ஈழவிடுதலைப் போராட்டத்தின் சாட்சியாளன் அமரர் பொன். பூலோகசிங்கம்

தேசப்பற்று மிக்க சட்டத்தரணியம்இ தமிழ் உணர்வாளருமான பொன் பூலோகசிங்கம் கடந்த 05.03.2018 அன்று யாழ்ப்பாணம் புன்னாலைகட்டுவனில் மாரடைப்பால் காலமானார். அவரது நினைவலைகளின் சிறு தொகுப்பு கீழே..

சட்டத்தரணியாக, எழுத்தாளனாக, விரிவுரையாளராக அடையாளப்படுத்தப்படும் பொன்.பூலோகசிங்கத்தின் மனிநேயம் அளவிட முடியாத ஒன்றாகும். சுதந்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக கடமை புரிந்த காலத்தில் மட்டுமல்ல அவரது வாழ்க்கை முழுவதும் தமிழ் தேசியத்தின் பற்றாளனாகவும், அதனை பாதுகாத்த துணிகர மனிதனாகவும் விளங்கினார். அவருக்கும் எனக்குமான உறவு கடந்த 30 வருடங்களை கடந்தது. அக்காலம் முழுவதும் என்னை ஒரு நண்பனாக சகபாடியாக, மாணவனாக, உறவினனாக கருதி வாழ்ந்த மனிதன். ஒரு நொடிப்பொழுதிலும் மனக்கசப்போ முரண்பாடோ, வேறுபாடோ ஏற்பட்டது கிடையாது. அதனால் தானோ என்னவோ அவரது மறைவை என்மனம் ஏற்க மறுக்கிறது.

அவரது இயல்புகளுக்கெல்லாம் உச்சமானது அவரது மனிதநேயம். உண்மையை உண்மையாக பேசும் மனோநிலை உண்மைக்காக எதையும் இழக்கத் தயாரானவர். ஒரு தடவை என்மீது அவதூறான வழக்கொன்றை திட்டமிட்டு சில வேண்டத்தகாதவர்கள் முன்வைத்து என்னை நீதிமன்றில் நிறுத்தினார்கள். அதன் உண்மையை அறிந்த பொன்.பூலோகசிங்கம் அதன் ஆரம்ப நாள் முதல் வழக்கு மேல் நீதிமன்றில் நிறைவுபெறும் வரை எனக்காக பாடுபட்டார். அவர் மீது பெரும் அச்சுறுத்தல்களும் துப்பாக்கிமுனை மிரட்டல்களும் வந்த போதும் அசைந்து கொடுக்காதவர். புகழ்பெற்ற பல சட்டவாதிகள் அச்சுறுத்தலை கண்டுவிட்டு ஓடிய போதெல்லாம் தனித்து நின்று உண்மைக்காக வாதாடியவர். அவரது எல்லையற்ற மனிதநேயத்தால் மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது தனது மேலங்கியைக் கழற்றி வைத்துவிட்டு சாட்சிக் கூண்டில் ஏறி தான் கண்ட உண்மையை வெளிப்படுத்தியவர். அவரது அச்செயல் என் நெஞ்சை உலுக்கியது. அவர் மீதான பற்றுதலை மேலும் அதிகரிக்க செய்தது. உன்னதமான மனித உள்ளத்தின் உணர்வின் வெளிப்பாட்டை அவரது செயல் உணர்த்தியது.

அவரது மறைவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பும் என்னை தொலைபேசியில் அழைத்து Russel  எனும் அரசியல் அறிஞரின் அரசியல் கோட்பாடு பற்றிய நூல் ஒன்றினைக் குறிப்பிட்டு அதனை எடுத்துவருமாறும் கேட்டிருந்தார். திங்கட்கிழமை மாலை 4.00மணிக்கு ஒப்படைப்பதாகவும் நான் உரையாடியிருந்தேன். அவரது இயல்பில் பிரதான விடயம் நூல்களை சேகரிப்பதும் பாதுகாப்பதுமாகும். ஈழவிடுதலைப் போராட்டம் முழுவதும் வெளிவந்த அனைத்து நூல்களையும் சேகரித்தது மட்டுமன்றி தமிழ் தேசியத்திற்கானதும் அதற்கு எதிரானதுமான அனைத்து அரியவகை நூல்களையும் பாதுகாப்பாக வைத்திருந்தவர். 1996 ஆம் ஆண்டு குடாநாட்டைவிட்டு இடம்பெயரும் போது அவற்றை விட்டுவிட்டு வந்தவர் மீண்டும் அவற்றை திரும்பி வந்து பாதுகாக்க திட்டமிட்ட போதும் முடியவில்லை. அவரது வாழ்வின் மிக பெறுமதியான பொக்கிசம் நூல்கள் மட்டுமே. நம்பிக்கையுடன் அவரிடம் வரலாம். நாம் தேடும் நூல்கள் அவரிடம் இருக்கும்.


இவரது அறிமுகம் 1987 இல் எனக்கு கிடைத்தது. இவரை அறிமுகப்படுத்தியவர் எனது ஆசிரியர் மு.திருநாவுக்கரசு. ஆனால் என்னை அறிமுகப்படுத்தும் போதே அவர் எனது விபரத்தை கேட்டுவிட்டு  எனது சகோதரனுடன் தான் சட்டக்கல்லூரியில் கற்கும் போது நான்கு வருடங்கள் கொழும்பில் ஒரே அறையில் வாழ்ந்ததாகவும் அதன் தொடர்ச்சியாகவே உங்களை பார்க்கிறேன் என்றும் பெருமைப்பட்டுக் கொண்டார். இறுதி நிகழ்வுவரையும் அத்தகைய உறவை பாதுகாத்த மாமனிதன்.

அவருக்கு பிடிக்காத சில விடயங்கள் உண்டு. நூல்களில் கீறுவது. நூல்களை மடித்துப் படிப்பது, நூல்களைக் கிழிப்பது, நூல்களை ஊத்தையாக்குவது, நூல்கள் மீது தலைவைத்துப்படுப்பது இவை எல்லாம் கெட்ட செயலாகவே கருதுவார். அவரிடம் நூலை வாங்கினால் மீள ஒப்படைக்கும் வரை நாம் எல்லோரும் மிக கவனமாக செயல்படுவோம். எந்த தவறும் நிகழாது நூல்களை  ஒப்படைப்போம். அவரைப் பார்த்தே நாமும் நூல்களை வாங்கப்பழகினோம். வாசிக்கத் தொடங்கினோம். ஒரு நாளேனும் வாசிப்பதை கைவிடாதவர் பொன்.பூலோகசிங்கம்.

எத்தகைய விடயத்தையும்  ஆய்வுக் கண்கொண்டே தேடுவார், உற்று நோக்குவார், பகுப்பாய்வுக்கு உட்படுத்துவார். நிறைவில் ஒரு புலமையாளன் போல் பதிலிறுப்பார். ஆதாரங்களும் உசாத்துணைகளும் துல்லியமான பதிவாக அமையும். வயதான காலத்திலும் அவரின் பழைய நினைவுகளை அப்படியே மீட்டுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறோம். அரசியல் வரலாற்றை வெள்ளம் போல் சொரிவார். ஏற்ற இறக்கங்களில் தத்துவம், சட்டம், மொழி, பண்பாடு, வெளிப்படும். அவர் சொல்லிக்கொண்டே இருப்பார். நாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். சிறப்பான ஆசிரியர். ஆங்கில மொழியில் விற்பன்னர். ஆசிரியம் மேலோங்கிய ஆய்வாளன்.

அவரது மறைவு வேகமானது. அவர் படைப்பதற்கு அதிகமுண்டு. அதிக தகவல்களை கொண்ட களஞ்சியமாக விளங்கினார். ஈழவிடுதலைப் போராட்டத்தின் சாட்சியாளன். முள்ளிவாய்க்கால் வரை பயணம் செய்த அரசியல் சட்டப்போராளி. ஆயுதப்போராட்டத்தையும் முழுமையாக அனுபவித்த சட்டவாளன். அனைத்தின் பதிவுகளையும் வெளிக்கொண்டுவர வேண்டுமென அவாக் கொண்டவர்.

அவரது வாழ்க்கையும் மறைவும் ஈழத்தமிழரின் மனங்களில் நிரந்தரமான பதிவுகளாக நிலைத்திருக்கும். அவரது ஆத்ம வல்லமையின் சாட்சிள் எப்போதும் எம்மண்ணில் ஒலித்துக் கோண்டே இருக்கும்.

கே.ரீ.கணேசலிங்கம் 
 நிமிர்வு  பங்குனி2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.