முன்னாள் போராளியின் முயற்சியில் உதயமான பாரம்பரிய விதைகள் வைப்பகம்

 


எமது பிரதேசங்களில் பல்வேறு வகையான மரக்கறி, மூலிகை இனங்களின் விதைகள் பாரம்பரியமாகவே இருந்து வருகின்றன. அவற்றை காலம்காலமாக எம் விவசாயிகள் பாதுகாத்து வந்துள்ளனர். 

இன்று பல பாரம்பரிய விதைகள் இல்லாமல் செல்லும் நிலைக்கு சென்றுள்ளன. இந்நிலை தொடர்ந்தால் எம் பாரம்பரிய விதையினங்கள் அழியும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பல்லாயிரங்கள் செலவழித்து வாங்கி பயிரிடும் நிலை உருவாகும். பாரம்பரிய விதைகளை பாதுகாத்து பரவச் செய்யும் நேசன் ஐயாவின் முயற்சியை வரவேற்போம்.

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலியில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் மாட்டுப் பண்ணை. முன்னாள் போராளி தம்பதிகளான நாகலிங்கம் கனகசபாபதி நேசன் மற்றும் அவரின் துணைவியார் வசந்தி ஆகியோர் அதனை திறம்பட நிர்வகித்து வருகின்றனர். அதன் உரிமையாளரான நேசன் 5000 க்கும் மேற்பட்டவர்களுக்கு மாடு வளர்ப்பு தொடர்பிலான பயிற்சிகளை வழங்கி எம் சமூகத்திற்கு முன்மாதிரியானவராகவும் விளங்குகின்றார். 

இயற்கை விவசாயத்திலும் பேரார்வம் கொண்ட நேசன் காலத்தின் தேவை கருதி   புதிய முயற்சியாக பெரியம்மா பாரம்பரிய விதை வைப்பகத்தையும் தொடங்கியுள்ளார். தான் ஆரம்பித்துள்ள பாரம்பரிய விதை வைப்பகம் தொடர்பில் பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து கொள்கின்றார் நேசன். 

நாங்கள் நீண்ட நெடுங்காலமாக விவசாயம் செய்து வரும் குடும்பத்தை சார்ந்தவர்கள். இயற்கை விவசாயம் செய்யவென நாங்கள் கொஞ்ச ஆர்வலர்கள் புறப்பட்டு இயற்கை விவசாயம் செய்து கொண்டிருந்த வேளை இயற்கை விவசாய முயற்சிகளில் பெருமளவுக்கு தோல்விகளையே சந்தித்தோம். அதில் ஏற்பட்ட அனுபவத்தில் பல குறைபாடுகளை கண்டறிந்தோம். 1960 களின் பின்பு எங்களை சூழ்ந்துள்ள இரசாயன உரங்கள், செயற்கை கிருமிநாசினிகள் 70 ற்குப் பிறகு 80 களில் வந்த மரபணு மாற்றப்பட்ட மலட்டுத் தன்மையாக்கப்பட்ட விதைகள் இரண்டையும் வைத்துக் கொண்டு தான் எங்கள் விவசாயம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றது. 

இன்று மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான் எல்லா இடங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் எங்கள் பாரம்பரிய விதைகள் அழிவின் விளிம்புக்கே சென்றுள்ளன. பாரம்பரிய விதைகளை பாதுகாத்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு விதைகள் காப்பகமொன்றையும் எங்கள் பண்ணையில் ஆரம்பித்துள்ளோம். 

எனது முயற்சியை கேள்விப்பட்ட பலரும் இப்போது என்னை பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் தொடர்பு கொண்டு வருகின்றார்கள். அதில் சிலர் தங்கள் ஊர்களிலும் பாரம்பரிய விதை வைப்பகத்தை உருவாக்க ஆர்வம் காட்டியுள்ளனர். அவர்களுக்கு என்னாலான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளேன்.  

உலகமே இன்று இயற்கை விவசாயத்தை மறந்து பாரம்பரிய விதைகளைத் துறந்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளோடு ஓடிக் கொண்டிருக்கின்றது. எங்களை சுற்றி எங்களை அறியாமல் ஏகப்பட்ட நோய்களை அவை உருவாக்கி இருக்கின்றன. 

இயற்கை விவசாயம் செய்ய வேண்டுமென்றால் எம்மை சுற்றியுள்ள பாரம்பரிய விதைகளை வைத்துக் கொண்டு இயற்கை உரங்கள், கரைசல்களைக் கொண்டு சிறிதாக இயற்கை விவசாயத்தை தொடங்கலாம். ஏற்கனவே நடனம்மா இயற்கை வழி உள்ளீடுகள் என்கிற பெயரில் இயற்கை வழி உள்ளீடுகள், இயற்கைவழி கிருமிநாசினி கரைசல்களையும் உற்பத்தி செய்து வருகின்றேன். இதனை வீட்டுத் தோட்டம் செய்யும்  பலருக்கு இலவசமாகவும் வழங்கி வருகிறேன். 

நாங்கள் எமது பண்ணைக்கு வாங்கிய முதல் மாட்டின் பெயர் பெரியம்மா. அந்த மாடு தான் என் பண்ணை இன்று வளர்ச்சியடைய காரணமாக அமைந்துள்ளது.  பெரியம்மாவின் முதலாவது நினைவு நாளன்று பாரம்பரிய விதை வங்கியொன்றை எமது பண்ணையில் ஆரம்பித்துள்ளோம்.  தற்போது நாற்பதுக்கும் மேலான பாரம்பரிய விதைகளை பல்வேறு இடங்களில் இருந்தும் சேகரித்து இங்கே சேமித்துள்ளேன். இந்த முயற்சிகளுக்கு எனது பண்ணை நண்பர்கள், இயற்கை விவசாய ஆர்வலர்கள் பல்வேறு ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றனர்.

இந்த விதை வங்கியின் முதல் நோக்கம் என்னவென்றால் வீட்டு தோட்டம் செய்பவர்களுக்கு அதற்கேற்ற விதைகளை வழங்கி ஊக்குவித்தல். பின் அவர்களிடமிருந்தும் விதைகளை பெற்று இன்னும் பலர் மூலமாக பாரம்பரிய விதைகளை பரப்புதல்.  அவர்களுக்கு தேவையான இயற்கை உள்ளீடுகள், கரைசல்களையும் நாங்கள் இலவசமாக வழங்குவோம்.

எமது முன்னோர்கள் ஏறக்குறைய 15 வகையான அவரை இனங்களை சாப்பிட்டு வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இந்த அவரை இனங்கள் எல்லாம் எங்கள் கிராமங்களில் காணாமல் போய் விட்டன.  வீட்டு வேலியோரத்தில் விதையை நாட்டினால் வேலி முழுவதும் பற்றி படர்ந்து காய்க்கும். அவரை உற்பத்திக்கு செலவு குறைவு. ஆரோக்கியமான உணவு. எந்தவிதமான கிருமிநாசினியும் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யவல்ல புரதச் சத்து மிகுந்த மரக்கறி.

பெரிய பாகல் இனமான திருநெல்வேலிப் பாகலுக்கு எம்மவர்கள் மத்தியில் நல்ல மதிப்பு உண்டு. சிறு மரமாக வளரும் தன்மையுடைய சடையன் கீரை முளைதிறன் அதிகமானது.

இரும்புச் சத்து, இதர ஊட்டச் சத்துக்கள் நிறைந்தது பனங்கீரை.இந்தப் பனங்கீரையில் இன்னொரு விசேடம் என்னவென்றால் சாதாரணமாக பயிர் செய்யும் தோட்டங்களில் மாரிகாலங்களில் பயிர் செய்கையின் போது தன்பாட்டிலேயே முளைக்கும். இதன் வித்து ஒரு வருடத்துக்கும் அதிகமாக உறங்கு நிலையில் இருக்கும் தன்மை வாய்ந்தது.

இந்த விதைகளை பாதுகாக்கும் முறைகளை எனது அம்மம்மாவே அறிமுகப்படுத்தியிருந்தார். ஒரு ஆண்டின் இறுதியில் கிடைக்கும் விதைகளை வேம்பு, நொச்சி குழைகளை போட்டு மண்பானையில் சேமித்து அடுப்பங்கரையில் பாதுகாத்து வந்தார்கள்.

முன்னைய காலங்களில் விவசாயம் செய்யும் மண்ணுக்கு வளம் சேர்க்க பூவரசு, வேம்பு, மஞ்சமுன்னா போன்ற பல்வேறு குழைகளை தாழ்ப்பார்கள். பலர் சணல் விதைகளை போட்டு வளர்ந்ததும் அப்படியே உழுது மண்ணுக்கு வளம் சேர்ப்பார்கள். இன்று இந்த முறைகள் எல்லாம் பெரும்பாலும் மருவி விட்டன.   எங்கள் சிறுவயதுகளில் எள்ளுப் பயிரை அதிகம் பேர் செய்வார்கள். 

இன்று கடைகளில் கூட எள்ளைக் காண்பது கடினமாகும்.  விலையோ பெருமளவிலும் உயர்ந்து விட்டது. எங்கள் மூதாதையர்கள் குரக்கன், தினை, சாமை, எள்ளு போன்ற பல்வேறு சிறுதானியங்களையும் உண்டே ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். இன்று காட்சிப் பொருளாக கூட இந்த உப உணவுப் பயிர்களை பயிரிடுவது கிடையாது. 

உதாரணமாக இன்று குரக்கனின் விலை 400 ரூபாயைக் கடந்துள்ளது. எங்கேனும் சில கிராமங்களில் மிகவும் அரிதாக இதனை பயிரிடும் நிலை உள்ளது. இன்றைய தலைமுறையினர் பலருக்கு சிறுதானியங்களை எப்படி உணவாக்கி உண்பது என்கிற விடயம் தெரியாதுள்ளது. 

எங்கள் அடுத்த சந்ததி நோய் நொடியின்றி ஆரோக்கியமான சந்ததியாக உருவாக வேண்டுமென்றால் சிறுதானியங்களையும் எங்களின் பாரம்பரிய விதைகளையும் திரும்ப மீட்டு இயற்கை வழியில் விவசாயம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும். இல்லையேல் எம் எதிர்கால சந்ததி புற்று நோய்கள் மற்றும் நீரிழிவு, குருதியமுக்கம் போன்ற தொற்றா நோய்களின் தாக்கத்தினாலும் பேரழிவை சந்திக்க நேரிடும்.

தொடர்புக்கு : 0770610698

அமுது,

நிமிர்வு மார்கழி, தை - 2021 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.