இணைய வழிக்கல்வியில் பாதுகாப்பாய் இணைந்திடுவீர்! இடைவிடாது கற்றலைத் தினம் தொடர்ந்திடுவீர்!



இன்றைய நெருக்கடி நிலையில் அடுத்த மூன்று மாதங்களிற்கு பாடசாலைகளோ தனியார் கல்வி நிலையங்களோ இயங்கப் போவதில்லை என்பது நிதர்சனமாக உள்ளது. ஜூன் மாதத்திற்குப் பிறகு பாடசாலைகள் இயங்க ஆரம்பித்தாலும் முழுமையான வழமை நிலைக்குத் திரும்ப ஆண்டுகள் பல ஆகலாம். எது எப்படி இருந்தாலும் கோவிட் நெருக்கடிக்குப் பின்னரான காலப்பகுதியில் பல்வேறு துறைகளிலும் சடுதியான மாற்றங்கள் ஏற்படும் என எதிர்வு கூறப்படுகிறது. 

அதில் கல்வித்துறை முதன்மையானது. வீட்டில் இருக்கும் காலப்பகுதில் பிள்ளைகளை ஏதோ ஒரு வகையில் கற்றல் செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட வைப்பது அவசியமானது. தகவற் தொடர்பாடற் தொழில் நுட்ப வளர்ச்சி இந்த இடத்தில் பல்வேறு விதங்களில் கை கொடுக்கிறது.

சில ஆசிரியர்கள் வட்சப், வைபர் போன்ற செயலிகள் ஊடாக தமது மாணவர்களுடன் பாடக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் மாணவர்களின் ஐயங்களிற்கு விடையளிக்கவும் ஆரம்பித்துள்ளனர். சில இளம் ஆசிரியர்கள் முகநூலில் நேரடியாகத் தோன்றி கடந்த ஆண்டு வினாத்தாள்களை விளங்கப்படுத்துதல், மீட்டல் வகுப்புகள் நடாத்துதல் போன்ற செயற்பாடுகளில் ஆர்வமாக ஈடுபடுகின்றனர். 

உடனடியாக கற்றல் செயற்பாடுகளில் ஓர் இடைவெளி விழுவதைத் தடுக்க இவை உதவினாலும் எமக்கு இந்தத் தொழில் நுட்பங்கள் தொடர்பில் ஒரு நீண்டகாலப் பார்வையும் அவசியம். 

முகநூல் நேரலையை ஒரு ஆசிரியர் பயன்படுத்தினால் பெற்றோர் தமது பிள்ளைகளை முகநூலில் கணக்குகளைத் திறக்க ஊக்குவிக்க வேண்டி வரும். ஆனால் பிள்ளைகள் முகநூலை எவ்விதம் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பெற்றோர் கண்காணிப்பதோ கட்டுப்படுத்துவதோ சாத்தியமற்றது. 

இதேநிலையே யுடியூப்பிலும் ஏற்படுகிறது. எனினும் யுடியூப்கிட்ஸ் (youtube kids) ஓரளவு பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றது.  இளவயதினர் குறிப்பாகப் பதின்மவயதினர் இணையத்திற்கு வந்துள்ள பல்வேறு விடயங்களில் இலகுவாக ஈர்க்கப்படக் கூடும். 

ஆகவே இந்த வயதினரைக் கட்டற்ற வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த அனுமதிப்பது பற்றி ஆழச் சிந்திக்க வேண்டும். இதே போன்ற சிக்கல்கள் வட்சப், வைபர் குழுமங்களை உருவாக்கி மேற்கொள்ளப்படும் வகுப்புகளிலும் ஏற்படலாம். 

மாணவர்களின் தொலைபேசி எண்கள் அதனைத் துஸ்பிரயோகம் செய்யக் கூடியவர்களின் கைகளைச் சென்றடையலாம். இதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு வகுப்புக்களை ஒழுங்கமைக்கும் ஆசிரியர்கள் பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்படலாம்.

தொழில்நுட்பத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை மட்டும் பேசிக் கொண்டு பிள்ளைகளை ஒரு நீண்ட வெற்றிடத்தில் தள்ளவும் முடியாது. 

இங்கு மாற்று ஏற்பாடுகள் இருக்கின்றனவா? என்று ஆராய்ந்தால் பல்வேறு பாதுகாப்பான மாற்றுவழிகள் இருப்பதை உணரலாம். Learning Management System LMS எனப்படும் (கற்றல் மேலாண்மைத் தொகுதி) மென்பொருள் சேவைகள் மிகவும் பாதுகாப்பானவை. மாணவர்களைப் பொது இணையத்தினுள் அனுமதிக்காமல் பாடத்துடன் தொடர்புபட்ட விடயங்களை மட்டும் பயன்படுத்த இந்த மென்பொருள் சேவைகள் வழி செய்கின்றன.

இவ்வாறான LMS ஊடான கற்றற் சேவைகளை நெருக்கடி நிலையைக் கருத்திற் கொண்டு சுவடி நிறுவகம், Yarl  IT Hub ஆகிய அமைப்புகள் வழங்குகின்றன. LMS உடான வகுப்புகளில் மாணவர்கள் இணையும் போது பாட அலகுகளுடன் தொடர்புடைய காணொளிகள், கடந்த காலப்பரீட்சை வினாத்தாள்கள் என்பவற்றை மாணவர்கள் கைத்தொலைபேசியிலோ, லப்டப் கணனியில் உலவி ஊடாகவோ அணுகிப் பயன்பெற முடியும். 

மேலும் இந்த வகுப்புகளுக்குப் பொறுப்பான ஆசிரியரை குறித்த செயலியூடாகவே தொடர்பு கொண்டு வேண்டிய தகவல்களைப் பெறலாம். எந்தச் சந்தர்ப்பத்திலும் மாணவர்களின் தொலைபேசி எண், தனிப்பட்ட தகவல்கள் இன்னொருவருடைய கைக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் இந்தமுறை மிகவும் பாதுகாப்பானது. இது போன்ற LMS ஒன்றினை தனியார் கல்வி நிலையங்களும் தமக்கென உருவாக்கிக் கொள்ள முடியும். அவ்வாறு உருவாக்குவதற்கான சேவையுதவியை Speed IT Net நிறுவனம் யாழ்ப்பாணத்தில் வழங்கி வருகின்றனர்.

இணைய வழியில் பாதுகாப்பாகக் கற்கப் பல்வேறு வழிகள் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு இருக்கையில் கட்டற்ற வகையில் இணையத்தைப் பயன்படுத்த எம் இளையோரை அனுமதிப்பதால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை ஆசிரியர்களும் பெற்றோரும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பான வழியில் பயன்படுத்திப் பலன் பெறுவோம். 

மேற்படி கட்டுரையாளரை prabu@suvadi.org என்ற மின்னஞ்சல் முகவரியூடு தொடர்பு கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

வைத்தியகலாநிதி. ந. பிரபு,

இணைநிறுவுனர், சுவடிநிறுவகம்.

நிமிர்வு 

பங்குனி - சித்திரை 2020


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.