அன்றாடம் உழைப்போரின் நிலை என்ன?
கொரோனா வைரசு இன்று உலகெங்கும் மனித சமுதாயத்தை ஆட்டிப்படைத்து வருகின்றது. அபிவிருத்தியடைந்த மேற்கு நாடுகளே இதனை எதிர்கொள்ள திண்டாடி வருகின்றன. இந்நிலையில் இலங்கை இந்தியா போன்ற வறிய நாடுகளும் மேற்குலகைப் பின்பற்றி அவர்களின் வழியிலேயே இதற்கெதிராக போராடி வருகின்றன.
இலங்கையிலும் பங்குனி 20 ஆம் திகதியிலிருந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் தளர்த்தப்பட்டிருந்தாலும் சில மாவட்டங்களில் இன்று வரை தளர்த்தப்படாத நிலை தான் காணப்படுகிறது. இலங்கையில் 25 வீதத்துக்கும் மேலான மக்கள் கிட்டத்தட்ட 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தினக் கூலித்தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், அன்றாட வருமானங்களை எதிர்பார்த்து இருப்பவர்களாகவும் உள்ளார்கள்.
இந்த சமூக முடக்கலினால் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பது அன்றாடம் உழைத்து சாப்பிடும் அந்த மக்களேயாவர். இவ்வாறான மக்களைப் பெருமளவில் கொண்டிருக்கும் நாடுகளில் ஊரடங்கு உத்தரவினால் அம்மக்கள் பட்டினிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 பரவாமல் இருப்பதற்கு சமூக இடைவெளியைப் பேண வேண்டும் என்பது பிரதான நிபந்தனைகளில் ஒன்றாக இருந்தாலும் ஊரடங்கு நடவடிக்கைகள் இம்மக்களின் நிலைமையைக் கணக்கிலெடுக்கும் வகையிலேயே முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஏழைகளுக்காக ஜனாதிபதி அறிவித்த பல திட்டங்கள் அவர்களை சென்றடைந்திருக்கிறதா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இருந்தாலும் தமிழர் பகுதிகளில் பல்வேறு உதவி திட்டங்கள், உணவுப்பொதிகளை வழங்குவதனை தன்னார்வ இளையோர்கள், நிறுவனங்கள் ஓரளவுக்கு நேரடியாகவே செய்து வருகின்றன.
இந்நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இப்பொழுது மீண்டும் பேசப்படும் விடயமாக தற்சார்பு பொருளாதாரம் வந்து விட்டது. இது வரவேற்கப் பட வேண்டியது. எங்களுக்கு தேவையான உணவை நாங்களே உற்பத்தி செய்ய பழகினால் இப்படியான நெருக்கடி காலங்களில் மீண்டு வர உதவியாக இருக்கும்.
தொடர் ஊரடங்கும், உலகெங்கும் கொரோனா பலியெடுப்புக்களும் தனிநபர் சுகாதாரமும், தற்சார்பு பொருளாதாரமும் தான் இப்படியான பேரிடர்களை எதிர்கொள்ள உதவும் என்ற சுயபுரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதனை எம்மவர் தொடர்ந்து எடுத்துச் செல்வார்கள் என நம்புவோம்.
நிமிர்வு -
பங்குனி - சித்திரை 2020
Post a Comment