சூழல் நேய அக்கறையுடன் அணிகலன்களை உருவாக்கும் யசோதா பாலச்சந்திரன்



இயற்கையான சூழலில் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது வீடு. முன்னுள்ள சிறிய கொட்டகையில் இருந்து தான் தன் கற்பனைத்திறனுக்கு ஏற்றவாறு அணிகலன்கள் அலங்காரப் பொருள்களை உருவாக்கி வருகிறார்  இணுவிலில் வசிக்கும் யசோதா பாலச்சந்திரன். இவர் பாலச்சந்திரன் - மகேஸ்வரி தம்பதிகளின் கடைசி மகள். செய்த கைவினைப் பொருள்களில் அழகும், நேர்த்தியும் தெரிகிறது. சூழலில் கிடைக்கும் இயற்கையான பொருள்களைக் கொண்டு பல்வேறு கைவினைப் பொருள்களையும் உருவாக்கியுள்ளார். பெரும்பாலும் தனக்குத் தெரியாத கைவினைப் பொருள்களின் வடிவமைப்புக்களை இணையத்தை பார்த்து கற்றுக் கொண்டு, பின் அவற்றைத் திறம்பட வடிவமைக்கிறார்.


Art and design பட்டப்படிப்பை யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் 2015 ஆம் ஆண்டில் முடித்துள்ளார்.  படிப்பை முடித்துவிட்டு அரசாங்கத்தில் அல்லது வேறு நிறுவனங்களில் மட்டும் வேலையைத் தேடிக் கொண்டிருப்பதை விடுத்து தன் சொந்தக் காலில் நிற்கும் சுயதொழில் முயற்சியை தன்னார்வத்துடன் செய்து வருகிறார். அத்துடன் 3 வருடங்களாக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் கைவினைத் துறையில் Visiting Instructor ஆக மாணவர்களுக்குப் கற்பித்து வருகின்றார்.


யசோதாவிடன் பேசியதில் இருந்து,

முதலில் குழந்தைகளுக்கு தேவையான சிறிய அணிகலன்கள், கைப்பணிப் பொருட்களை உருவாக்கினேன். பின்னர் பெண்கள் கழுத்தில் போடும் முத்து மாலைகளில் இருந்து பல்வேறு வகையான மாலைகளையும் செய்து சமூக வலைத்தளத்தில் எனது பக்கத்தில் பதிவேற்றுவேன். அவற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.


பின்னர் எங்கள் சூழலில் கிடைக்கும் இயற்கையான பொருள்களை கொண்டும் பெண்களுக்கு தேவையான அணிகலன்களை நிறைய உருவாக்கியிருக்கிறேன். நெல் மணியில் செய்த கழுத்தணி எல்லோரிடமும் வரவேற்பை பெற்றது. இங்கு, நான் தான் முதன் முதலில் இப்படியான முயற்சியை செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். நெல்மணியில் ‘ஆரம் செட்’ செய்ய நான்கு நாட்கள் தேவையாக உள்ளது. இந்த தொழிலுக்கு உச்சப்பட்ச பொறுமை தேவையாக உள்ளது.   ஆனால், பேப்பர்களில் செய்யும் அணிகலன்கள், அலங்காரப் பொருட்களுக்கும், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் அலங்காரப் பொருட்களுக்கும் எம் ஊர்களில் பெரிதாக சந்தைவாய்ப்பு இல்லை. ஆனால், நான் பங்கேற்ற கண்காட்சிகளில் சிங்களவர்கள், வெளிநாட்டவர்கள் எல்லோரும் குறித்த பொருள்களை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். 


பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்து அட்டைகளையும் தயாரித்து வருகிறேன். இம்முறை காதலர் தினத்தத்துக்கு காதலர் தின அட்டை செய்திருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதையும் தவிர ஓவியங்களையும் உருவாக்கி வருகிறேன்.


 பெண்களின் விருப்பங்கள், தேவைகள் மாறும் போது நாமும் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரி தான் செய்வேன் என சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. அதனால் புதிய புதிய பிந்திய வடிவங்களை கற்றுக் கொண்டு அணிகலன்களை உருவாக்கி வருகின்றேன். இவைகளுக்கு புலம்பெயர் தேசத்து தமிழ் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருக்கிறது. புலம்பெயர் நாடுகளுக்கும் அனுப்பி வருகிறேன். வெளிநாடுகளில் இருப்பவர்கள் இங்குள்ள தமது உறவினர்களிடம் சொல்லியும் இப்படியான வடிவமைப்புக்களில் செய்து தரச் சொல்லி கேட்டு வாங்குகின்றார்கள்.


எனக்கு தெரிந்த கைவினைப் பொருள்களை செய்யும் முறையை ஆர்வமுள்ளவர்களுக்கு தொலைக்காட்சிகளிலும் நேரிலும் சொல்லிக் கொடுத்து வருகின்றேன்.  எதிர்காலத்தில் சொந்தமாக அணிகலன்கள், கைவினைப் பொருள்கள் காட்சியறை திறக்கும் எண்ணமும் உள்ளது. எனது வாழ்வாதாரத்தையும் முழுமையாக இதனை நம்பி கொண்டு போகும் நிலைக்கு வரவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பாகும். கைவினைப் பொருள்கள் தயாரிப்பில் எதிர்காலத்தில் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே என் விருப்பமாகும். அதற்கு வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு என்றும் கிடைக்கும் என நம்புகின்றேன் என்றார்.


பெண்களுக்கு முன்மாதிரியாக திகழும் இவரின் தொழில்துறை மேலும் மேன்மையடைய நிமிர்வு வாழ்த்துகின்றது.


தொடர்புக்கு - 0766575605

நிமிர்வு பங்குனி 2019 இதழ் 

1 comment:

  1. இது போன்ற முயற்சியாளர்களை தேடிப்பிடித்து ஊக்கிவியுங்கள். முயற்சி வெற்றியடைய் வாழ்த்துக்கள்

    ReplyDelete

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.