தமிழர் பகுதிகளில் இருதய சத்திரசிகிச்சை வளர்ச்சி



இலங்கையிலுள்ள அரச வைத்தியசாலைகளில் திறந்த இருதய சத்திரசிகிச்சையானது கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை, காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை ஆகிய 3 போதனா வைத்தியசாலைகளில் மட்டுமே இதுவரை காலமும் நடைபெற்று வந்தது.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் முதலாவது திறந்த இருதய சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த சாதனையை நிகழ்த்திய வைத்தியகலாநிதி சிதம்பரநாதன் முகுந்தன் தலைமையிலான வைத்தியர் குழுவும் தாதியர்களும் ஏனைய உதவிக்குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள்.  இவர்களின் முயற்சியால் யாழ் போதனா வைத்தியசாலை, இலங்கையில் திறந்த இருதய சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளும் நான்கு அரச போதனா வைத்தியசாலைகளில் ஒன்றாகத் தரம் உயர்ந்தது ஒரு பெருமைக்குரிய விடயமாகும்.


07.10.2018 அன்று யாழ்சாவகச்சேரி சிவன்கோவிலடி கலைமன்ற  கலாசார மண்டபத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் வைத்தியகலாநிதி முகுந்தன் பேசிய பொழுது பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இருதய சத்திரசிக்சைப் பிரிவானது மிகக் குறைந்த வளங்களுடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் மிகக் குறைந்த வளங்களுடனேயே இயங்கி வருகின்றது.

1. யாழ். போதனா வைத்தியசாலை வட மாகாணத்தில் உள்ள 1.3 மில்லியன் மக்களது மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரே ஒரு 3 ஆம் நிலை வைத்தியசாலை Tetiary Care Hospital ஆகும்.

2. மேலும் கிழக்கு மாகாண மக்களும் தற்போது இருதய சத்திர சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையையே நாடுகிறார்கள். எனவே, நாம் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவை விஸ்தரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதிகரித்துவரும் தேவைக்கு ஏற்ப குறைந்த பட்சம் 3 இருதய சத்திரசிகிச்சை நிபுணர்கள் நியமிக்கப்பட வேண்டும்.


3. இருதய சத்திரசிகிச்சைப் பிரிவுக்கென்று தனியான உணர்வழியியல் சிகிச்சை நிபுணர்கள் இல்லாமல் இருப்பது ஓர் நெருக்கடியான நிலையை ஏற்படுத்துகின்றது.

4. இரு படுக்கைகளை மட்டுமே கொண்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவே தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றது. படுக்கைகளின் எண்ணிக்கையும் அதற்கேற்ப ஆளணியினரும் அதிகரிக்கப்பட வேண்டும்.


5. இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கென்று தனியான நோயாளர் விடுதி இல்லாது இருப்பதால் நோயாளர்கள் பல வழிகளிலும் அசௌகரித்தை எதிர்நோக்குகிறார்கள். எனவே தனியான விடுதி ஏற்படுத்தப்படுவதுடன் அதற்குரிய ஆளணிகளும் அதிகரிக்கப்பட வேண்டும்.

தற்போதைய வளங்களைக் கொண்டு எம்மால் வாரத்திற்கு இருவருக்கு மட்டுமே சத்திர சிகிச்சையை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது. இதனால் எமது சேவையை முழுமையாக வழங்க முடியாதுள்ளது. இருந்த போதிலும், இதுவரையில் நாம் 65 திறந்த இருதய சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளோம். ஆனால் 850 இற்கும் அதிகமானோர் சத்திர சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தனியார் வைத்திசாலைக்குச் சென்று சிகிச்சை பெற முடியாத ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாரந்தம் மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைகளின் எண்ணிக்கையை விட காத்திருப்போர் பட்டியலில் இணைந்து கொள்வோரின் எண்ணிக்கை கூடுதலாகவே உள்ளது. ஆகவே இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை விஸ்தரிப்பதற்கும், எமது சேவையை முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்கும் ஒத்துழைப்பு நல்குமாறு அரசியல் பிரமுகர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றேன்.

நிமிர்வு 2018 ஒக்டோபர் இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.