கங்கள் சிறுபான்மை இனங்களின் மீது கட்டவிழ்த்து விடும் இனவழிப்பை நியாயப்படுத்தும் துரதி~;ட நிலையிலுள்ளனர்.

ராகைன் மாகாணத்தில் உள்ள பௌத்தர்களை முஸ்லிம்கள் கொல்வதாக மியான்மாரின் அரசாங்கம் பிரச்சாரப்படுத்தி வருகிறது.  இவற்றையெல்லாம் காரணம் காட்டி இம்மக்களின் குடியுரிமையை 1982ஆம் ஆண்டு பறித்துக் கொண்டது.  அன்றிலிருந்து ரோஹிங்யா முஸ்லிம்கள் நாடற்றவர்களாகி அல்லல்படுகிறார்கள்.  எந்த அரச உதவிகளும் கிடைப்பதில்லை.  ஓர் ஊரில் இருந்து இன்னோர் ஊருக்கு செல்வதானாலும் இராணுவ அனுமதி பெறவேண்டும்.  முஸ்லிம்களுக்கு ராகைன் மாகாணம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை போலவே உள்ளது.

  தமது மக்களின் மீதான இராணுவ அடக்கு முறைகளுக்கு முகம் கொடுக்க முஸ்லீம் இளைஞர்கள் முற்பட்டனர். தமது மக்களின் குடியுரிமையைக் கோரியும் சுயநிர்ணய உரிமையைக் கோரியும் போராட முற்பட்டனர். அரகன் ரோஹிங்யா மீட்பு இராணுவம் (Arakan Rohingya Salvation Army) என்ற பெயரில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தனர்.  2012ஆம் ஆண்டில் பொலிஸார் மீது ஒரு தாக்குதலை மேற்கொண்டனர்.  இதனையடுத்து நடந்த இனக்கலவரத்தில் இராணுவத்தினராலும் பௌத்தர்களாலும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.  ஆயிரக்கணக்கானவர்கள் அகதிகள் ஆக்கப்பட்டனர்.  பலர் பங்களாதேசுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர்.

 எல்லா அடக்குமுறை அரசுகளும் சொல்வது போலவே மியான்மார் அரசாங்கமும் ARSAஅமைப்பை ஒரு பயங்கரவதாத அமைப்பாக முத்திரை குத்த முயற்சிக்கிறது.  இவர்கள் முஸ்லிம்களாக இருப்பது அரசுக்கு இன்னும் இலகுவாகப் போனது.  இவ்வமைப்புக்கும் அல்கொய்தாவுக்கும் தொடர்பிருப்பதாக பிரசாரப்படுத்துகிறது.  இதன் மூலம் சர்வதேச அரசாங்கங்களை தன்பக்கம் இழுக்க முற்படுகிறது.  இதில் கணிசமான அளவு வெற்றியும் அடைந்து வருகிறது.  ரோஹிங்யா முஸ்லிம்களின் குடிஉரிமைக்கும் சுயநிர்ணய உரிமைக்குமான நியாயமான கோரிக்கையை வலுவிழக்கச் செய்ய முற்படுகிறது. யுசுளுயு சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் பயிற்சி பெறுவதாக போலிப்படங்களை வெளியிடுகிறது.  ARSAரோஹிங்யா மக்களின் குடிசைகளுக்கு தீ வைப்பது போன்ற படங்களை வெளியிடுகிறது.  அவ்வாறு  வெளியிடப்பட்ட படங்கள் போலியானவை என அண்மையில் BBC இனால் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.



மேலும் அண்மையில் கடந்த ஆவணி 25 ஆம் திகதி  பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெறும் கத்திகள் உள்@ரில் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் கொண்டே நடத்தப்பட்டுள்ளது.  இதனை மியான்மார் அரசும் ஒத்துக்கொள்கிறது. இத்தாக்குதலில் 12 பேர் பலியானார்கள்.  அதனையடுத்து கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளால் பல ரோஹிங்யா கிராமங்கள் எரியூட்டப்பட்டன. இலட்சக்கணக்கானவர்கள் பங்காளதேசுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.  அங்கு நடப்பது ஒரு இனச்சுத்திகரிப்பு என ஐ.நா கூறியுள்ளது.

 ரோஹிங்யா முஸ்லிம்களின் இன்றைய நிலை ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்ட ஆரம்ப காலகட்டத்தில் இருந்த நிலையை ஒத்தது.  இதனைச் சுட்டிக்காட்டி நிமிர்வு வைகாசி 2017 இதழில் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது.  பிராந்திய அரசுகளின் போட்டிகளில் சிக்கி எவ்வாறு ஈழத்தமிழர் போராட்டம் பெரும் இனவழிப்புக்கு உட்பட்டதோ அவ்வாறே ரோஹிங்யா முஸ்லிம்களின் போராட்டமும் இனவழிப்புக்கு வழிவகுத்துவிடும் என அஞ்சப்படுகிறது.  சர்வதேச சமூகம் இன்னுமொரு இனவழிப்பைக் கண்டும் காணாமல் இருந்துவிட முடியாது.

 அவ்வாறு இருந்தால் பாரதூரமான விளைவுகளை இம்மக்கள் மட்டுமல்ல அப்பிராந்தியமே எதிர்நோக்க வேண்டி வரும்.  மியான்மாரின் மாற்று அரசாங்கத்தின் தலைவியான ஆங்சான் சூகியைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்குலகமும் ஏனைய நாடுகளும் மியான்மாருக்கு எதிராக எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. வெறும் கண்டன அறிக்கைகளை  மட்டுமே விட்டுக் கொண்டிருக்கின்றன.

 அதேவேளை உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய நாடுகள் தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளன.  இந்நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அணி திரண்டு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளனர்.  இம்மக்கள் வெறும் கண்டனத்துடன் நின்று விடுவதில்லை.  ஆயுதம் ஏந்திப் போராடவும் தயங்குவதில்லை.  அது தமது மார்க்கத்தின் ஒரு கடமையெனவே அவர்கள் கருதுகிறார்கள்.  உதாரணமாக ரஷ்யாவின் செசென்யா மாகாணத்தின் தலைவர் ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக தனது பிரதேச மக்கள் போராட வேண்டும் என கூறியுள்ளார்.  இவ்வாறான கருத்தாக்கங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களுக்கு வரப்பிரசாதமாகப் போய்விடும்.



இஸ்லாத்தில் அடிப்படைவாதத்துக்கும் மிதவாதத்துக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் போட்டியில் ரோஹிங்யாவையும் அடிப்படை வாதத்தின் கைகளில் தாரை வார்த்துக் கொடுக்கப் போகிறதா சர்வதேச சமூகம்?  தென்கிழக்காசியாவில் ஒரு சிரியா உருவாகுவதை ஏற்றுக் கொள்கிறதா? ஐ.நா அறிக்கைகளை மட்டும் வெளியிடுவதைவிடுத்து மியான்மார் இராணுவத்தைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.  இந்தியா, சீனா உள்ளிட்ட பிராந்திய அரசுகளைக் கொண்ட ஒரு சமாதானப் படையை ராகைனுக்கு அனுப்ப முயற்சிகள் எடுக்க வேண்டும்.  ஐ.நா ராகைனில் நடப்பது இனச்சுத்திகரிப்பே என பிரகடனப்படுத்தியுள்ளது.   இருப்பினும் இங்கு இனச்சுத்திகரிப்பு நடைபெறவில்லை என்று இராணுவத்துக்கு வக்காலத்து வாங்கும் மியான்மாரின் தலைவி ஆங்சான் சூகியைக் கண்டிக்க வேண்டும்.  அவர்மீதும் இராணுவத் தலைமைகள் மீதும் பொருளாதார ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும்.   தான் வீட்டுக்காவலில் வைத்திருக்கப்பட்டிருந்த போது சர்வதேசத்தின் உதவியை நாடிய ஆங்சான் சூகி இன்று சர்வதேசத்துக்கு முகம் கொடுக்கப் பயந்து வருடாந்த ஐ.நா கூட்டத் தொடருக்கே செல்லாமல் தவிர்த்தமை இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.

மியான்மாரில் நடக்கும் ஜனநாயக மாற்றங்கள் தொடர்வதற்கு ஆங்சான் சூகி பாதுகாக்கப்பட வேண்டும் என மேற்குலகம் கருதுகிறது.  ஆனால் இந்த இடைவெளியைப் பயன்படுத்தி இராணுவமும் இனவாதமும் பலப்படுவதை மேற்குலகம் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறது.  இதே போலவே ஜனாதிபதி மைத்திரியைப் பாதுகாக்கும் கொள்கைகளால் இலங்கையில் இனவாதம் பலப்படுவதை நாம் நேரே கண்டு கொண்டிருக்கிறோம். இது சர்வதேசத்துக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.  ஜனநாயக மாற்றங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய காலஅட்டவணை ஒன்று வழங்கப்பட வேண்டும்.  ஜனநாயகத்தை ஊக்குவிக்கிறோம் என்ற கோசம் மட்டும் ரோஹிங்யா மக்களுக்கு விடிவைக் கொண்டு வராது.

லிங்கம்-
நிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.