கட்சித்தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் தான் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்
பிரித்தானியாவிடம் நீதி கேட்டு ஒரு தாய் உண்ணாவிரதம் இருக்கிறார். அதுவும் அந்தக் குளிருக்குள் முழு இனத்துக்குமாக பசியோடு இருக்கிறார். அவரது தியாகத்தை மதிக்க வேண்டும். தாய்மாரின் உண்ணா நோன்பு என்பது தமிழ் மக்களுக்குப் புதியது அல்ல. இந்த தியாகங்களின் உச்சமாக அன்னை பூபதியைக் கூறலாம். அவர் ஒரு போராளியல்ல. அவர் எந்த இயக்கங்களிலும் ஈடுபட்டவரல்ல. அவர் ஒரு அரசியல் செயற்பாட்டாளராகக் கூட முதலில் அறியப்படவில்லை. மட்டக்களப்பில் அன்னையர் முன்னணியினரின் போராட்டம் இடையில் தோற்கடிக்கப்படும் நிலை வந்த போது அவர் தானாக முன்வந்து அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். இறுதியில் உயிரையும் தியாகம் செய்தார்.
சத்தியாக்கிரகம் என்பது தன்னை வருத்துவதன் மூலம் எதிர்த்தரப்பின் மனச்சாட்சியை வருத்துவது அல்லது எதிர்த்தரப்பின் குற்றவுணச்ச்சியை தூண்டுவது, சத்தியாக்கிரகத்தை யார் முன்னெடுக்க வேண்டும் என்றால் தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும். காந்தியின் சத்தியாக் கிரகத்தின் போது காந்திதான் உண்ணாவிரதம் இருந்தார். உப்புச் சத்தியாக் கிரகத்தில் காந்திதான் முன்னுக்குப் போனார். தலைவர்கள் முன்னுக்குப் போக வேண்டும். தலைவர்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளாக தலைவர்கள் போராடவில்லை. கடந்த பத்தாண்டுகளாக எந்த ஒரு மக்கள் பிரதிநிதியும் போராடிய காரணத்துக்காக சிறைக்கு போகவில்லை. தலைவர்கள் போராடியது குறைவு, தொண்டர்களும் பாதிக்கப்பட்ட மக்களும் தான் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை போராட விட்டுவிட்டு தாங்களும் போராடுகிறோம், போராடுகிறோம் என்று தலைவர்கள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள் உண்ணாவிரதம் இருக்க அல்லது அதிகம் கேள்விப்படாதவர்கள் உண்ணாவிரதம் இருக்க ஊடகங்களில், மேடைகளில் பிரபலமாக தெரியும் தலைவர்களோ அந்த உண்ணாவிரதங்களுக்கு வாழ்த்துச் செய்திகள், ஆதரவுச் செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறு. இங்கே போராட வேண்டியது தலைவர்கள் தான். அப்படி தலைவர்கள் போராட முன்வருவார்களாக இருந்தால் தமிழ் மக்களின் போராட்டம் உலகை திரும்பி பார்க்க வைக்கும்.
Post a Comment