போராடும் சிறுதிரள் மக்களும்... விடுப்பு பார்க்கும் பெருந்திரள் மக்களும்...
ஒரு வருடத்துக்கு முன்னர் தாயகசெயற்பாட்டாளர் ஒருவருக்கு, புலம்பெயர் தேசத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது."சுவிஸ் அரசாங்கம் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்ப போகிறது. ஆகவே அவர்களுக்கு சிறீலங்கா அரசால் உயிர் அச்சுறுத்தல் உண்டு என்றும், திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தி, வவுனியாவில் ஏ9 சாலை ஓரத்தில், 1000 நாட்களைக் கடந்தும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிகேட்டு போராடிக் கொண்டிருக்கும் தாய்மார்கள் தமது போராட்டப் பந்தலுக்கு முன்பாகஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த முடியுமா?" இப்படி அந்த தொலைபேசி அழைப்பில் கேட்கப்பட்டது.
அதற்கு தாயக செயற்பாட்டாளர்,"அங்கிருக்கும் இந்த ஆயிரக்கணக்கான பேரும் இவ்வளவு நாளும் யாருக்கு பணம் அனுப்பி வைத்தீர்கள்? அறுபதைக் கடந்த வயதிலும் முதுமைக் கால நோய்களோடு மழையிலும் வெயிலிலும் போராடிக் கொண்டிருக்கிற இந்த தாய்மார்களுக்கா? இல்லையே, உங்கள் மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உறவுகளுக்கு தானே அனுப்பிக் கொண்டிருந்தீர்கள். இந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களும் ஒரு சில பேருந்துகளில் புறப்பட்டுச் சென்று கொழும்பில் சுவிஸ் தூதுவராலயத்துக்கு முன்பாக ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை ஏன் நடத்தக் கூடாது? அது தானே ஒரு பெருந்திரளான மக்கள் போராட்டமாக இருக்க முடியும்? மறுநாள் கொழும்பு ஊடகங்களிலும் அது பேசப்படும் ஒரு பெரிய செய்தியாக இடம்பிடிக்குமே? நீங்கள் எதிர்பார்க்கும் அரசியல் விளைவும் கிடைத்து விடுமே?" என்று கேட்டதற்கு அவரிடம் இசைவான பதில்கள் எவையும் இருக்கவில்லை. அவர் தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டார். இதுதான் துயரம்.
தாயகத்தில் எதுநடந்தாலும், அதற்கு ஆதரவாகவோ எதிராகவோ ஒரு சிறுதிரள் மக்களே தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போருக்குப் பின்னர் கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்ற போராட்டங்களில் பார்த்த முகங்களையே இப்போதும் கூட,திரும்பத் திரும்ப போராட்ட இடங்களிலோ, அது தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களிலோ பார்க்க கிடைக்கிறது.போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையை விடவும், அதனை விடுப்பு பார்க்கும் மக்களின் தொகையே அதிகமாக இருக்கிறது. விடுப்பு பார்க்கும் பெருந்திரள் மக்கள் கூட்டம், "யாருக்கு என்ன நடந்தாலும், பரவாயில்லை. தமக்கு ஒரு பொல்லாப்பும் இல்லை. தாம் உண்டு, தம் குடும்பம் உண்டு, தம் தொழில் உண்டு, தம் பொழுதுபோக்கு உண்டு" என்றவாறே விடுப்பு பார்த்துக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
விடுப்பு பார்க்கும் இந்தமக்கள், தாங்களும் இந்த சமூகத்துக்குள் தான் ஒரு அங்கமாக இருக்கிறோம், தங்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் ஒரு பொதுப் பிரச்சினைக்கு தீர்வு கேட்டு தான் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கருத தவறி விடுகிறார்கள். அதாவது தமக்கும் சேர்த்து தான் அவர்கள் நீதி கேட்கிறார்கள், நிவாரணம் கேட்கிறார்கள், இழப்பீடு கேட்கிறார்கள் என்கிற சிந்தனை சிறிதளவும் இல்லாமல் இருக்கிறார்கள். அதற்கும் மேலாக தங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளுக்கும் கூட, "போராடிக் கொண்டிருக்கும் இந்த ஒரு பகுதி மக்களே போராடித் தரவேண்டும்" என்றும் எதிர்பார்க்கிறார்கள். இது என்ன வகையான மனோநிலை?
சமூகத்தின் பொதுப்பிரச்சினை ஒன்றுக்காக பொதுவெளியில் முகம் காட்டி போராட்டங்களை நடத்தினால், இராணுவ புலனாய்வு பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களின் தொடர்ச்சியான கண்காணிப்புக்கு உள்ளாக வேண்டி வரும். மானியங்கள் இலவசங்கள் சலுகைகள் வழங்கப்படும் போது அரசால் பழி வாங்கப்படுவோம். அரசியல்வாதிகளாலும் அரச அதிகாரிகளாலும் வஞ்சிக்கப்படுவோம். இப்படி வெறுமனே சுயநலமாக மட்டுமே சிந்தித்து வயிறு வளர்க்கும் ஒரு கொடிய மனோநிலை பெருந்திரள் மக்கள் கூட்டத்திடம் இருக்கிறது.
சமூக அநீதிக்கு எதிராக கிளர்ந்து போராடினால் "ஐயோ... வேலை பறி போய் விடும்.கடினமான தூரப் பிரதேசத்துக்கு பணி இடமாற்றம் வரும்" என்று கூளைக் கும்பிடு போடுகிற ஒரு கோழை மனோநிலை கற்றறிந்த அறிவுச் சமூகமான அரசாங்க உத்தியோகத்தர்களிடம் இருக்கிறது. அப்படியாயின் போராடிக் கொண்டிருக்கிற சிறுதிரள் மக்கள் மட்டும் என்ன வேற்றுக் கிரகவாசிகளா? இவர்களுக்கு என்று குடும்பம் இல்லையா? இவர்களுக்கு மட்டும் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் வராதா? அரசாலோ, அரச அதிகாரிகளாலோ நெருக்கடிகள் கொடுக்கப்படாதா?
இயற்கை அனர்த்தங்களின் போதும் இதுதான் நிலைமை. பண பலமோ, அரசியல் பலமோ கொண்டுள்ள யாராவது ஒரு பிரபலம் குளத்தை ஆக்கிரமித்தோ, வெள்ளநீர் வழிந்தோடும் வடிகாலை மூடியோ அடுக்குமாடி வீடுகளையோ, கடைத் தொகுதிகளையோ எழுப்பிக் கொண்டிருந்தால், அப்போதும் இந்த பெருந்திரள் மக்கள் கூட்டம் சுற்றுச்சூழல் பற்றிய எவ்வித அக்கறையும், எச்சரிக்கை உணர்வும் இன்றி, வேடிக்கை பார்த்து கடந்து போனது. கடந்து போய்க் கொண்டிருக்கிறது. குறித்த அநியாயம், அக்கிரமத்துக்கு எதிராக அறச்சீற்றம் கொண்டு பொதுவெளிக்கு வந்து போராடி அதை தடுத்துநிறுத்த மாட்டார்கள். ஆனால் பெரும் மழைக்கு பின்னர் போடும் வெள்ளம் ஒரு கிராமத்தையோ, ஒரு நகரத்தையோ முழுவதுமாகத் தான் மூழ்கடிக்கும். அந்த வெள்ளத்துக்கான காரணிகளுக்கு எதிராக போராடிய சிறுதிரள் மக்கள் யார்? போராடாத பெருந்திரள் மக்கள் யார்? என்றெல்லாம் பார்க்கத் தெரியாது. ஆகவே பிரச்சினைகளை கண்டு சுயநலமாகமட்டுமே சிந்தித்து, ஒதுங்கிக் கடந்து போவதால் பெருத்ததுன்பத்தில் உழல நேர்கிறது. வேடிக்கை பார்க்கும் பெருந்திரள் மக்கள் இயற்கைஅனர்த்தங்களிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
சமூக அநீதிக்கு எதிராக கூர்மையான விதத்தில் எதிர்ப்புகளைக் காட்டி போராடினால் தான், "உண்டு வளமான வாழ்வு" என்பதனை உணரத் தலைப்பட வேண்டும்.தமிழ் அரசியல் தலைமைகள் கூட, மக்கள் சந்திக்கும் உரிமை மறுப்பு பிரச்சினைகளில் சவாலானவற்றை கையிலெடுத்து ஒரு தலைமைத்துவத்தை கொடுக்கத் தயங்குகிறார்கள். "அரசியல் பெறுமானம் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாகவே தீர்வுகளை பெற்றுக் கொடுக்க" பின் நிற்கும் ஒரு நிலைமையே காணப்படுகின்றது. அதாவது இவர்கள் தமக்கு நோகாத, வலிக்காத பிரச்சினைகளை கையாள்வதில் மட்டும் தான் நீயா, நானா என்று போட்டிப் போட்டு முந்திக் கொண்டு செயற்பட வரிசை கட்டி நிற்கிறார்கள். தேர்தல் மையமாகவே சிந்தித்து பழக்கப்பட்டுப் போன தமிழ் அரசியல் பாரம்பரியத்துக்குள் இருந்து அரசியலுக்குள் பிரவேசிக்கும் இவர்கள், எப்படி தமிழ் வாக்குகளை கவர்ந்திழுப்பது என்பது பற்றியே அதிகம் சிந்திக்கிறார்கள்.
வாக்குவேட்டை அரசியலுக்கான உத்திகளாகவே தமிழ் மக்களின் சமகால பிரச்சினைகள் ஒவ்வொன்றையும் கையாள்கிறார்கள். இனத்துக்காக கொஞ்சம் வலி சுமக்கவும், பாரம் தூக்கவும், சிறை செல்லவும் இங்கு எவரும் தயாராக இல்லை. அர்ப்பணிப்பான, விசுவாசமான, அரசியல் தலைமைகள் என்று எங்கள் மத்தியில் எவருமே இல்லை என்பதனை 2020ம் ஆண்டு மாவீரர் நாள் நினைவேந்தல் வாரம் உணர்த்தியிருக்கிறது. மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் இவர்கள் ஒரு சிட்டி விளக்கையோ அல்லது ஒரு மெழுகுதிரியையோ அதுவும் சிறீலங்கா அரசோ, அரச படைகளோ கெடுபிடிகள், நெருக்கடிகள் எதனையும் கொடுக்காமல் இருந்தால் மாத்திரம் ஏற்றத் தயாராக இருந்தார்கள்.
அந்த நினைவேந்தல் வாரத்தில் தேசத்தை பசுமையாக்கும் மரக்கன்றுகள் நடுகை செய்யும் வேலைத்திட்டத்தையோ, எங்காவது ஒரு குக்கிராமத்தில் இயங்காமல் இருக்கும் ஒரு சனசமூக நிலையம், ஒரு வாசிகசாலை, ஒரு முன்பள்ளி, ஒரு தொழில் பயிற்சி நிலையம் இவைகளை மீள இயங்கச் செய்யும் அல்லது புதிதாக ஆரம்பிக்கும் புரட்சிகர உள்ளடக்கங்களைக் கொண்ட தூர தரிசனைப் பார்வை இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
அரசியல் தலைமைகளாலும், கட்சிகளாலும், சிவில் சமூக அமைப்புகளாலும், விடுப்பு பார்க்கும் பெருந்திரள் மக்களாலும் போராடும் மக்கள் தனித்து விடப்பட்டுள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்டு வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர் தாயகசங்கத் தாய்மார்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைக்கு 1400 நாட்களை கடந்து விட்டது. கடந்த ஆண்டு இறுதியில் வீசிய புரவிப்புயலால் போராட்டப் பந்தலுக்கு அருகில் இருந்த பெரிய மரம் ஒன்றின் கிளைகள் முறிந்துவிழுந்து போராட்டப் பந்தலும் சேதமடைந்திருக்கிறது. ஆனால் புயல் ஓய்ந்ததும் எந்தவொரு அரசியல்வாதியோ, கட்சியோ, இளைஞர் அணியோ, சிவில் சமூக அமைப்புகளோ உடனடியாக அந்த இடத்துக்குச் சென்று பந்தலை தாய்மார்களுக்காக திருத்திக் கொடுத்ததாக இதுவரை செய்திகள் வரவில்லை.
உண்மையில் தமிழ்த் தேசிய தரப்புகள்என்ன செய்திருக்க வேண்டும்? காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை என்பது போராடிக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் தனிப்பட்ட பிரச்சினை மட்டும் கிடையாது. அது ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்தினதும் வாழ்வுரிமை பிரச்சினையோடு அதாவது இனப்பிரச்சினையோடு தொடர்புபட்டுள்ளது.
"சிறீலங்காவின் ஒற்றையாட்சி அதிகாரக் கட்டமைப்பை ஏற்றுக் கொண்டு சிங்கள மக்களோடு சேர்ந்து வாழமுடியாது. தமிழ் மக்கள் ஒரு தேசமாக பிரிந்து போக விரும்புகிறோம்" என்பதை அழுத்த திருத்தமாக முரசறைந்து பிரகடனப்படுத்த தமிழ்த் தரப்புக்கு இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மட்டுமே. தமிழ் இனப்படுகொலையின் ஒருகூறாகவும் இது அமைந்திருக்கிறது.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டால், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட்டால், மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்பட்டால், நிலைமை என்னவாகும்? இந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றையுமே புத்தி பூர்வமான ஒரு அரச தலைவரால் ஒருநாளில் ஒரு அரசியல் தீர்மானம் மூலம் இலங்கைத்தீவுக்குள் சட்டென முடிவுக்கு கொண்டு வரமுடியும். அத்தோடு தமிழர் தரப்பின் போராடுவதற்கான அரசியல் காரணங்களையும் வலுவற்றதாக்கி விடலாம்.
ஆனால், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது அப்படியான ஒன்றல்ல. அது சிறீலங்கா அரசுக்கு எப்போதுமே பெருத்த தலையிடி கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சினை. கடத்தப்பட்ட, கையளிக்கப்பட்ட, ஒப்படைக்கப்பட்ட, சரணடைந்த மனித உயிர்களுக்கு என்ன நடந்தது? அதுவும் நாட்டுக்குள்ளே மற்றுமொரு தேசிய இனமாகிய தமிழ் உயிர்களுக்கு என்ன நடந்தது? இது பொறுப்புக் கூறுவதற்கும், விடை தேடுவதற்கும் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், காலைச் சுற்றிய பாம்பு போல துரத்திக் கொண்டிருக்கும் பிரச்சினை. எக்காலத்துக்கும் எரிந்து கொண்டிருக்கப் போகும் பிரச்சினை. ஆகவே இந்தப் பிரச்சினையின் உலக அரசியல் பெறுமானத்தையும் சர்வதேச சட்டங்கள், சமவாயங்களின் தாக்கத்தையும் உணர்ந்தே வைத்திருக்கும் அரசு, போராட்டங்களை எப்படி நீர்த்துப் போகச் செய்யலாம் என்பது பற்றியே அதிகம் யோசிக்கும். ஆனால், தமிழ் அரசியல் தலைமைகள் இத்தகைய ஒருதுருப்புச் சீட்டை சரியாக பற்றிப் பிடித்துக் கொண்டு போராடினார்களா? முதுமையால் இறந்து கொண்டிருக்கும் சாட்சிகளை ஆவணப்படுத்தும் ஒருதேசமாக சிந்திக்கும் செயல்முனைப்புகளில் ஈடுபட்டார்களா? குறைந்தபட்சம் தன்முனைப்போடு போராடிக் கொண்டிருக்கும் அந்த மக்கள் கூடவாவது நின்றார்களா? இல்லை.
மரக்கிளை விழுந்து சேதமடைந்திருக்கும் அந்த போராட்டப் பந்தலைசீர்செய்து கொடுத்து,"நாங்கள் உங்கள் கூடவே இருக்கிறோம். தைரியமாகப் போராடுங்கள். நீங்கள் தனித்து விடப்படவில்லை." என்கிற ஆத்மார்த்தமான உணர்வை அந்தத் தாய்மார்களுக்கு கொடுத்திருக்க வேண்டுமா, இல்லையா? தொடரும் காத்திருப்பு ஏக்கங்கள் தவிப்புகளால் உடைந்து சலித்துப் போயிருக்கும் அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, அவர்களின் மனசுகளை ஆசுவாசப்படுத்தி தாங்கிப் பிடித்திருக்க வேண்டியது இந்தச் சமூகத்தின் கடமையல்லவா? ஆனால், அப்படி ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை.
தமிழ் அரசியல் கட்சிகள் இளைஞர் அணி, மகளிர் அணி என்று கூறிக் கொண்டு கட்சிக் கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்துகின்றன. எங்கே காணாமல் போயின இந்த அணிகள் எல்லாம்? போராடும் தாய்மார்களுக்கு ஒரு மாலை நேரத் தேநீரை ஒரு விளையாட்டு கழகமோ, யாராவது ஒரு இளைஞர் குழுவோ தயாரித்துக் கொடுக்கலாம். மூன்று வேளை உணவுகளில் ஒரு நேர உணவையாவது கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம் இப்படி ஏதாவது சில சிவில்சமூக குழுக்கள், அமைப்புகள் பொறுப்பேற்கலாம். மக்கள் பங்கேற்பு அரசியல், மக்கள் பங்களிப்பு போராட்டம்என்பதெல்லாம் இப்படியான வடிவங்கள் தான். இதைச் செய்வதை தவிர்த்து விட்டு, நான் சமூக அக்கறை கொண்ட இளைஞர் அணி செயற்பாட்டாளர் அல்லது ஊர்ப்பெரியவர் என்று கூறிக் கொண்டு உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்களில் கட்சிகளிடம் போய் வேட்பாளர் சந்தர்ப்பம்கேட்டு காத்து நிற்பதற்குப் பெயர் சமூக சேவை அல்ல.
பெருந்திரள் மக்கள் பார்வையாளர்களாக விடுப்பு பார்த்துக் கடந்து போவதாலோ, அல்லது தமிழ் அரசியல் தலைமைகள் அரசோடு உடன்பாட்டுக்குப் போவதாலோ தமிழ் மக்களுக்கு என்று எதுவும் பெரிதாக கிடைத்து விடப்போவதில்லை. ஒவ்வொரு பிரச்சினைகளையும் முன்வைத்து கூர்மையான விதத்தில் போராடினால் மட்டுமே அடைய வேண்டியதை அடையலாம். இன விடுதலை என்பது உடன்பாடுகளுக்குப் போவதல்ல, அது தமிழ் மக்களின் நலன்களை அபிலாசைகளை வைத்துக் கொண்டு போராடுவதும், போராட்டம் தரும் விளைவுகளை கொண்டு ஒருதேசமாக பேரம் பேசுவதும் ஆகும். அப்படியாயின் தமிழ் மக்கள் தமது பேரம் பேசும்சக்தியை அதிகரிக்க வேண்டுமாயின், கூர்மையான விதத்தில் போராடினால் மாத்திரமே அது சாத்தியமாகும். ஆகவே விடுப்பு பார்க்கும் பெருந்திரள்மக்கள் சிறுத்துப் போக, போராடிக் கொண்டிருக்கும் சிறுதிரள் மக்கள் பெருக்கமடைய வேண்டும். அதற்கு போராட்டங்களை மக்கள் மயப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு சம்பவங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் பின்னால் உள்ள அரசியல் காரணங்களை மக்களுக்கு தெளிவூட்டும் அரசியல் கலந்துரையாடல்களை கிராமங்கள் தோறும் நடத்த வேண்டும். அவர்கள் உழைத்து உண்ணும் "ஒரு பிடி அரிசியில் இருக்கும் அரசியலிருந்து" பேசத் தொடங்க வேண்டும். உணவு அரசியல், உடை அரசியல், நீர் அரசியல், சுற்றுச்சூழல் அரசியல், உன்னைச் சுற்றி இருக்கும் உன் கிராமத்தின் இயற்கை வளங்களின் அரசியல், உன் பிள்ளைகளின் கல்வி அரசியல், தொழில் அரசியல், மருத்துவம், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து இப்படி மக்களின் நாளாந்த சீவியம், நடமாட்டம், அத்தியாவசிய தேவைகள் ஒவ்வொன்றிலும் உள்ள அரசியலை பேசப் பழக்க வேண்டும். பேசிப் பேசி விளக்க வேண்டும். இதனை யாரால் செய்ய முடியும் என்றால், "ஒரு தேசமாக சிந்திக்கும்" தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் தலைவரால் மட்டுமே இதனை சாத்தியமாக்க முடியும்.
அரசியல் கட்சிகள் தேர்தல் மையசிந்தனைக்குள் நின்று கொண்டு மரத்துப் போயிருக்கும் மக்களை மந்தைகளாக தொடர்ந்தும் ஓட்டப் போகின்றனவா? இல்லை, வெறும் வாக்களிக்கும் ஜட இயந்திரங்களாக மட்டுமே கருதப் போகின்றனவா? இதற்கும் அப்பால், மக்களை அரசியல் மயப்படுத்தி ஒரு தேசமாக சிந்திக்கத் தேவையான அத்தனை வனப்புகளையும் உள்ளடக்கி புத்திபூர்வமாக ஒரு சமூகத்தை கட்டமைக்கப் போகிறார்களா? இதில் எது நடக்கும்? எது நடந்தால் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும்? தமிழ் மக்கள் அவரவர் தொகுதிகளின் அரசியல் பிரதிநிதிகளின் நடத்தைகளில் இருந்தே, தம்மைத் தமது பிரதிநிதிகள் என்னவாக நினைக்கிறார்கள்: மந்தைகளாகவா, மனிதர்களாகவா, தம்மை இதில் எதுவாக விளங்கி வைத்திருக்கிறார்கள் என்பதனை துலக்கமாக அறிந்து கொள்ள முடியும் இதுவும் கூட, அரசியலில் ஒரு ஆரம்ப பாடம் தான். இப்படி பாடங்களைக் கற்றுக் கொண்டுவிட்டால், அரசியலில் தமிழ் மக்கள் மேய்ப்பர்களாக மாற முடியும். போராடிக் கொண்டிருக்கும் சிறுதிரள் மக்கள் பெருந்திரள் மக்களாக மாற வேண்டும். அத்தோடு நின்று விடாமல், அந்த பெருந்திரள் மக்கள் தமிழ் அரசியலில் மேய்ப்பர்களாக வளர்ச்சியடைய வேண்டும்.
இசைப்பிரியன்-
நிமிர்வு : மார்கழி - தை 2021 இதழ்
Post a Comment