நல்லாட்சியின் முகத்திரை கிழிந்தது
நல்லாட்சி நாடகம் முடிவுக்கு வந்து விட்டது. ஆபத்தான தருணங்களில் தென்னிலங்கை ஒற்றுமையாகி விடுகிறது. அல்லது சண்டை போல நடிக்கிறது. இனப்படுகொலை விசாரணை நடவடிக்கைகளில் இருந்து நல்லாட்சி வேடமிட்டு மஹிந்தவை காப்பாற்றி விட்டு மீண்டும் அவரை பிரதமராக கொண்டு வரும் படலம் அரங்கேறுகிறது.
2009 ஆம் ஆண்டு இனவழிப்பு யுத்தத்தை நடத்த மஹிந்த அரசுக்கு அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய முத்தரப்புக்களின் ஆதரவும் கிடைத்தது. அவர்கள் தந்த தைரியத்தில் அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு கொடூர இனவழிப்பை அரசு நடத்தியிருந்தது. அதனையடுத்து மஹிந்தவுக்கும் சிங்கள அரசுக்கும் சர்வதேச முற்போக்கு சக்திகளால் ஏற்பட்ட அழுத்தங்களை சமாளிக்க இந்த மூன்று முக்கிய பங்காளர்களுக்கும் ஓர் ஆட்சி மாற்றம் தேவைப்பட்டது. மஹிந்தா ஆட்சியில் தொடர்ந்தால் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து அழுத்தங்கள் பலமாக இருக்கும். சர்வதேச சமூகம் அதற்கு முகம் கொடுக்க நேரிடும். அதனூடாக மஹிந்த சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் அவரது யுத்தத்துக்கு உதவியளித்த மூன்று பங்காளர்களும் அதற்கு பதில் தர வேண்டிய நிர்ப்பந்தம் வரும். இதிலிருந்து தப்பிக்கும் ஒரு வழியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனுசரணையுடன் ஓர் ஆட்சி மாற்றம் நடத்தப்பட்டது.
அதிகாரப் பகிர்வுடன் கூடிய புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு போலி வாக்குறுதி வழங்கப்பட்டது. சர்வதேச அரங்கில் இழுத்தடிப்பு நாடகம் நன்றாகவே நடந்தது. இலங்கைக்கு வந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் அனைவரும் “இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அவை மிகவும் மெதுவாகவே நடப்பது கவலையளிக்கிறது” என்று பேட்டியளித்து விட்டு சென்று விடுவர். இதன் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றும் பணி நன்றாகவே நடந்தது.
ஒவ்வொரு முறையும் அரசின் மீது அழுத்தங்கள் வந்த போது அவற்றை சமாளிக்கவும் அரசுக்கு கால அவகாசத்தைப் பெற்றுத்தரவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் பங்காற்றியது. அமெரிக்கா எமக்கு வாக்குறுதி அளித்துள்ளது. அது அதனைக் காப்பாற்றும் என்று தமிழ் மக்களை நம்பவைக்கும் பணியை அது நன்றாகவே செய்தது. பிரச்சினையென்று வரும் போது சிங்கள தலைவர்கள் ஒன்றாகி விடுகிறார்கள். தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வழங்குவதில்லை என்பதில் சிங்கள அரசாங்கங்கள் எப்போதும் தெளிவாகவே உள்ளன. இனப்படுகொலையை அரங்கேற்றிய இராணுவத்தையும் விசாரிக்க அனுமதிக்க முடியாது என்று பகிரங்கமாக அறிவித்தவர் தான் நல்லாட்சி அரசின் நாயகன் மைத்திரிபால. அப்படிப்பட்ட ஒருவர் தமிழ் மக்களுக்கு நியாயமான அதிகாரப்பகிர்வைத் தருவார் என எதிர்பார்த்தது கூட்டமைப்பின் முட்டாள்த்தனம்.
அமெரிக்க இந்தியக் கூட்டுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டியின் வெளிப்பாடே தெற்கில் இன்று நடக்கும் அரசியல் குழப்பம் என பல அரசியல் ஆய்வாளர்களும் கருதுகிறார்கள். ஆனால் இலங்கையின் வளங்களைப் பங்கு போடுவதில் இந்த மூன்று நாடுகளுமே ஒரு புரிந்துணர்வுடன் செயற்படுகின்றன என்பதே உண்மை. இதனையே பேராசிரியர் கணேசலிங்கம் ஓர் உறையில் மூன்று வாள்கள் என்று குறிப்பிடுகிறார். தமது முகங்களைக் காத்துக்கொள்ள ரணில் தேவைப்பட்டார். அமெரிக்காவில் நடந்த ஆட்சிமாற்றத்தின் பின்னர் இன்று ஐ.நா. பலமிழந்து போயிருக்கிறது. முற்போக்கு சக்திகளின் கவனம் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. இனி இந்த மூன்று நாடுகளுக்கும் ரணில் தேவையில்லை. இலங்கையை சுரண்ட சிங்கள இனவாதம் நல்ல வாய்ப்பைத் தரும். ஆகவே மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு நீதி வழங்கப்படாத நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளமை இலங்கையின் மனித உரிமை நிலவரத்தின் எதிர்காலம் குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் கரிசனைகளை உண்டு பண்ணியுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை நாம் சாதாரணமாக கடந்து போக முடியாது.
நிமிர்வு 2018 ஒக்டோபர் இதழ்
Post a Comment