மிரட்டும் கொரோனா
கொரோனா என்றால் இஸ்பானிய இத்தாலிய மொழிகளில் கிரீடம் என்று அர்த்தப்படும். கிரீடம் போன்ற வடிவத்தில் இருப்பதால் கொரோனா வைரசுக்கு இப்பெயர் கிடைத்தது. இக்கிருமி 1960 களிலேயே அடையாளம் காணப்பட்டு விட்டது.
ஏழுவகையான கொரோனா வைரஸ் கிருமிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் நான்கு வகையானவை எமக்கு ஏற்படும் சாதாரண தடிமன் காய்ச்சல் என்பவற்றுக்குக் காரணமானவை. இவை மனிதரிலிருந்து மனிதருக்கு மட்டுமே தொற்றுபவை. இவற்றை விட இபோலா (Ebola), சார்ஸ் (SARS) மற்றும் மேர்ஸ் (MERS) ஆகிய நோய்களை உருவாக்கும் கொரோனா வைரஸ் கிருமிகள் விலங்குகளிலிருந்து மனிதருக்குத் தொற்றுவன. இன்று எம்மையெல்லாம் வீடுகளுக்குள் முடங்க வைத்திருக்கும் வைரஸ் ஒரு புதுவகையானது. அதனாலேயே அதனை புதிய கொரோனா வைரஸ் (Novel Corona Virus) என்று அழைக்கிறார்கள். அதனால் ஏற்படும் நோய்க்கு கோவிட்-19 என்று பெயர் வைத்துள்ளார்கள்.
கோவிட்-19 கொரோனா வைரசும் விலங்கிலிருந்து மனிதனுக்குத் தொற்றியுள்ளதாகவே ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இந்தக் கிருமி குதிரைக்குழம்பு வௌவாலில் (Horseshoe Bat)பெரிதும் வசிப்பதாக ஆராய்ந்து கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால் இந்த வௌவாலில் இருந்து இது மனிதனுக்கு நேரடியாகத் தொத்தி இருக்க வாய்ப்பில்லை. ஆகவே இது வௌவாலில் இருந்து பாம்பு அல்லது பாங்கோலின் (Pangolin) எனப்படும் ஒருவகை எறும்புண்ணி ஊடாகவே மனிதருக்குக் காவப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஆபிரிக்கக் காடுகளில் காணப்படும் வௌவால்கள் இபோலா வைரசின் பெரும் தேக்கிகளாக இருப்பது இங்கு குறிப்பிடக் கூடியது.
சீனாவின் வூகான் நகரத்தில் உள்ள இறைச்சிச் சந்தையில் உயிரோடும் உயிரற்றும் காட்டு மிருகங்கள் உட்பட பல மிருகங்கள் விற்பனைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். அங்கு வேலை செய்பவர்கள் அல்லது அங்கு சென்ற நுகர்வோர் ஊடாகவே இந்த விலங்கிலிருந்து மனிதருக்கான வைரசின் பாய்ச்சல் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
இன்னமும் இது தொடர்பான கடைசி முடிவு ஆராய்ச்சியாளர்களால் எட்டப்படவில்லையாயினும் பெரும்பாலான ஆராய்ச்சிகள் மேற்கூறப்பட்டவையையே சுட்டி நிற்கின்றன. இந்த நிலையில் இதுபோன்ற கிருமித் தொற்றுக்கள் வராமற் தடுப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதில் கவனம் எடுக்க வேண்டியது முக்கியம்.
நாம் எந்தவித வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதனை மற்றவர்களுக்குத் தொற்றாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். இருமும் போதும் தும்மும் போதும் ஒரு கைக்குட்டையால் வாய் மூக்கை பொத்துவது மிக மிக அவசியம். அக்கைக்குட்டையை அன்றாடம் சவர்க்காரம் போட்டு சலவை செய்வது அதனை விட அவசியம். கைக்குட்டை இல்லாத பட்சத்தில் உங்கள் மேற்கையை மடக்கி அதற்குள் இருமவோ அல்லது தும்மவோ வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் உள்ளங்கைகளை இதற்குப் பாவிக்கக் கூடாது. ஏனெனில், உள்ளங்கைகளில் இருமிய பின் உங்களையறியாமலேயே அந்தக் கைகளை வேறு காரணங்களுக்காகப் பாவிப்பது தவிர்க்க முடியாதது.
மற்றவர்களிடமிருந்து உங்களுக்கு நோய் வராமற் பாதுகாக்க வேண்டுமாயின் பொதுவான சுகாதாரப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அடிக்கடி கைகளை சவர்க்காரம் போட்டு கழுவிக் கொள்ள வேண்டும். நீங்கள் வழக்கமாகப் பாவிக்கும் பாத்திரங்கள், தளபாடங்கள், கைபேசி, வாகனம் என்பவற்றை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். பொது இடங்களில் கைப்பிடிகளை தொடுவதை இயன்றளவு தவிர்க்க வேண்டும். உங்களை கரங்கள் சுத்தமாக இல்லாத சமயங்களில் உங்கள் வாய், மூக்கு, கண்களை எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது. பண்ணை விலங்குளைத் தவிர காட்டு விலங்குகளை சந்தைகளில் விற்பதையோ அவற்றை வாங்கி உண்பதையோ தவிர்த்துக் கொள்வது நல்லது.
கோவிட்-19 வைரஸ் இன்று பல உயிரிழப்புக்களையும் பொருளாதார வீழ்ச்சியையும் கொண்டு வந்தாலும் காலப்போக்கில் இதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை மனித இனம் வளர்த்துக் கொள்ளும். விஞ்ஞானிகள் இதற்கான தடுப்பு மருந்துகளையும் கண்டுபிடிப்பார்கள். அதேவேளை நோயை அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளும் பழக்கவழக்கங்களையும் நாம் பழகிக்கொள்ள வேண்டும்.
நிமிர்வு பங்குனி - சித்திரை 2020
Post a Comment