இனப்படுகொலையின் மறுபக்கமே இன்றைய சிங்கள அரசியற் கொதிநிலை; இதில் தமிழரின் நிலையென்ன? அடுத்ததென்ன? பகுதி : 01

 


ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களால் 10.04.2022  அன்று நடாத்தப்பட்ட "இனப்படுகொலையின் மறுபக்கமே இன்றைய சிங்கள அரசியற் கொதிநிலை; இதில் தமிழரின் நிலையென்ன? அடுத்ததென்ன?" என்கிற உரையாடல் வகுப்பின்  முதல் பகுதி இங்கே பிரசுரமாகிறது.

எமது தலைவிதியோடு சம்பந்தப்பட்ட அதாவது ஈழத்தமிழர்களோடு சம்பந்தப்பட்ட இலங்கையின் உள்நாட்டு அரசியலில் எமக்கிருக்கக்கூடிய பாத்திரமென்ன என்பதையிட்டு திட்டவட்டமான வரையறைகளுடன் நிலைமைகளை சரிவர ஆராய வேண்டி இருக்கிறது. ஒரு பிரெஞ்சு பழமொழி இருக்கின்றது. உன்னை நீ கைவிட்டு விட்டால் உன்னைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று. ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று காணப்படுகின்ற உள்நாட்டு வெளிநாட்டு சூழல்களில், சூழலுக்கும் யதார்த்தத்திற்கும் காலகட்ட தேவைகளுக்கும் பொருத்தமான வகையில் எமக்கான பாத்திரத்தை நாம் வகித்தாக வேண்டும்.

நீ செயற்படாது விட்டால் உன் பொருட்டு இன்னொருவன் செயற்பட முடியாது. காலம் காலமாக ஈழத்தமிழர்கள் தம் போராட்டத்தின் பல கட்டங்களில் பின்னடைந்து செல்வது ஒரு வரலாற்று துயர்மிகுந்த அனுபவமாக காணப்படுகிறது. இந்நிலையில் நாம் இன்றைய நெருக்கடியான காலக்கட்டத்தில் எமக்கு வாய்ப்பான தீர்மானங்களை எடுத்து எப்படி செயற்படலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விடயமானது இலங்கை முழு நாடும் தழுவிய வகையில் உள்நாட்டு அரசியல் பிரச்சினை ஒரு இருள் மயமான நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தமக்குரிய இடத்தை, தமக்குரிய பாத்திரத்தை எவ்வாறு வகிப்பது என்று நாம் இப்போது பார்க்க வேண்டும். இலங்கைத் தீவின் நாடு தழுவிய பிரச்சினையில் இருந்து நாம் ஒதுங்கியிருக்க வேண்டியதில்லை. இலங்கைத்தீவின் இந்த அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினையோடு எமது பிரச்சினையை இணைக்க நாம் தவறக்கூடாது என்பதே இன்றைய உரையாடலின் சாராம்சமாகும்.

இலங்கைத்தீவு குறிப்பாக இனப்படுகொலையின் மறுபக்கமாக இன்று பொருளாதார சமூக அரசியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கிறது. இன்னொரு வகையில் சொல்வதானால், இன்று இலங்கை உட்பட்டு இருக்கின்ற பொருளாதார, அரசியல், சமூக நெருக்கடிகள், உள்நாட்டு குழப்பம் இவை அனைத்தும் இனப்படுகொலையின் மறுபக்கமேயாகும். எனவே இன்றைய இலங்கையினுடைய இன்று காணப்படுகின்ற நெருக்கடிகளுக்கு  மூலாதாரமானது இனப்பிரச்சினை தான்.

இலங்கைத்தீவு எப்போதுமே காலத்திற்கு காலம் இரத்தக்களரிக்கு உள்ளாகும் நாடு. பருவ கால இரத்தம் சிந்தலுக்கு உள்ளாகும் ஒரு நாடு. குறிப்பாக 1958 முதலாவது இரத்தம் சிந்தல். அப்பொழுது இரத்த ஆறு ஓடியது. அது தமிழ் மக்களின் பெயரால் தமிழ் மக்களின் தலையின் மீதே ஓடியது. இதன் பின்பு இரண்டாவது இரத்த ஆறு JVP இன் பெயரால் ஓடியது. இலங்கையில் சிங்கள இளைஞர்கள் போராடிய கிளர்ச்சியின் பெயரால் 1971 ஆம் ஆண்டு ஓடியது. மூன்றாவது 1977 ஆவணி மாதம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை கலவரம். நான்காவது கறுப்பு ஆடி 1983 கலவரம். இதன் பின்பு தமிழ்மண் தொடர்ச்சியாக 1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இரத்தக் களரிக்கு உள்ளாகியிருந்தது. அதே வேளை சிங்களவர் 1989, 1990, 1991 ஆம் ஆண்டு காலங்களில் இரத்தக் களரிக்குள்ளாகி இருந்தனர்.

காலத்திற்கு காலம்  இலங்கையில் இவ்வாறு இரத்த ஆறு ஓடுவது ஒரு வழக்கம். அதற்கு காரணம் இலங்கையின் அரசியல் பொருளாதார பிரச்சனை தீர்க்கப்படாதது தான். அந்த அரசியல் பொருளாதார பிரச்சனை இனப்பிரச்சனையின் அடிப்படையிலேயே இருந்திருக்கின்றது.



இலங்கையின் இனப்பிரச்சனையை தீர்க்காமல் தமிழ் மக்களுக்கான நீதி வழங்காமல் ஜனநாயகமும் இல்லை, பொருளாதார வளர்ச்சியும் இல்லை, இலங்கை தீவுக்கு சுபிட்சமும் இல்லை, இந்த பிராந்தியத்திற்கு அமைதியும் இல்லை, இலங்கை இந்திய உறவில் சுமூகமுமில்லை. எல்லோரது வேட்டைக் காடாக இலங்கை மாறும். அந்நியர்களின் வேட்டைக் காடாக இலங்கை இப்போது ஆகி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இனப்படுகொலையை ஒரு கருவியாக பயன்படுத்த உலகநாடுகளிடம் கடன் பெற்றது,  ஒரு வெளிநாட்டோடு யுத்தம் புரிவது போன்று அளவுக்கு மிஞ்சிய ஒரு பாரிய இராணுவத்தை கட்டி வளர்த்தது, அந்த இராணுவச்செலவை தொடர்ந்து பேணுவது என்பவற்றின் விளைவே இன்றைய இலங்கையின் நெருக்கடிக்கு காரணமாகும். ஆதலினால் நாம் இனப்பிரச்சனையை மையம் கொண்டுதான் இதனை அணுகவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இனப்பிரச்சனைக்கு தீர்வில்லையேல் உள்நாடு, வெளிநாடு, அண்டைநாடு, சர்வதேசம் என்ற எந்தவகையிலும் இலங்கைக்கு சமாதானம் கிடைக்கவே கிடைக்காது. ஆதலினால் சிங்கள மக்களுக்கு நாம் ஒன்றை உணர்த்த வேண்டும். எங்களை ஒடுக்கியதன் விளைவை நீங்கள் இன்று அனுபவிக்கிறீர்கள் என்பது தான். நீங்கள் அனுபவிக்கின்ற அதே விளைவை நாங்களும் சேர்த்து அனுபவிக்கின்றோம். ஈழத்தமிழர்களும் ஈழம் வாழ் முஸ்லிம்களும் மலையக  மக்களும் அனுபவிக்கின்றனர். எனவே இது ஒரு தனி மனிதனுக்குரிய பிரச்சனை அல்ல. தனி இனத்துக்குரிய பிரச்சனையல்ல. இனப்பிரச்சனை தீரா விட்டால் இப்படித்தான் தொடர்ந்து நடக்கும் என்பதை அவர்களுக்கு சொல்ல வேண்டும்.

இக்கட்டத்தில் ஈழத்தமிழர்கள் தீர்க்கமான அரசியல் தீர்மானத்திற்கு போக வேண்டும். நாம் மொத்தமாக இலங்கையில் காணப்படுகின்ற சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின்மை, திடீர் விலை அதிகரிப்புகள்  போன்ற அனைத்து பிரச்சினைகளிலும் நாம் சிங்கள முஸ்லிம் மற்றும் மலையக மக்களோடு கைகோர்த்து ஒரு நாடு என்கின்ற முழு அளவிலான பாத்திரம் வகிக்க தயாராக வேண்டும். எனவே நாம் இந்தப் பிரச்சினையில் இதற்கு காரணமான அரசாங்கத்தை எதிர்த்து அவர்களோடு எமக்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டும். முதலாவது அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மக்களின் தேவைக்கு பொருத்தமான வகையில் விலை இறக்கம் செய்யப்பட வேண்டும். இந்த கோரிக்கையை தீவடங்கலான அனைத்து மக்களுடனும் இணைந்து முன்வைப்போமாக.

அடுத்து எமது இனப்பிரச்சனை. முதலாவதாக ஈழத்தமிழர்கள் இனப்படுகொலையிலிருந்து நீதியைக் கோரி நிற்கும் மக்கள். நாம் இதுவரை கவனிக்கப்படாதிருந்தோம். எந்த ஒரு சிங்கள மகனும் எங்களது கண்ணீரில் பங்கெடுக்கவில்லை. மாவீரர்களான மக்கள், மாண்டு போன மக்கள், மறைந்து போன மக்கள், அல்லல்படுகின்ற மக்கள் என்பவர்களுக்காக சிங்கள மக்களிடமிருந்து ஒரு துளி கண்ணீரும் வரவில்லை. ஒரு பொழுது கூட எங்களது பிள்ளைகளுக்காக எங்களுடைய மக்களுக்காக அவர்கள் இரங்கவில்லை. அது  மத தலைவர்களாக இருக்கலாம், அரசியல் தலைவர்களாக இருக்கலாம், ஊடகவியலாளர்களாக இருக்கலாம், நிறுவனங்களாக இருக்கலாம் யாருமே செய்யவில்லை. நாங்கள் தனித்து விடப்பட்டிருக்கிறோம்.

அதேவேளை நாங்கள் வெறும் பொது நீரோட்டத்தில் பார்வையாளர்களாக நின்று கொண்டு எமது பிரச்சனையை கைவிடுவோமானால் எமது பிரச்சனையை இந்தியாவும் கைவிடும், அமெரிக்காவும் கைவிடும், மேற்குலகமும் கைவிடும். மாறாக நாம் எமது பிரச்சனையை கையில் எடுத்தால் தான் இலங்கைத்தீவில் சிங்களவர்களும் எங்களைப் பார்ப்பார்கள். இலங்கைத் தமிழர்களும் விழிப்பாக இருப்பார்கள். இந்தியாவும் இப்பிரச்சனையை கைவிட முடியாதென்ற முடிவுக்கு வரவேண்டி வரும். அமெரிக்காவும் எமது பிரச்சனையை வெறுமனே மனித உரிமை பிரச்சனையென்ற தனது ஸ்தானத்திலிருந்து அணுக முடியாதென்ற முடிவுக்கு வர வேண்டி வரும். தமிழ் மக்களுக்கு விடிவில்லையெனில் எந்தவிதமான சமாதானமும் அபிவிருத்தியும் இல்லையென்ற முடிவுக்கு வர வேண்டி வரும். ஆதலால் முதலாவதாக நாம் நீதியைக் கோருவோம். இனப்படுகொலைக்கு எதிரான நீதி! அதுவே ஜனநாயகத்தின் குரல்! அது இன்றி இலங்கைக்கு ஜனநாயகம் என்று ஒன்று கிடையாது. ஜனநாயகத்தின் பெயரால் இனப்படுகொலைக்கு எதிரான நீதியை நாங்கள் கோர வேண்டும். இதுவே எமது பக்கத்திலிருந்து முதலாவது கோரிக்கை.

அதாவது முதலாவது, முழுநாட்டிற்குமான அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை இறக்கு என்பது, பண்டங்களை கிடைக்க வை என்பது. அடுத்தது, எமது பக்கத்திலிருந்து முதலாவது கோரிக்கை இனப்படுகொலைக்கு எதிரான நீதியை கோருவது. இரண்டாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு என்பது. மூன்றாவது, குறைந்தபட்சம் சமஸ்டி அரசியல் அமைப்பு கோரிக்கை. இந்த கோரிக்கைகளில் எங்களுடைய தலைவர்கள் அனைவரும் ஒரு பக்கம் நிற்கின்றார்கள்.



ஈழத்தமிழர்கள் மத்தியில் பல தலைமைகள் உண்டு. குறிப்பாக மூன்று அல்லது நான்கு தலைமைகள் உண்டு. அனைவரும் அடிப்படையில் குறைந்தபட்சம் சமஷ்டி கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். எனவே இப்போது அந்த சமஷ்டி கோரிக்கையின் அடிப்படையில் நீங்கள் தமிழர்களுக்கு தீர்வை முன்வையுங்கள் என்றாவது இந்த தமிழ் தலைமைகள் தனித்தனியாகவோ  கூட்டாகவோ போராட வேண்டும். கூட்டாக போராடுவது தான் முதலாவது தெரிவாக அமைவது நல்லது. அப்படி கூட்டாக போராடத் தவறினாலும் தனித்தனியாகவாவது போராட வேண்டும். எனவே இந்த நான்கு கோரிக்கைகளின் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் இன்றைய இலங்கையின் பிரச்சினையில் பங்கெடுக்க வேண்டும். உன்னை நீ கைவிட்டு விட்டால் உன்னை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. நாட்டின் பொதுப் பிரச்சனையிலும் பங்கெடு. உனது தனிப்பட்ட பிரச்சனையையும் கைவிட்டு விடாதே.

இப்போது ஒரு வரலாற்று விளக்கத்தை நான் சொல்கிறேன், 1917 ஆம் ஆண்டு ரஸ்யாவில் புரட்சி ஏற்பட்ட போது பல தேசிய இனங்கள் புரட்சியில் பங்கெடுக்க மறுத்தன. அப்போது லெனின் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். தேசிய இனங்கள் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை உடையவை. உக்ரைன், பைலோரஸ்யா, பின்லாந்து ஆகிய தேசிய இனங்களுக்கு லெனின் வாக்குறுதி அளித்தார். புரட்சியில் பங்கெடுங்கள், புரட்சியில் வெற்றி பெற்ற பின்னர் நீங்கள் சுயமாக பிரிந்து செல்ல அனுமதிக்கப்படுவீர்கள். ஆம், ரஸ்யாவின் புரட்சியில் பல்வேறு தேசிய இனங்களும் ஒன்றிணைந்து போராடின. ஒரு சில கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து போராடின. புரட்சி வெற்றி பெற்றது.

அப் புரட்சியில் தனியே ஒவ்வொரு தேசிய இனத்தின் கோரிக்கையும் வற்புறுத்தப்பட்டது. அதேவேளை பொதுமக்களின் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டது. அதாவது, எல்லோருக்கும் உணவு, காணி, சமாதானம் வேண்டும் என்ற கோரிக்கை. இது முழு ரஸ்யர்களுக்கும் பொதுவான கோரிக்கை. அப்போது சோவியத் யூனியன் என்று ஒன்று இருக்கவில்லை, பிறகு தான் சோவியத் யூனியன் உருவாகியது. அன்றைய ரஷ்ய சாம்ராஜ்ஜியத்துக்கு எதிரான போராட்டத்தில் அந்த நாடு முழுவதிற்கும் பொதுவாக இருந்த கோரிக்கை, நிலம், உணவு, சமாதானம். அத்தோடு கூடவே தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்தது.

இவ்வாறு புரட்சி நடந்து எல்லா தேசிய இனங்களும் பங்கெடுத்தன. புரட்சியின் பின்பு பின்லாந்து ஒருபோதும் சேர்ந்து வரவில்லை.  பின்லாந்து   புரட்சியோடு தனிநாடாகவே போய்விட்டது. உக்ரைன், பைலோ ரஸ்யா போன்றவை சோவியத் யூனியனில் சேர்ந்தன. அவற்றின் முடிவால் பின்னைய காலத்தில் வந்த பிரச்சினைகள் வேறு. ஆனால் அந்த கட்டத்தில் அவர்கள் எடுத்த தீர்மானம் சரியானது. அவர்கள் தங்களுடைய தனித்துவமான கோரிக்கையை முன்வைத்தார்கள். பொதுவான கோரிக்கையோடு இணைந்தார்கள்.

நாங்களும் எங்களுடைய தனித்துவமான கோரிக்கையை முன்வைப்போம். சிங்கள மக்கள் மத்தியில் ஒன்றைச் சொல்வோம். எங்களுடைய பிரச்சனை ஜனநாயக ரீதியில் தீர்க்கப்பட வேண்டும் என்று. முதலாவதாக கட்டியமாக ஒன்றைக் கூற முடியும். ஈழத்தமிழர்கள் தாம் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்த நான்கு கோரிக்கைகளின் அடிப்படையிலும் சாத்தியமான வழி, அதாவது  காட்சிப்படுத்தல் ஜனநாயக வழியில் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த கட்டியம்.

இந்த காட்சிப்படுத்தல் ஜனநாயகம் நேற்று வரை ஈழத்தமிழர்களுக்கு மறுக்கப்பட்டே இருந்தது. முள்ளிவாய்க்காலுக்கு பின்பு இந்த காட்சிப்படுத்தல் ஜனநாயகம் அதாவது தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் செய்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து நிறுத்திவிடுவார்கள். சிறையில் போட்டு விடுவார்கள். சிங்கள மக்கள் ஆயுதம் தாங்காத கிளர்ச்சி செய்தல், எதிர்ப்பு காட்டுதலை செய்கிறார்கள். அதை சிங்கள அரசு ஏற்று பொலிஸ் பாதுகாப்பும் அளிக்கிறது.



இந்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரு ஜனநாயக உரிமை, அதாவது காட்சிப்படுத்தல் ஜனநாயகம் நடைமுறையில் இருப்பதை கண்ணால் காணும் நாம் அது எமக்கும் உரியது என்று நிரூபிக்க எமது கோரிக்கையை முன்வைத்து அவ்வாறு போராட வேண்டும். இது எமக்கு வரலாறு தந்திருக்கும் ஒரு வாய்ப்பு. ஒரு வரப்பிரசாதம்! எங்களுக்கு நேற்றுவரை காட்சிப்படுத்தல் ஜனநாயகம் மறுக்கப்பட்டிருந்தது. இப்போது சிங்களவர்களுக்கு காட்சிப்படுத்தல் ஜனநாயகம் வந்திருக்கின்றது. அவர்கள் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் செய்யலாம், கோசங்கள் எழுப்பலாம். ஜனாதிபதி மாளிகைகளை முற்றுகையிடலாம், அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிடலாம். நாங்களும் எங்கள் அளவிற்கு தொடர்ச்சியாக போராடுவோம்.

இது எங்களுடைய வடக்கு கிழக்கு பகுதிகள் அதாவது யாழ்ப்பாணத்தில், திருகோணமலையில், மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டு போராட்டம் கொழும்புக்கும் விரிவடைய வேண்டும். தமிழ்த் தலைவர்களே நீங்கள் கொழும்பு  சென்று வீதியில் நின்று போராடவேண்டும். அப்போது, சிங்கள மக்களுக்கு, நாங்கள் உங்களோடு நிற்கிறோம் என்று சொல்லிவிட்டு எங்கள் பிரச்சனையை அவர்களுக்கு சொல்லுங்கள். இதைத்தான் தமிழ் தலைவர்கள் இப்போது செய்யவேண்டும்.  நான் யாரையும் போராட்ட பொது விதிமுறைகளிலிருந்து விலகி பலாத்காரமான ஒரு பாதையில் போங்கள் என்று சொல்லவில்லை.

வெறும் கற்பனைகளும் அமானுஸ்ய கனவுகளும் ஆவேசமான இலட்சிய வேட்கைகளும் சோறுபோடாது. இப்போது யதார்த்தப்பூர்வமான நிலைமைகளின் கீழ் நாங்கள் யதார்த்தப்பூர்வமாக போராட வரலாறு எமக்கு ஒரு வாய்ப்பை அளித்து இருக்கின்றது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேற்கண்ட நான்கு கோரிக்கைகளையும் முன்வைத்து தமிழ் மக்கள் போராட வேண்டும். இது முதலாவது!

இரண்டாவதாக, இந்த நான்கு கோரிக்கைகளிலும் தமிழ் தலைவர்கள் மத்தியில் ஒருவருக்கும் வேறுபாடு இல்லையே. சமஷ்டி கோரிக்கையை தமிழ்த் தலைவர்கள் எல்லோரும் தானே முன்வைத்திருக்கின்றீர்கள். எனவே சமஷ்டி அடிப்படையில் தீர்வை முன்வை என்று நீங்கள் எழுதிக்கொடுத்த அடிப்படையில், அரசியல் யாப்பு மாற்றம் வேண்டும் என்று எழுதிக்கொடுத்த அந்த அடிப்படையில் இப்போது நீங்கள் போராடவேண்டும். குறைந்தபட்சம் இதற்கு ஒன்று சேர்வதில் உங்களுக்கு என்ன தடை இருக்கின்றது? ஒரு கோரிக்கை, ஒன்றுபட்டு நில்லுங்கள்.

பயங்கரவாத தடை சட்டம் வேண்டாம் என்பதில் உங்கள் யாரிடம் வேறுபாடு இல்லை. இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்பதில் யாருக்கும் வேறுபாடு இல்லை. குறைந்தபட்சம் சமஷ்டி கோரிக்கையில் யாருக்கும் வேறுபாடு இல்லை. உங்கள் எல்லோரிடமும் இவ்விடயங்களில் பொது உடன்பாடு உண்டு. அத்தியாசிய பொருட்களை தடையில்லாமல் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் கோரிக்கையில் எவருக்கும் முரண்பாடு இல்லை. எனவே இந்த நான்கு கோரிக்கைகளின் கீழ் ஒன்றுபட்டு போராடுங்கள்.

ஒன்றுபட்டு போராடும் அளவு கலாசாரம் உங்கள் மத்தியில் வளரவில்லை என்றால், மனம் பண்பட்டு விருத்தியடையவில்லை என்றால், நவகிரகங்கள் போன்று ஒன்பது பக்கமும் திரும்பித் தான் நிற்பீர்கள் என்றால், நவகிரகங்கள் ஒரு அறையில் வைக்கப்பட்டிருப்பதையாவது கவனத்தில்  கொள்ளுங்கள். வெவ்வேறு திசைகளில் பார்த்துக் கொண்டிருந்தாலும் நவக்கிரகங்கள் ஒரு அறைக்குள்ளே தான் இருக்கின்றன. போராட்டத்தை ஒன்றுபடுத்தியும் பலப்படுத்தியும் போராட வேண்டும். வேண்டுமென்றால் வேறு வேறு திசையில் இருக்கும் நவகிரகங்கள் போல் தனித்தனி கொடிகளை பிடித்துக் கொண்டு ஓரிடத்தில் கூடுங்கள். உங்கள் கட்சிக் கொடியின் கீழ் உங்கள் ஆட்களை கொண்டு வந்து ஓரிடத்தில் கூடுங்கள். ஒரே மாதிரி போராடுங்கள். ஒரே துண்டு பிரசுரத்தை விநியோகித்து, ஒரே சுவரொட்டிகளை ஒட்டி போராடுங்கள். ஒரே விதமான செய்திகளை வெளியிட்டு, ஒன்றுபட்டு போராடுங்கள். இது உங்களுக்கு வரலாறு தந்திருக்கும் உண்மையான வரப்பிரசாதம்.



அடுத்து நாம் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று, ஈழத்தமிழர்களின் பிரச்சனையை இனப்படுகொலையின் மறுபக்கம் என்று திட்டவட்டமான வரையறைகளுடன் சொல்வதற்கு முன்னோடியாக ஈழத்தில் இருந்து ம.நிலாந்தன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் பெருமளவிலான ஈழத் தமிழர்கள் தமக்குரிய கோரிக்கைகளை  அடிப்படையாக வைத்து போராட வேண்டும் என்று சொல்கிறார். அது மிகவும் சரியானது.

வரலாற்றின் விதியை நாம் பற்றி பிடிக்க தவறினால் அது எங்களை விட்டு ஓடிவிடும். நாங்கள் வரலாற்றால் கைவிட்டப்பட்டவர்களாகி விடுவோம். எனவே விருப்பங்களுக்கு மாறாக வரலாறில் உரிய பக்கம் செல்வோம். 

2021 ஆம் ஆண்டு மாசி 4ஆம் திகதி இலங்கை சுதந்திர தினத்தன்று இலங்கை ஜனாதிபதியாகவிருந்த கோத்தாபய ராஜபக்ஸ பின்வருமாறு கூறினார். நீங்கள் தேடிய தலைவர் நானே என்றார். இன்று தேடிய தலைவரை மக்கள் துரத்துகின்றார்கள். சிங்கள பௌத்தர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றவென்று வந்தவர்.  அவர்களின் தலைவன் என்று சொல்வதில் எந்தவித தயக்கமும் இல்லை என்றார். அப்படி பேசியவரின் மாளிகையைத்தான் இன்று மக்கள் முற்றுகையிட்டு கோஷமிடுகிறார்கள்.

இந்த வசனத்தை பிரான்ஸ் நாட்டின் மாமன்னராக இருந்த 16 ஆம் லூயி சொன்ன வசனத்தில் இருந்துதான் கோத்தாபய எடுத்தார். இது 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த சம்பவம். 16 ஆம் லூயி இவ்வாறு தான் சொன்னார், “நானே அரசு,   நானே மன்னன், எனது வார்த்தைகளே அரசியல் சட்டம்.” இதே வார்த்தைகளை ஜனாதிபதி கோதாபாய ராஜபக்ஸவும் சொல்லி மக்களை வென்றார். 16 ஆம் லூயியின் அடுத்த கட்டத்தை பாருங்கள். அவர் அந்த காலத்தில் அமெரிக்க விடுதலை போருக்காக பிரித்தானியர்களை எதிர்த்து பிரெஞ்சு படைகளை பெருமளவில் அனுப்பினார். அமெரிக்க குடியேற்றங்களில் பிரெஞ்சு படை அமெரிக்க குடியேற்றவாசிகளுடன் சேர்ந்து பிரித்தானிய படைகளுக்கெதிராக போராடின. பெரும் தொகையான பணத்தை இந்த போரில் 16 ஆம் லூயி செலவழித்தார். 

அமெரிக்க விடுதலைப் போர் வெற்றி பெறுவதற்கு பிரெஞ்சு படையின் பங்களிப்பும் ஒரு பிரதான காரணம். அமெரிக்க விடுதலைப்போரின் தந்தையாக இருந்த ஜோர்ஜ் வோசிங்டனோடு தோளோடு தோள் நின்றவர் அலெக்சாண்டர் ஹமில்டன் என்ற ஒரு பிரெஞ்சுக்கார தளபதி. இவர் தான் ஜோர்ச் வோசிங்டனுடைய உண்மையான ஆலோசகர், மற்றும் நிர்வாகி. அலெக்சாண்டர் ஹமில்டன் அரசியல் யாப்பின் உருவாக்கத்தில் மிகப்பெரும் பங்கெடுத்தவர். அவர் தான் வோசிங்டன் மனம் தளர்ந்த போதெல்லாம் அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து விடுதலைப் போரை  முன்னெடுத்தவர். அந்தளவுக்கு பிரான்சின் பங்களிப்பு அமெரிக்க விடுதலைப் போரில் இருந்தது.

இந்த விடுதலைப்போருக்கு 16 ஆம் லூயி படையனுப்பியதற்கு அவரிடமிருந்த நோக்கம் வேறு. அமெரிக்க மக்கள் விடுதலையடைய வேண்டும் என்பதற்காக அவர் படையனுப்பவில்லை. தனது எதிரியான பிரித்தானியா, காலனியை இழந்து தன் பொருளாதாரத்தில் பலவீனப்பட்டு நலிந்து போக வேண்டும் என்பதற்காகவே அவர் படைகளை அனுப்பி பிரித்தானியாவின் காலனி ஆட்சியை அகற்றப் போராடினார். இதில் அவர் பெரும் செலவுகளை செய்தார். இந்த பெரும் செலவும் பெரும் யுத்தமும் ஏற்படுத்திய சுமையில் இருந்தும் மீள முடியாத நிலையில் 16 ஆம் லூயி வீழ்ச்சியடைவதற்கான அடிப்படை ஆரம்பமானது.

அந்த நிலையில் பிரான்ஸினுடைய ஆட்சி மன்றத்தை அதன் அதிபர் கூட்டுகின்றார். ஆட்சி மன்றம் லூயிக்கெதிராக போர்க்கொடியெழுப்பத் தொடங்கியது. கடைசியாக லூயி பிரஞ்சு மக்களுக்கெதிராக கிளர்ச்சியை செய்து வகை தொகையின்றி பிரஞ்சு மக்களை வெட்டி கொல்கிறார். அதே கிளர்ச்சியால் தலை வெட்டப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். 16 ஆம் லூயியின் வசனம் கோதாபயவிற்கு விருப்பமானதாக முன்மொழியப்பட்டது. ஆனால், 16 ஆம் லூயிக்கு தண்டனை வழங்கப்பட்ட பிற்பகுதியை அவர் கவனிக்கத் தவறி இருக்கலாம். இது வரலாற்றின் முக்கியமான படிப்பினை.

தமிழ் மக்களின் பெயரால், நீதியின் பெயரால் சிங்கள மக்கள் கோத்தாபயவிற்கு எதிராக குரலெழுப்பவில்லை. கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்காக ஒரு சொட்டு கண்ணீரையும் வடிக்காத சிங்கள மக்கள் இதுவரை குரலெழுப்பாமல் இருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய யாராவது இருந்தால் அவர்களை ஒரு தொகை என்று சொல்ல முடியாது. சிலர் குரலெழுப்பினாலும் கூட அது தொகைக்குள் அடங்காது. இந்த நிலையில் 16 ஆம் லூயி மன்னனுடைய நிலை சிங்கள மக்களின் பிரச்சினையால் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் பொருளாதார பிரச்சினையால் ஏற்பட்டிருக்கிறது என்றுதான் பார்க்கிறார்கள். இல்லை, இது தமிழ் மக்களை ஒடுக்கியதனால், இனப்படுகொலை செய்யப்பட்டதன் பெயரால் ஏற்பட்டிருக்கிறது. இது ஒரு வரலாற்றின் தீர்ப்பு! இது ஒரு வரலாற்றின் விளைவு! வரலாற்றின் போக்கில் இது தவிர்க்கமுடியாதது! எனவே தான் இலங்கை இவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாகுமென முன்கூட்டியே உணரப்பட்டிருந்தது.

ஈழத்தமிழர்களின் பிரச்சினையையிட்டு கட்டியமாக ஒரு வசனம் கூற முடியும். சிங்கள மக்கள் தமக்குள்ள அரிசி, பாண், பருப்பு, சமையல் வாயு, எரிபொருட்களின் பெயரால் போராடுகிறார்கள். இது தீர அவர்கள் மீண்டும் கோத்தாபயவிற்கு கோவில் கட்டத் தவற மாட்டார்கள். தேர் கட்டி இழுப்பார்கள். இது அந்தப் பக்கத்தில் நிகழக்கூடிய நியதி. எமது பக்கம் அப்படிக் கிடையாது. நாங்கள் எங்கள் அடிப்படை கோரிக்கையில் இருந்து விலகிச்செல்ல மாட்டோம். அது வரலாற்றில் தீர்ப்பு வழங்கும் வரை நாம் ஓய மாட்டோம். இவ்வாறு  திட்டவட்டமாக சொல்ல முடியும்.

“இட்டு நிரப்பப்பட முடியாத அதல பாதாளமான வேறுபாடுகளை கொண்ட வகையில் ஈழத்தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமான பிரச்சினை இருக்கின்றது.” இது J.N. தீக்சித் அசைமென்ட் கொழும்பு (Assignment Colombo) என்ற நூலில் எழுதிய வசனம். இதனை வெறுமனே பொருளாதார சீர்திருத்தங்களால் ஒருபோதும் சரி செய்துவிட முடியாது என்றும், அதற்கு முன்பு அது பற்றி சரியாக புரிந்திருக்கவில்லை என்றும் அந்நூல் மூலம் அவர் சொல்லியிருக்கிறார். அன்றைய இந்திய கொள்கை வகுப்பாளர்களோ இந்திய பிரதமரோ ராஜீவ் காந்தியோ ராஜதந்திரிகளோ ராஜீவுக்கு ஆலோசனை சொல்லியவர்களோ கூட சரி வர புரிந்திருக்கவில்லையென்று சொல்லிவிட்டு இதனை கூறுகிறார். அந்தவகையில் அதலபாதாளமான இந்த பிரச்சனையை ஒருபோதும் இந்த விதமான சமரசங்களாலோ சாதாரணமான அரசியல் நடவடிக்கைகளாலோ இட்டு நிரப்பமுடியாது.

இது ஒரு தக்கபூர்வமான வளர்ச்சிக்குப் போய் நாடு பிரிந்து செல்வதில் முடிவடையும். இதனை இன்று பலரும் ஏற்க மறுக்கலாம். வரலாற்று கண்கொண்டு பார்க்காத வரை பலரும் இதனை தப்பு அல்லது பொய் அல்லது கற்பனை என்றும் சொல்லலாம். நிச்சயமாக நான் வரலாற்று கண்கொண்டு இதனைச் சொல்கிறேன். நாடு பிரிவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு நாளில் சிங்கள மக்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? 16 ஆம் லூயிக்கு நடந்த அந்த கிளர்ச்சியின் தண்டனையை ராஜபக்சக்களுக்கு வழங்க முன்வருவார்கள். நான் உங்கள் முன் மிகவும் கூர்மையான உதாரணங்களை சொல்லப் போகிறேன்.  

இலங்கையின் வரலாற்றில் முதன் முதலாக 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டத்தை பண்டாரநாயக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முற்பட்ட போது அந்த பிரேரணை பற்றி பேசியபோது, அன்று இருந்த டாக்டர் N.M.பெரேரா, பண்டாரநாயக்கவை நோக்கி இவ்வாறு சொன்னார். “இலங்கைத்தமிழர்கள் எதிர்காலத்தில் ஒரு சிலை எழுப்பி மாலை போடுவார்களாக இருந்தால் அந்த முதலாவது சிலையும் முதலாவது மாலையும் உனக்குத்தான் விழும். அது தமிழ்த் தலைவர்களுக்கு அல்ல. இந்த சிங்களச் சட்டத்தை கொண்டு வருவதன் பெறுபேறாக நாடு ஒருநாள் உடையும். அந்த உடைவுக்கு நன்றி கூறி தமிழ் மக்கள் உனக்கு சிலையெழுப்பி மாலை போடுவார்கள்” என்றார். தனிச்சிங்களச் சட்டம் சுதந்திரகட்சியின் தலைவருடைய ஒரு நடவடிக்கை. அந்தக் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானமும் அது தான்.

இரண்டாவது கட்டத்தை பார்த்தால், நாடு பண்டாரநாயக்கவால் பிரியும் என்று கால்கோள் கொள்ளப்பட்டது போல, ராஜபக்சக்களின் நடவடிக்கையினால் இட்டு நிரப்ப முடியாத வேதனையை தமிழ்மக்கள் அடைந்திருக்கிறார்கள். அவர்களை ஒன்றாலும் சமாதானப்படுத்த முடியாது. நாடு பிரிந்து செல்வதைத்தவிர. வரலாற்றில் ஈழத்தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான  வரலாற்று பக்கத்திற்கான எந்த ஒரு இடமும் ஒருபோதும்  கிடையாது. இனி எந்த கற்பனைக்கும் இடமில்லை. அதாவது சமாதானம் முக்கியமானது. சமாதானத்தை விட முக்கியமானது, அவமானமற்ற யுத்த தோல்வி. தமிழ் மக்கள் அவமானமான யுத்த தோல்வியைத் தழுவிக் கொண்டவர்கள். அவர்களுடைய விழுப்புண்கள், வடுக்கள் ஒரு போதும் மாறாது. அவர்கள் தங்கள் அவமானத்திலிருந்து விடுபட மீண்டும் மீண்டும் எழுந்து அவர்கள் நாட்டைப் பிரிக்க வேண்டும் என்கிற முடிவுக்குப் போவார்கள்.  இனப்படுகொலை யுத்தத்தால் வெற்றிப் பெற்ற சிங்கள அரசு யுத்தத்தின் வெற்றியின் பின்பு அந்த வெற்றியைப் பயன்படுத்தி சமாதானத்திற்கு போவதற்கு பதிலாக தமிழ்மக்களை அவமானப் படுத்தவும் ஒடுக்குவதற்குமான வாய்க்காலாகவே அந்த யுத்த வெற்றியைப் பயன்படுத்தியது.



ஆதலினால் கடந்த 13 ஆண்டுகளும் யுத்தத்தின் தோல்வியின் பின்பு ஏற்பட்ட அனுபவங்களும் தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களுடன் ஒட்டுவதற்கு எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை. ஆனபடியால் இனிமேல் தமிழ் மக்கள் மானசீகமாக ஒட்ட மாட்டார்கள். யுத்தத்தில் வெல்வது சாதாரண விடயம். சமாதானத்தை அடைவது மிக கடினமான விடயம். 

இலங்கையிலுள்ள எந்த ஒரு தலைவரும் அவர்களுக்கு எந்த திறமை இருப்பினும் நாட்டிற்கு சமாதானம் ஏற்படுத்த தவறியவர் என்ற வரலாற்றுப் பழிக்கு உள்ளாவார்கள். அவர்களுடைய இராணுவ வெற்றி பழிக்குரியது, பெருமைக்குரியது கிடையாது. யுத்தத்தில் தமிழ் மக்களுடைய இந்த தோல்வி தமிழ் மக்களால் என்றும் மறக்கப்பட முடியாத  அவமானத்துடன் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இத்தகைய அவமானத்துடன் தொங்கிக் கொண்டு இருக்கின்ற இந்த நிலையில் தமிழ் மக்கள் ஒரு போதும் எதிர்காலத்தில் அமைதியடையப் போவதில்லை. ஆதலினால் தமிழ் மக்கள் தங்களுடைய அடிப்படையான கோரிக்கையில் இருந்து முன்னேறுவதற்கு வரலாறு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும். ஜனநாயக ரீதியாக பயன்படுத்த வேண்டும். நீங்கள் பயன்படுத்தாது விட்டால் தமிழ்நாடும் உங்களை கவனிக்காது. நீங்கள் போராடாது விட்டால்  அமெரிக்காவும் உங்களை கவனிக்காது. இந்தியாவும் கவனிக்காது. தமிழ்நாடும் மறந்து போய்விடும். போராடினால் தான் உங்களுக்கு பிரச்சினையுண்டு என்று மற்றவர்கள் அவதானிப்பார்கள். எங்கள் பிரச்சினை பக்கமும் தலை வைப்பார்கள். நாங்கள் தனித்து  நின்று போராடி வெல்ல முடியாது. ஆனால் நாங்கள் போராடாது மற்றவர்களை போராட்டத்திற்கு அழைக்கவும் முடியாது. இந்தப் பின்னணியில் தமிழ்மக்களுடைய போராட்டம் மிக உன்னதமான ஒரு பாதையில் செல்வதற்கான வாய்ப்பை வரலாறு எமக்கு  வழங்கி இருக்கிறது. அவற்றை தமிழ்த்தலைவர்கள் செய்ய முற்படுவார்களா என்பதே கேள்வி. அவர்கள் எல்லோரும் அமைதி அடைந்து சுமூகமாக காட்சி அளிக்கிறார்கள். போராடுவதை தொழிலாக கொள்ளாது கோசங்களாக கொண்டுள்ளார்கள்.

இங்கு இன்னும் ஒரு விடயத்தை தெளிவாக முன்வைக்க வேண்டும்: மகாவம்ச மனப்பாங்கு. இதைப் பற்றி பலரும் பேசி இருக்கிறார்கள். ஆனால் இதனை அதிகம் கூர்மையாக பேசிய சிங்கள மகன் ஒருவர் இருக்கிறார். அவர் டொக்டர் E.W. அதிகாரம். அவர் ஒரு பாளி மொழி நிபுணர். அவர் 1983 கறுப்பு ஜூலை  இனப்படுகொலையை பார்த்து ஒரு வசனம் சொன்னார். “மகாவம்சத்தை ஒரு பிரதி கூட மிஞ்சாமல் எரித்தாக வேண்டும். மகாவம்சத்தை அப்படி எரிக்காமல் இலங்கைக்கு அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முடியாது.” என்று சொன்னார். 

இப்போது உங்களிடத்தில் ஒரு கடினமான உதாரணத்தை சொல்லப் போகிறேன்.  மகாவம்சத்தில் 25 வது அத்தியாயத்தில் 110 வது பாடல் இப்படித் தான் சொல்கிறது. துட்டகைமுனு யுத்தத்தில் தமிழர்களை கொன்று குவித்து தான் வெற்றி பெற்றதற்காக வேதனைப்படுவதாகவும் அந்த தமிழர்களை தான் கொன்று குவித்ததனால் தனக்கு மோட்சம் கிடைக்காது போய்விடும் என்று கவலைப்படுவதாக மகாவம்சத்தில் ஒரு பகுதி வருகின்றது. இது உண்மை பொய் என்பதற்கு அப்பால் இது மகாவம்சத்தில் எழுதப்பட்டிருக்கின்ற பகுதியாகும். அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் மத்தியில் காவிச்செல்லப்படுகின்றது என்பது தான் முக்கியமானது.

அப்போது பிக்குகள் கூட்டம் ஒன்று அவர் முன் தோன்றி சொல்கிறது. ‘தமிழர்கள் அதாவது நீங்கள் யுத்தத்தின்போது கொன்றவர்கள் எமது மார்க்கத்தை, மதத்தை சேராதவர்கள். மிருகங்களை விடவும் பெரிதாய் மதிக்கப்படத் தகாதவர்கள். இவர்கள் கொல்லப்பட்டதால் உனது மோட்சத்தின் பாதை அடைபட்டு போகாது. நீ கவலைபடாதே. உன் மோட்ச வாசல் திறந்தே இருக்கும்.’ என்று துட்டகாமினிக்கு தேரோக்கள் அதாவது மகாசங்க பிக்குகள் ஆறுதல் வழங்கியதாக வருகிறது. இதனை சிங்கள மக்கள் இன்றுவரை நம்புகிறார்கள். உண்மையாக நடந்ததா பொய்யா என்பது வேறு விடயம். ஆனால் சிங்கள மக்கள் நம்புகிறார்கள். இது அவர்களது வரலாற்று படிமமாக இருக்கின்றது. தமிழ் மக்களை எதிரியாகவும் இந்தியாவின் கைக்கூலியாகவும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவிகளாகவும் பார்த்து இந்திய எதிர்ப்பு வாதத்தின் அடிப்படையில் தமிழர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று சிங்கள மக்கள் முழுமனதாக இன்றும் நம்புகின்றார்கள்.

‘இந்தியா இலங்கையில் கால் ஊன்றக்கூடாது என்றால் தமிழர்களை முதலில் அழித்தாக வேண்டும். தமிழர்களின் பெயரால் தான் இலங்கையில் இந்தியா அரசியல் பலம் பெற முடியும். எனவே தமிழர்களை இலங்கையில் ஒழிக்காமல் இந்தியாவினுடைய ஆதிக்கத்தை இலங்கையில் இல்லாமல் பண்ண முடியாது. இந்திய ஆதிக்கத்தை இல்லாமல் பண்ண தமிழர்களை ஒழித்தாக வேண்டும்.’ இது தான் சிங்கள மக்களினதும் அறிஞர்களினதும் மகாசங்கத்தினருடையதும் தலைவர்களினதும் பிரதானமான சிந்தனை. 1956 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கூட இது சம்பந்தமாக பண்டாரநாயக்கவின் உரையில் இதுபற்றிய வெளிப்பாடுகள் உண்டு. பல நூல்களிலும் உண்டு. இந்த மகாவம்ச மனப்பாங்கு இனப்படுகொலையை தர்மமாக எப்போதுமே  போதிக்கிறது மட்டுமல்ல, தமிழர்கள் மிருகத்தை விடவும் மேலானவர்கள் அல்ல என்று சொல்கிறது. இத்தகைய பின்னணியில் நீங்கள் இலங்கையில் ஒட்டி வாழலாமென்று யாரும் கற்பனை செய்ய முடியாது.

இன்று எங்கு பலவீனம் இருக்கின்றதோ அங்கு அதனை பயன்படுத்து. புனிதர்களாக காண்பிக்கப்பட்ட கோத்தாபய ராஜபக்சவை, நீ மன்னரல்ல ஓடிப் போ என்று சிங்கள மக்கள் குரலெழுப்பும் ஒரு வரலாற்று கட்டம் வந்திருக்கும் போது தமிழர்களும் அதில் தமக்குரிய பாத்திரத்தை சேர்ந்து வகிக்க வேண்டும். ராஜபக்சக்கள் புனிதரல்ல என்று தெரிய வருகின்ற போது எங்களை கொன்று குவித்ததில் தமக்கும் பங்குண்டு என்பதை சிங்களவர்கள் உணர்வார்கள். அதை உணர வைப்பதற்கு எங்களுடைய கோரிக்கையை நாங்கள் ஆழமாக முன் வைக்க வேண்டும். முன்வைக்கத் தவறினால் நாங்கள் கைவிடப்பட்டு போவோம். உன்னை நீ கைவிட்டு விட்டால் உன்னை எவரும் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். உன்னை நீ கைவிட்டு விட்டால் உன்னை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.  ஆகவே தமிழ்மக்கள் உண்மையாகவே போராட வேண்டிய கட்டத்துக்கு வந்திருக்கிறார்கள். மேற்படி சொன்ன நான்கு கோரிக்கையோடும் சிங்கள மக்களின் கோரிக்கைகளையும்  சேர்த்து போராடப் போகிறோம் என்பதை தமிழர்கள் உணர வேண்டும்.

(அடுத்த இதழில் இறுதிப்பகுதி வெளியாகும்)

தொகுப்பு - கார்த்திகா 

புரட்டாதி 2022 நிமிர்வு இதழ் 

இனப்படுகொலையின் மறுபக்கமே இன்றைய சிங்கள அரசியற் கொதிநிலை; இதில் தமிழரின் நிலையென்ன, அடுத்ததென்ன? பகுதி : 02

1 comment:

  1. மேலே கட்டுரை வடிவில் உள்ள உரையின் காணொலியை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
    இனப்படுகொலையின் மறுபக்கமே இன்றைய சிங்கள அரசியற் கொதிநிலை; இதில் தமிழரின் நிலையென்ன? அடுத்ததென்ன?
    https://www.youtube.com/watch?v=4lSgnG5AYQo&t=4s

    ReplyDelete

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.