மகளிர் மேம்பாட்டில் சவால்களும் சாதனைகளும்





“மகளிர் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாகவும் மற்றும் மேம்பாடு தொடர்பான வேலைப்பாடுகள், செயற்பாடுகள் என்பனவற்றிற்கும் ஒரு முடிவே இல்லையா? மீண்டும் மீண்டும் ஒரே நிகழ்வுகளையும், செயற்திட்டங்களையும் செய்து கொண்டிருக்கின்றோமே!  பலரின் முறைப்பாடு இது. நிச்சயமாக இதுவொரு முடிவுறாப் பயணம் தான். ஆனால், அடைவுகளும் நிச்சயமாகப் பூச்சியமில்லை என திருமதி காயத்திரி குமரன் தெரிவித்துள்ளார். இவர் ஐக்கியநாடுகள் வதிவிடப் பிரதிநிதி அலுவலக கள ஒருங்கிணைவு உத்தியோகத்தராக கடமையாற்றுகிறார்.

யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டிய விழிப்புணர்வு நிகழ்வுகள் பங்குனி 08 ஆம் திகதி யாழ்.உடுவிலில் சிறப்பாக இடம்பெற்றன. "வலுவான பெண் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறாள்" எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு யூ.என்.எச்.சீ. ஆர் நிறுவனம் மற்றும் யாழ். சமூக செயற்பாட்டு மையம் ஆகியவற்றின் நிதிப் பங்களிப்பில் நடாத்தப்பட்டது.   இந்த நிகழ்வில்  கலந்து கொண்டு " மகளிர் மேம்பாடு! சவால்களும் சாதனைகளும்" எனும் தலைப்பில் கருத்துரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


 பால்நிலை சமத்துவத்தை எட்டுவதற்கும், பெண்களை வலுவூட்டுவதற்குமான எமது செயற்பாடுகள் முடிவுறாதவை. இவ்வாறாக சர்வதேச மகளிர் தினத்தில்  ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடுகிறார்.  ஒவ்வொரு செயற்பாட்டின் அடைவுகளும் வெற்றிகரமானவையே. முன்னேற்றகரமான பாதையில் மகளிர் மேம்பாடு பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இன்றைய உலகின் யதார்த்தமாகவும் இதுவே காணப்படுகின்றது. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாய் எங்கள் பெண்கள் வீட்டிலிருந்து பொதுவெளிக்கு வந்து புதுமைகள் படைப்பதற்கான சந்தர்ப்பங்களும், வாய்ப்புக்களும், அங்கீகாரங்களும் இன்றைய உலகில் மிகக் காத்திரமாகவே கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இன்றைய கல்விச் சூழலில் பெண்களின் கால்த்தடம் மிகத் திடமாகவே இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை ஆண், பெண்  பேதமின்றி  அனைத்துச் சிறுவர்களுக்குமான தரமான கல்வியும், சமமான தொழில் வாய்ப்புக்களும் கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. அதேபோன்று அனைத்துத் தொழில் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமானதாக  இருந்து  கொண்டிருக்கின்றது.


அரச, தனியார்  சேவை வழங்களில் எவ்வித பாகுபாடோ, பின்னடைவோ இன்றி மகளிர் மேம்பாட்டு நலத்திட்டங்கள்  தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பெண்கள் முன்னேற்றப் பயணத்தில் எதிர்நோக்குகின்ற தடங்கல்கள், முட்டுக்கட்டைகள் என்பன தொடர்பில் நாங்கள் சிந்திப்போமானால் அது எங்கள் ஒவ்வொருவருடைய மனங்கள் தான். இதனை  நீங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணம் எங்கள் ஒவ்வொருவருடைய மனத்திலும் உள்ள பால்நிலை சம்பந்தமான விம்பங்களே. ஆண்களும், பெண்களும் அவ்வாறானதொரு விம்பத்தை மனங்களில் வைத்திருப்பது தான் அநேகமான பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக அமைந்துள்ளது.

இது என்னால் முடியுமா? என்னால் இயலாது. நான் பலவீனமானவள். எனக்கு ஆற்றல்கள் குறைவு தானோஇ நான் ஏனையவர்களில் தங்கி வாழவேண்டும் தான் போலும் போன்ற பலவீனமான மன ஓட்டங்களை ஆண், பெண் எல்லோரும் வாழ்க்கையின் ஏதோவொரு காலகட்டத்தில் எதிர்நோக்கியவர்களாகவே இருப்போம். ஆனால், இவ்வாறான பலவீனமான மன ஓட்டங்களை கண நேரத்தில் கடந்து வருபவர்கள் வெற்றியாளர்களாகவும், அந்தப் பலவீனமான மன ஓட்டங்களுடன் தங்கியிருப்பவர்கள் தடுமாற்றத்தைச் சந்திப்பவர்களாகவும் காணப்படுகின்றார்கள். ஆனால், துரதிஷ்ட வசமாக  இந்தத்  தடுமாறுவோர் கூட்டத்தில் பெண்களின் சதவீதம் சற்று அதிகமாகவே உள்ளது.


எதிர்மறையான எண்ணச் சூழல்கள் சுற்றியுள்ளோராலும் உருவாக்கப்படுகின்றன. ஒருவரைப் பார்த்து ஐயோ..உங்களுக்கு ஏதோ வருத்தம் போலிருக்கிறது...உடல் மெலிவாகவிருக்கிறது, களைப்பாகவிருக்கிறது என நான்கைந்து பேர் தொடர்ச்சியாக கூறினால் சுகதேகியாகவுள்ள ஒருவரும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவார்.

இந்த  வருடத்துக்கான  ஐக்கியநாடுகள் சபையின் தொனிப் பொருளாக "இது தான் நேரம்" அமைந்துள்ளது. கிராமம்இ நகரம் ஆகியவற்றிலுள்ள அனைத்துச் செயற்பாட்டாளர்களும் இணைந்து பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்! தன்னலம் கருதாது பொதுநலமே நோக்காகக் கொண்டு பெண்களின் வாழ்வியலை முன்னேற்றப் பாடுபடும் அனைவருமே செயற்பாட்டாளர்கள் தான்.

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் ஐந்தாவது இலக்கு பால்நிலை சமத்துவத்தை எட்டுவதையும்இ பெண்களை வலுவூட்டுவதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட குறிக்கோளை நோக்கித் தொடர்ச்சியாக அயராது போராடி வரும் அனைத்துச் செயற்பாட்டாளர்களும் போற்றப்பட வேண்டியவர்களே. இன்றைய நாளில் கொண்டாடப்பட வேண்டியவர்களே.


தொழிலாளர் சம்பந்தமான உரிமைகள், ஊதியத்திலுள்ள பாகுபாடுகள் என்பன மிகப் பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றன. இதனை விட முடிவெடுக்கும் துறைகளில் மற்றும் அரசியல் உள்ளிட்ட துறைகளில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. யாழ்.மாவட்டத்தில் பல உயரதிகாரிகளாகப் பெண்கள் விளங்குகிறார்கள். ஆசிரியர்த் தொழிலைப் பொறுத்தவரை 80 வீதமானவர்கள் பெண்களாக விளங்கிய போதிலும் 20 வீதத்திற்கும் குறைவான பெண் அதிபர்களின் பங்களிப்பே காணப்படுகிறது. இதற்கு என்ன காரணமென நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

சட்டப் பாதுகாப்பு  மற்றும்  சட்ட உதவிகள் காணப்பட்ட போதும் ஒட்டுமொத்தமான மகளிர் மேம்பாட்டிற்குச் சட்டமும், சட்ட உதவிகளும் எங்களுக்கு எவ்வாறான உடனடிப் பங்களிப்பை வழங்குகின்றன என்பது கேள்விக்குறியான ஒன்றாகும். அதேநேரம் பெண்களின் ஆரோக்கியம்  சுகாதாரம் தொடர்பான நிலைமைகளும் முக்கியமான பிரச்சினைகளாகவே உள்ளன. இவ்வாறான பிரச்சினைகளையும், சவால்களையும் எவ்வாறு நாங்கள் இனம் கண்டு கொள்ளலாம்? இது தொடர்பான சேவை மற்றும் உதவி வழங்கல்கள் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டே வருகின்றன. சேவைகளின் தரத்தை வேண்டுமானால் நாங்கள் மேம்படுத்தலாம். அதேபோன்று  உதவிகளின் பெறுமதி மற்றும் உடனடித் தன்மை போன்றவற்றையும் நாங்கள் மேம்படுத்தலாம். ஆனால், இவைமட்டுமே மகளிர் மேம்பாடு அல்ல.

பாதிக்கப்பட்ட, நலிவுற்ற மக்களுக்கான வேலைத் திட்டங்கள் மட்டும் ஒட்டு மொத்த சமூகத்தின் மகளிர் மேம்பாட்டிற்கு  முற்றுமுழுதாகப் பங்களிக்கும் என  நாங்கள் கூறிவிடமுடியாது. எதிர்வரும் காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் நிலைமை குறைவடையும் எனவும் எங்களால் சொல்லிவிட முடியாது. சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பல்வேறுபட்ட நிலைகளின் தொடர்ச்சியாக வேலை செய்து கூட்டாகச் சமூகப் பொறுப்புணர்ச்சியை கட்டியெழுப்பினால் மாத்திரமே எதிர்காலத்தில் மொத்த சமூகத்திலும் வலுவான மகளிர் மேம்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கலாம்.  இவ்வாறாக திருமதி காயத்திரி குமரன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடுகள் செய்ய முன்வருவது அவசியம்

வன்முறைகளை மறைக்கும் வகையில் பெண்கள்  செயற்படுவதால் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறான பாதிப்புக்கள் தொடராமலிருக்க வேண்டுமாயின் பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடுகள் செய்ய முன்வருவது அவசியம். யாழ். பிராந்திய பெண் உப பொலிஸ் பரிசோதகர் திருமதி சிந்துபாமினி இந்த நிகழ்வில் வலியுறுத்தியுள்ளார். "பெண்களுக்கான  பாதுகாப்பும் சட்ட நடவடிக்கைகளும்" எனும் தலைப்பில்  கருத்துரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பெண்கள் சமூகத்தில் தனியாக வாழ முடியாத நிலைமை இன்று காணப்படுகின்றது. சமூகமும்இ குடும்பமும் ஒன்றிணைந்தால் தான் பெண்களால் சமூகத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும். எனவே, பெண்களின் மகிழ்வான வாழ்விற்கு வன்முறையற்றதொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவது அவசியம்.

அண்மைக்காலமாகப் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. வன்முறைகள் குறைவடைந்து கொண்டிருக்கின்றன என நாங்களனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். பொலிஸ் நிலையங்களிற்கு வரும் முறைப்பாடுகள் குறைவாகவிருந்தாலும் மறைக்கப்படும் முறைப்பாடுகள் அதிகமாகவேயுள்ளன. எங்கள் கண்களுக்குத் தெரியாத பல பிரச்சினைகள் கிராமங்களில் தினமும் நடந்து கொண்டிருக்கின்றன.

பெண்கள்  பெரும்பாலும் தமக்கெதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கெதிராக முறைப்பாடு செய்வதற்கு அச்சப்படுகிறார்கள். கணவர் என்ற முறையிலோ அல்லது தந்தை என்ற முறையிலோ ஏனையவர்களில் தங்கி வாழ வேண்டிய நிலைமை காணப்படுவதும் மற்றைய காரணம். இந்த இரண்டு காரணங்களாலும் பல வன்முறைகள் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் சிறுவயதில் வன்முறைகளுக்கு ஆளானவர்களாகக் காணப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தில் தந்தை தனது மகளையோ அல்லது ஒரு கணவர் தனது மனைவியையோ வன்முறைக்கு உள்ளாக்குபவராகவிருந்தால் அவர்கள் சிறுவயதில் ஏதோவொரு வகையில் வன்முறைகளுக்கு ஆளானவர்களாகவே காணப்படுவார்கள். எனவே, ஒரு பிள்ளையைச் சரியான வகையில் வளர்த்தோமாயின் எதிர்காலத்தில் சமூகத்திலிருந்து வன்முறைகளை நாங்கள் குறைக்க முடியும்.

தற்போது 14 தொடக்கம் 16 வரையான இளம் சிறுவர்கள் பலவிதமான வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், பெற்றோர்கள் அதனைக் கண்டிப்பதில்லை. நான் ஒரு கிராமத்துக்குச் சென்ற போது  நான்கு சிறுவர்கள் பீடி குடித்துக் கொண்டிருந்தார்கள். பீடி குடிப்பதற்கு முன்னர் அந்த நான்கு சிறுவர்களும் ஒரு உணவகத்தில் கொத்து றொட்டி சாப்பிட்டதாக அறிந்தேன். குறித்த சிறுவர்களின் ஒரு வீட்டிற்குச் சென்று இது தொடர்பில் நான் விசாரித்த போது அதற்கு அந்தச் சிறுவனின் தாயார் அவன் பிற்பகல் 3 மணிக்கு பள்ளிக்கூடத்தால வந்து பசியில்லையென நிற்கிறான் என்று கூறினார். பாடசாலையிலிருந்து வீட்டிற்குச் செல்வதற்குப் பத்து நிமிடங்கள் போதுமான நிலையில் நீங்கள் உங்கள் பிள்ளை ஒன்றரை மணித்தியாலமாக எங்கே சென்றான் என நீங்கள் ஏன் தெரிந்து கொள்ள முயலவில்லை எனக் கேட்டேன். பின்னரும்  அந்தச் சிறுவன் தினமும் பாடசாலை முடிவடைந்து வீடு வரும் போது பற்றையான பகுதியொன்றிலிருந்து பீடி குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டமை தெரியவந்தது. ஆகவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு நடவடிக்கைகள் தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் தவறான வழியில் சென்றுவிடக் கூடாது என்பதில் பெற்றோர்கள் கூடிய கரிசனை செலுத்துவது முக்கியம்.

பெண்களுக்கெதிரான, சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்த காரணத்தால் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 1929 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம்  பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரிப்பால் முதலாவது தடவையாக1995 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. அதன் பின்னர் மேலும் வன்முறை அதிகரித்த காரணத்தால் 1998 ஆம் ஆண்டும்இ 2006 ஆம் ஆண்டும் இந்தச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. தற்போது 2018 ஆம் ஆண்டில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தற்போதுவரை 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டமே நடைமுறையிலிருந்து வருகிறது.

தற்போது சட்டங்கள் வலுவானதாகவுள்ளது. இந்நிலையில் சட்டத்தை நாங்கள் நிறைவேற்ற வேண்டுமாயின் முறைப்பாடுகள் கிடைப்பது கட்டாயமாகும்.  பாலியல் துஸ்பிரயோகம் சட்டத்தின் 345 ஆம் பிரிவின் கீழ் வருகிறது. முன்னர் உடலில் பாலியல் ரீதியாகத் தொட்டாலேயே அது துஸ்பிரயோகமாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது அந்தச் சட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஆபாச சொல்லைப் பயன்படுத்துவதும் பாலியல் ரீதியான குற்றத்திற்குள்ளேயே உள்ளடங்கும். ஒரு பெண் தனியே நடந்து சென்று கொண்டிருக்கும் போது பல இளைஞர்கள் சேர்ந்து விசில் அடிக்கும் போது அதுவொரு பாலியல் ரீதியான பாதிப்பினை ஏற்படுத்தினால் அது கூட பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளேயே உள்ளடங்கும்.

பஸ்ஸில் பயணிக்கும் போது பெரும்பாலும் பெண்கள் பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களை அதிகம் எதிர்கொள்கிறார்கள். காலில் ஏறி உளக்குவார்கள். அடிக்கடி உடல் ரீதியாக மோதுவார்கள். ஆனால்இ இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்ய எவருமே முன்வருவதில்லை.2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையான காலகட்டத்தில் பஸ்ஸில் தனக்குப் பாலியல் ரீதியான தொல்லை மேற்கொள்ளப்பட்டதாக ஒரேயொரு முறைப்பாடே கிடைக்கப் பெற்றுள்ளது. நான் பஸ்ஸில் பயணித்தால் கூட இதேநிலைமை தான். ஆனால், நாங்கள் யாருமே துணிந்து முறைப்பாடு செய்ய முன்வருவதில்லை.

இவற்றை நாங்கள் மறைப்பதால் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்தும் வன்முறைகளில்  ஈடுபட்டு  வருகிறார்கள். இவ்வாறான பாதிப்புக்கள் தொடராமலிருக்க வேண்டுமாயின் பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடுகள் செய்ய முன்வருவது அவசியம். சட்ட ரீதியாகச் சிலர் தண்டிக்கப்படும் போது தண்டனைக்கு அஞ்சி எதிர்காலத்தில் இவ்வாறான வன்முறைகளைக்  குறைக்க முடியும்.

சிறுவர்-பெண்கள் பிரிவுகளில் பெண் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டியது கட்டாயம் எனக் கூறப்பட்டாலும் வடமாகாணத்தில் தமிழ் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமை பெரும் குறைபாடாகவுள்ளது. யாழ்.மாவட்டத்தில்  தமிழ்மொழி பேசக் கூடிய நான்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாத்திரமே காணப்படுகிறார்கள்.

யாழ்ப்பாணம் பண்ணையில் சிறுவர்-பெண்கள் பிரிவின் நிலையம்  அமைந்திருந்தாலும் யாழ். குடாநாட்டிலுள்ள அனைத்துப் பொலிஸ் பிரிவுகளிலும் சிறுவர், பெண்கள் பிரிவு காணப்படுகிறது. இந்தப் பிரிவுகளில் வன்முறைகளுக்கு எதிராகவோ அல்லது குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாகவோ முறைப்பாடு செய்யலாம். ஆனால்இ காங்கேசன்துறையிலிருந்து கூட முறைப்பாடு செய்வதற்கு யாழ்ப்பாணம் வருகை தருகின்றார்கள்.

1994 ஆம் ஆண்டு இலங்கைப் பொலிஸில் சிறுவர்-பெண்கள் பிரிவு தனிப்பிரிவாக உருவாக்குவதற்குத் தீர்மானமெடுக்கப்பட்டது. இதன் பின்னர் 1998 ஆம் ஆண்டு சிறுவர்- பெண்கள் பிரிவு  இலங்கையிலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் தனியான அலகாக உருவாக்கப்பட்டது. தற்போது  இலங்கையின் 42 பிராந்தியங்களில் இந்தப் பிரிவு இயங்கி வருகிறது. கொழும்பு கிராண்ட் பாஸில் சிறுவர்- பெண்கள் பிரிவின் தலைமையகம் அமைந்துள்ளது.

அதுமாத்திரமன்றி 24 மணித்தியாலமும் கொழும்பிலுள்ள சிறுவர்-பெண்கள் பிரிவின் தலைமையகத்தில் உங்கள் முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும். உங்கள் முறைப்பாடுகளை 011 2421117 எனும் தொலைபேசி  இலக்கத்துடன்  தொடர்பு கொள்வதன் மூலம் தெரிவிக்க முடியும். அங்கு தமிழ் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இவ்வாறாக உப பொலிஸ் பரிசோதகர் திருமதி சிந்துபாமினி தெரிவித்தார்.

-செல்வநாயகம் ரவிசாந்-
நிமிர்வு  பங்குனி2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.