இருப்பை உறுதி செய்கின்ற வரலாற்று ஆவணம்



தமிழாய்வு மையம் இலங்கை – பிரித்தானியா ஆதரவுடன் திரு.மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய பூகோளவாதம் புதியதேசியவாதம் நூல் வெளியீடு 24.02.2018 சனிக்கிழமை  மாலை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடந்தது.  அதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பின்வருவனவற்றைத் தெரிவித்தார்.

இப் பிரபஞ்சம் உருவாகிய காலத்திலிருந்து இன்று வரை உலகளாவிய ரீதியில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள், கலாசார தன்னிருப்புப் போராட்டங்கள், பூகோள அரசியல் மாற்றங்கள், உலகப் பொருளாதாரத்தின் மாறுபடுநிலைஇ காலனித்துவ ஆதிக்கம் அதன் மூலமான உலகமயமாக்கல் மற்றும் தற்கால அரசியல் எனப் பல விடயங்களையும் ஆராய்ந்து இந்நூலில் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன.இவ்வாறான நூல்கள் மென்மேலும் வெளிவர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

காலத்திற்குக் காலம் இலங்கையில் வரலாற்று நூல்கள் மாற்றி மாற்றி எழுதப்படுகின்றன. இதிகாச வரலாறுகளும் பழங்குடியினரின் இருப்புக்கள் மற்றும் மத வழிபாடுகள் பற்றிய பல தவறான விடயங்களை பல வரலாற்று நூல்கள் தாங்கி வருவதை அவதானிக்கலாம். இலங்கையின் பூர்வீகக் குடிகளைத் தமக்குப் பின்னரான வந்தேறுகுடிகளாக காட்சிப்படுத்துகின்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இக் காலகட்டத்தில் இவ்வாறான நூல்கள் பரந்துபட்ட ஆய்வுகளுடன் உசாத்துணை நூல்களின் ஆதாரங்களுடனும் பூர்வீக கல்வெட்டு அடையாளங்களுடனும் வெளிவருவது காலம் கடந்தும் எமது இருப்பை உறுதி செய்கின்ற ஒரு வரலாற்று ஆவணமாகக் கொள்ளப்படலாம்.

ஆத்ம ஞானிகளின் கண்டம் என்று அழைக்கப்படும் பெரும் மதங்கள் தோன்றிய ஆசியா பின்பு உலகெங்கும் மதப்பரம்பலை ஏற்றுமதி செய்தது. அதே போன்று இந்தியாவில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பௌத்தம் கி.மு 3 ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து கிழக்குஇ தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளுக்குப் பரவியதாகக்கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக பௌத்த மதம் பரவிய காலத்தில் இலங்கையின் வடபகுதியிலும் பௌத்த மத தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு வாழ்ந்த தமிழ் பௌத்தர்களின் சில அடையாளங்களையும் கல்வெட்டுக்களையும் இன்று அடையாளம் கண்டு அதற்கு தவறான ஒரு வியாக்கியானத்தின் மூலம் சிங்கள மக்கள் இப் பகுதிகளில் முன்பு வாழ்ந்துள்ளார்கள் என கூறப்படுகின்றது. இது முற்றிலுந் தவறானது. இவ்வாறான தவறான கருத்துக்களைப் பரப்ப விடுவது இன அழிப்புக்கு ஒப்பானது.

பூகோளவாதம் என்பது வெறுமனே புவிப்பரப்புப் பற்றிய விடயம் மட்டுமல்ல. மாறாகப் புவியின் இருப்போடு தொடர்புபட்ட சூரியகுடும்ப அங்கங்களுடனான தொடர்பும் மற்றும் நட்சத்திரங்கள் பிரபஞ்சம் பற்றிய சிந்தனை அறிவுகளுடன் கூடியதே பூகோளவாதம் என்பதை படைப்பாளர் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறியிருப்பது இவரின் தனிச் சிறப்பாகும். அவ்வாறான முழுமையான சிந்தனையுடன் அணுவையும் அகிலத்தையுஞ் சேர்த்துப் பார்க்கின்ற ஒரு கண்ணோட்டத்தை இந் நூலில் காண்கின்றோம்.

மேலும் இன்றைய நூலில் புவிப்பரப்பில் காணப்படுகின்ற இயற்கை சார்ந்த அம்சங்களையும் மூலவளங்கள்இ தாவரங்கள்இ விலங்குயிரினங்களையும் பேணிப்பாதுகாப்பது இன்னோர் அம்சமாக எடுத்துக்காட்டப்பட்டதுடன் இயற்கைக்கும் ஏனைய ஜீவராசிகளுக்கும் மனிதனுக்குமிடையே ஒரு சமநிலையை பேணுவதன் அவசியம் பற்றியும் சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பூமி பிரபஞ்சம் பூகோளவாதம் என்ற தலைப்புக்களின் கீழ் ஆராய்ந்த ஆசிரியர் இலங்கைத் தமிழர்களின் நிலை பற்றியும் மிகத் தெளிவாக ஆராய்ந்து குறிப்புக்களை வெளியிட்டுள்ளார். சமஷ்டி என்ற வடமொழிச் சொற் பிரயோகத்தால் விளைந்த வரலாற்று நகர்வுகளும் அதனையொட்டி தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களையும் அவர் எடுத்துக் கூறியுள்ளார்.

தம்மதீபக் கோட்பாட்டின் படி இலங்கைத்தீவு பௌத்த தர்மத்திற்கென புத்த பகவானால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது ஆசி வழங்கப்பட்ட பூமி என்ற கருத்துருவம் மேலோங்க பௌத்த மதம் – சிங்கள மொழி – அரசு என்ற மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து சிங்கள மேலாதிக்கத்தை உருவாக்கியமை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டிய சிங்களவர்கள் கரையோரச் சிங்களவர்களை விட உயர்ந்தவர்கள் எனவும் கரையோரச் சிங்களவர்கள் இரண்டாம் பட்சமானவர்கள் என்ற நிலைப்பாட்டில் கண்டியர்கள் இருந்த காலத்திலேயே  S.W.R.D பண்டாரநாயக்காவினால் சமஷ்டிக் கோரிக்கை முதன் முதலில் 1926ல் மொழியப்பட்டது. சிங்களத் தலைவர்களிடமிருந்து இவ்வாறு முன்மொழியப்பட்ட போது அவை பற்றி அக் காலத் தமிழ்த் தலைவர்கள் கண்டு கொள்ளாதது வருத்தத்திற்குரியது. அக் காலத்திலேயே தமிழ் மக்களின் இருப்புக்கான நிரந்தரத்தீர்வு ஒன்று கிட்டுவதற்கு வாய்ப்பான காலம் கனிந்த போதும் அதனைக் கருத்திற் கொள்ளாது பிரித்தானிய சாம்ராஜ்யத்திலும் மற்றும் கடல் கடந்த நாடுகளிலும் கல்வி சார் தொழில் வாய்ப்புக்களைத் தமிழ் மக்கள் பெறுவதற்கான சிந்தனைகளுக்கே தமிழ்த் தலைவர்கள் முக்கியத்துவம் கொடுத்தனர்.

அதே போன்று தமிழ் மக்களின் எழுச்சி பெற்ற கல்வி கற்ற நடுத்தர வர்க்கம் இந்த மண்ணிலிருந்து வெளியேற வளமான மூளைகளைத் தமிழ் மண் இழக்க நேர்ந்தது. இதனால் தமிழ் மூளைகள் தமிழ்த் தேசியம் சார்ந்த சமூக சிந்தனையைக் கைக்கொள்ளாது உத்தியோகம் சார்ந்த திரவியம் தேடும் வழியை நோக்கி திசை திரும்பியதன் விளைவே இன்று எமது தேசியச் சிந்தனைகளில் காணப்படக்கூடிய பின்னடைவுகளாக இருக்கின்றன எனக் கூறப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை உண்டு என்ற ஒரு தீர்மானத்தை 1944 ஆம் ஆண்டில் முதன் முறையாக டாக்டர் ளு.யு.விக்கிரமசிங்க நிறைவேற்றிய போதும் இந்தியாவுடன் இணைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை தேசிய காங்கிரஸ் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டதன் வாயிலாக அது கைகூடாமல் போனது. ஸ்ரீ வல்லபாய் பட்டேல் அவர்கள் இந்தியாவுடன் ஒன்று சேர்க்கப்படவேண்டிய நாடாக இலங்கையை அப்போது அடையாளங்காட்டி இருந்தார். இந்தியாவுக்கு சாதகமாகப் பேசிவந்த சிங்களத் தலைவர்கள் சுதந்திரம் கிடைத்ததும் மலையக மக்கள் பத்து இலட்சம் பேரின் குடியுரிமைகளைப் பறித்தனர். இந்தியாவைப் புறக்கணித்து பிரித்தானியாவுடன் கூடிய பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.

இதன் விளைவாகவே இந்தியாவிற்கு எதிரான இராணுவத் தளங்களை பிரித்தானியர் இலங்கையில் அமைக்க முடிந்ததுடன் தமிழருக்கெதிரான அரசியலமைப்புச் சட்டத்தினை சிங்களத் தலைவர்கள் பெற்றுக் கொள்வதற்கும் வழி வகுத்தது. அப்போது கூடத் தமிழ் தலைவர்கள் புவி சார் கண்ணோட்டத்தை அல்லது சிங்கள தலைவர்களுக்கும் மற்றும் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கும் இடையேயான அரசியல் உள்நோக்கங்களைச் சந்தேகக்கண் கொண்டு நோக்காமை அவர்களின் கற்பனை நிறைந்த அரசியல் சிந்தனைகளையும் சிங்களத் தலைவர்களின் மதிநுட்பம் மிக்க அரசியல் நகர்வுகளையும் எடுத்துக் காட்டுவதற்கான சிறந்த உதாரணங்களாக இந் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகச் சிறந்த அறிவாளியாகிய பேராசிரியர் சி.சுந்தரலிங்கத்திடம் ‘நீயே சிறந்த மதியூகி’ என்றதும் அவர் தமிழர் தவிர்ந்த சிங்களவர் மட்டும் அமைச்சரவையை நியமிக்கும் வழிமுறைகளை டி.எஸ்சேனாநாயக்காவிற்கு எடுத்துக் கூறியிருந்தமை இத் தருணத்தில் நினைவிற்கு வருகின்றது.

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட நிலையில் திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகம் விலகி சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து 1949ம் ஆண்டில் சமஸ்டிக் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கிய போதும் கண்டிச் சிங்களவர்களும் கரையோரச் சிங்களவர்களும் கைகோர்த்து தமிழ் மக்களை ஒடுக்கத்தொடங்கிய பின்புதான் தமிழ்த் தலைவர்களுக்கு சமஸ்டி முறை பற்றிய உண்மையான ஞானோதயம் தோன்றத் தொடங்கியது என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் ஆசிரியர்.

வெள்ளைக்காரர்கள் பிரித்து ஆள தமிழர்கள் பயன்பட்டார்கள் என்றும் தமிழர்களுக்கு அளவுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டன என்றும் கூறி எம்மீது அநீதிகள் கட்டவிழ்க்கப்பட்டன. இவ்வாறு காலத்துக்கு காலம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் 1956ல் சிங்கள மொழி ஆட்சி மொழியாக ஆக்கப்பட்டமைஇ அதனைத் தொடர்ந்து தனி ஈழம் பற்றிய சிந்தனை உருவாகிய விதம்இஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள், இனவாரித் தரப்படுத்தல் என்ற பல விடயங்களையும் ஆராயத் தவறாத ஆசிரியர் 1983 கறுப்பு ஜுலை, இனித் தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற தந்தை செல்வநாயகத்தின் கூற்று, முள்ளிவாய்க்கால் தந்த பெரு வலிதமிழ் இனத்துக்கு ஏற்பட்டிருக்கும் மன வலிஆகிய அனைத்தையும் தொட்டுச் சென்று இறுதியாக இராஜபக்சக்களின் வழியில் அமைதியாகச் செல்லும் சிறிசேன என்ற தலைப்புடன் முடிவுக்குக் கொண்டுவந்திருக்கின்றார் ஆசிரியர். இவ்வாறான நூல்கள் இன்றைய காலத்தின் கட்டாயம்

நிமிர்வு  பங்குனி2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.