ஆசிரியர் பார்வை
நினைவேந்தல் கட்டமைப்பே உடன் தேவை

பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 9 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன.  இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதானமாக கொண்டு நினைவேந்தல் கட்டமைப்பு ஒன்றை உடனடியாக உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆறப்போட்டு விட்டு அடுத்த வருடம் பார்க்கலாம் என விட்டு விடாமல் உடனடியாக அந்தக் கட்டமைப்பை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்திருந்த கருத்துக்கள் முக்கியமானவை,

“தமிழர் தாயகம், தமிழ் தேசியம், அவை பற்றிய அரசியல் உணர்வு, அதற்கான செயற்பாடுகள், விடுதலைச் சிந்தனை எல்லாமே துடைத்தழிக்கப்படல் வேண்டும் எனும் இன மேலாண்மை வாதகருத்தியலோடு ஆயிரக்கணக்கானோரின் உடல், உயிர், உடைமை, தமிழர் நிலவளம் அழிக்கப்பட்டதோடு, உடல் உறுப்புக்களை இழந்தவர்கள், விதவைகளாக்கப்பட்டவர்கள் என்று வாழும் நிலைக்கு ஆயிரக்கணக்கானோர் தள்ளப்பட்டனர். ஒரு தொகுதி மக்கள் உளரீதியிலும் ஊனமுற்றவர்களாக்கப்பட்டார்கள், அகதிகளாக்கப்பட்டார்கள், அநாதைகளாக்கப்பட்டார்கள். இராணுவத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சூறையாடப்பட்டது. காணாமலாக்கப்பட்டோர், அரசியல்கைதிகள் என ஒட்டுமொத்த தமிழ் சமூகமே அழிவினை சந்தித்தது.   இந்த வேதனை துன்பியலுக்குள் தொடர்ச்சியாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றமை அரசியலில் இருந்து மக்களை தூரமாக்கும் அரசியல் செயல்பாடு என்பதோடு தொடரும் இன அழிப்பு என்றுகூட கூறலாம்.

பாதிக்கப்பட்ட மக்களை தமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அலையவிடுவதும், தொடர் வறுமையில் வைத்திருப்பதும், இனவிடுதலை என அலையலையாக திரண்டெழுந்த மக்களை தோல்வியின் மனநிலைக்குள் தள்ளி எழவிடாமல் நீண்ட காலத்திற்கு வைத்திருப்பதும், சொந்த வாழ்க்கையை நொந்து மக்களை விரக்தி நிலையில் நீண்டகாலத்திற்கு வைத்திருப்பதும் இன அழிப்பின் தொடர்ச்சி எனலாம்.

இந்நிலையில், தமிழர் தாயக விடுதலை எனப் போராடிய தமிழ் சமூகத்தில் பலர் நிலமீட்புப் போராட்டத்தில், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் நீதிக்கான போராட்டத்தில், அரசியல் கைதிகளின் விடுதலைச் செயற்பாடுகளில் பார்வையாளர்களாக உள்ளனர். இன்னும் பலர் காட்சிக்காக முகம் காட்டுகின்றனர். இவற்றிற்கு மத்தியில் தமிழர் அரசியலில் இருந்து தூர விலகிய அரசியல்வாதிகள் மக்களை பிழையாக வழிநடத்தவும் ஆரம்பித்துவிட்டனர். ஆட்சியாளர்கள் இன அழிப்பின் அரசியல் நோக்கம் நிறைவேறுவதை நேரடியாகவே காணத் தொடங்கி விட்டனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் ஈகைச் சுடர் ஏற்றல் என்பது அழிந்தாலும் அழியமாட்டோம், வீழ்த்தினாலும் விழமாட்டோம், மாற்றுவடிவத்தில் மாற்று சக்தியாக எழுச்சியுறுவோம் என்பதன் அடையாளமாகும்.

எமது விடுதலைக்கு இன்னும் நீண்டகாலம் இருப்பதாகவே இன்றைய அரசியல் சூழ்நிலைகள் வெளிப்படுத்துகின்றன. அடுத்த கட்டம் இன்னும் இறுக்கமாகவே அமையப்போகிறது.
கட்சி அரசியலுக்கு அப்பால் மக்கள் சக்தியின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது."

நினைவேந்தல் கட்டமைப்பை சரியான முறையில் நிறுவூவதன் மூலமாகவே பல்வேறு பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.

-செ.கிரிசாந்-
நிமிர்வு  வைகாசி 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.